Enable Javscript for better performance
பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு- Dinamani

சுடச்சுட

  

  பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு

  By மனத்துக்கினியான்  |   Published on : 20th September 2012 06:57 AM  |   அ+அ அ-   |    |  

  p2

  நாங்குனேரி  ஸ்ரீதோத்தாத்ரிநாதப் பெருமாள் திருக்கோயில்

   மது, கைடபன்... இரு அரக்கர்களை மகாவிஷ்ணு அழித்தார். அரக்கர்களின் துர்நாற்றம் பூமி எங்கும் வீசியது. தூய்மையை இழந்து வருந்திய பூமாதேவி, இத்தலத்தில் தவமிருந்து, மகாவிஷ்ணுவின் அருள் பெற்றாள். மாசு கழுவப்பெற்றாய் என்று சொல்லி, வைகுண்டத்தில் வீற்றிருப்பது போலவே இங்கும் வைகுண்ட விமானத்தில் ஆனந்த மயமாக பூமாதேவிக்குக் காட்சி கொடுத்தார் பெருமாள். இந்த தோத்தாத்ரி பெருமானின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், நாரஸிம்ஹ புராணம் ஆகியவை கூறுகின்றன. தோத்தாத்ரி, ஸ்ரீவரமங்கை ஆகியோரின் பெருமைகளை சிவபெருமானின் திருவாயால் கூறக்கேட்ட நாரதர், வைகுந்தநாதைனை இங்கேயே கண்டாராம்.

   திருவரமங்கை, திருவானமாமலை, தோதாத்ரி என்றெல்லாம் அழைக்கப்பெறும் இத்தலத்தில் ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் கோயில் கொண்டுள்ளார். ஆதிசேஷன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றமையால் நாகணைசேரி என்றும், அழகிய மரங்களும் மலையும் சூழ்ந்த இடமானபடியால் வானமாமலை என்றும், இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்குநேரி என்றும் இத்தலத்துக்குப் பெயர்கள் ஏற்பட்டுள்ளன.

   ஸ்ரீதோத்தாத்ரிப் பெருமானுக்காகவே வரமங்கையாக வளர்ந்த மகாலட்சுமி, அவரைத் திருக்கல்யாணம் புரிந்துகொண்டார். எனவே, இந்தத் தலம் ஸ்ரீவரமங்கை எனப்படுகிறது. ஆழ்வாரும் இந்த நகரை ஸ்ரீவரமங்கைநகராகவே போற்றிப் பாடுகிறார்.

   ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, சாளக்கிராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரிநாத் மற்றும் நாங்குநேரி ஆகிய எட்டு தலங்கள் ஸ்ரீவிஷ்ணுவின் சுயம்புத் தலங்கள் என்று புகழ்பெற்றவை. இதில் நாங்குனேரி 108 வைணவத் திருத்தலங்களில் மிக முக்கியமான தலம்.

   இங்கே உள்ள தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. ஒரு முறை சிந்து மன்னர் ஒருவர் காட்டில் வேட்டையாடப் போகும் போது அவருக்கு பசி எடுத்தது. அப்போது குஸôசன ரிஷியின் ஆஸ்ரமத்துக்குள் புகுந்த அவர் உண்டு திரும்பினார். ஆஸ்ரமத்துக்கு திரும்பிவந்த ரிஷி, இதனையறிந்து கோபம் கொண்டு அந்த மன்னரை நாயாகும்படி சபித்தார். அந்த நாயை காவலுக்காக வைத்துக் கொண்டார் ஒரு வழிப்போக்கர். பல்வேறு இடங்களுக்கும் சுற்றிய நாய், இறுதியில், இந்தத் தலத்தில் உள்ள சேற்றுத்தாமரைத் தீர்த்ததில் மூழ்கி எழுந்ததும், சாபம் நீங்கப் பெற்று தெய்வீகப் பேரொளியுடன் மனித உருப் பெற்றது.

   சர்வரோக நிவாரணத் தைலம்: ஒருமுறை கார்ய மகாராஜா குழந்தை இல்லாத குறை போக்க திருக்குறுங்குடிப் பெருமாளான நம்பியிடம் வேண்டிக் கொண்டார். பெருமாள் அவருக்கு நாங்குநேரியைக் காட்டிக் கொடுத்து பூஜிக்குமாறு வழிகாட்டினார். மன்னரும் இங்கே வந்து சுயம்பு ரூபப் பெருமானை அமைக்க நிலத்தைத் தோண்டியபோது, பெருமான் விக்ரஹத்தின் நெற்றியில் மண்வெட்டி பட்டு ரத்தம் வடிந்தது. பதைபதைத்த மன்னருக்கு, பெருமாள் "எனக்கு தைலக் காப்பிட்டு திருமஞ்சனம் செய். அந்த எண்ணெய்யை திறந்த கிணற்றிலே கொட்டிவிடு' என்றார். அவ்வாறு செய்த மன்னருக்கு புத்திரப் பேறு கிட்டியது. இதை அடுத்து, எண்ணெய்க் காப்பிட்டு திருமஞ்சனம் செய்வது வழக்கத்துக்கு வந்தது.

   அதன்படி, இங்கே பெருமாளுக்கு தினமும் தைலத் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனம் ஆறு படி நல்லெண்ணெயுடன் சந்தனத் தைலமும் கலந்து செய்யப்படுகிறது. இந்தத் திருமஞ்சனத் தைலம் அருகிலுள்ள 25 அடி ஆழமுள்ள எண்ணெய்க் கிணற்றில் ஊற்றப்படுகிறது. உற்ஸவ நாட்களில் 112 படி தைலக் காப்பு செய்யப்படுகிறது. இந்த நாழிக் கிணற்றில் உள்ள தைலம் தீராத சரும வியாதிகளைத் தீர்க்கும். தோல் நோய்கள் மட்டுமல்லாமல், வயிற்றுப்புண், குடல் புண்களையும் இந்தத் தைலம் போக்கும் என்பர். இத்தைலத்தின் மகிமையை சர்வரோக நிவாரணி என அகத்தியர் தனது மருத்துவக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார் என்பர்.

   இங்கே பெருமானுக்கு சேவை செய்வதற்காகவே தங்கள் வாழ்க்கையை மறுத்து பெருமாளைத் தொழுதனர் ஊர்வசியும் திலோத்தமையும். அவர்களின் தவத்துக்கு இரங்கிய பெருமாள், இருவருக்கும் நல்ல நிலையை அளித்து, தன்னைக் குளிர்விக்கும்படி இருபுறம் வெண்சாமரம் வீசும் மங்கையராக அமர்த்தினார் என்கிறது தலபுராணம்.

   இக்கோயிலில் ஸ்ரீ வானமாமலைப் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்புரிகிறார். தன் ஒரு கையை பாதத்தை நோக்கியபடி வைத்து, தன் பாதத்தில் சரணடைபவனுக்கு தன் மடியில் இடம் உண்டு என்பது போல் ஒரு கையை மடியில் வைத்துள்ளார். தாயார்- ஸ்ரீ வரமங்கை நாச்சியார். உற்ஸவர் தெய்வநாயகப் பெருமாள். ஸ்ரீதேவி, பூதேவி, கோதா சமேதராக பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ளார். இதில் ஸ்ரீ வரமங்கைத் தாயாரும் உண்டு.

   இந்த ஆலயத்தை அடுத்து ஓர் ஏரி உள்ளது. ஆலயக் கருவறையும் அதனுள்ளே இருக்கிறது. ஏரிக்குள் நீர் நிறைந்தால் கருவறையைச் சுற்றியும் தண்ணீர் நிறைந்தே காணப்படும்.

   இத்தலத்துப் பெருமாள் இந்திரன், பிரம்மா, உரோமச முனிவர், பிருகு மகரிஷி, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு காட்சி தந்தவர் என்பதால், கர்ப்பகிரகத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, பெரிய திருவடி சூரியன், சந்திரன், சாமரங்கள் வீசும் ஊர்வசி, திலோத்தமையுடன் பிருகு, மார்க்கண்டேயர், விஷ்வக்சேனரும் சுதைச் சிற்பமாக உள்ளனர்.

   நம்மாழ்வார் மிகவும் உகந்து தொழுத பிரான் இவர். இங்கே நம்மாழ்வாருக்கு சந்நிதி இல்லை. ஆனால் அவரது திருவுருவம் பெருமாளின் சடாரியில் உள்ளது. எனவே, இத்தலத்தில் நம்மாழ்வாரே வந்து நம்மை ஆசீர்வதிப்பதாக ஐதீகம்.

   நம்மாழ்வார் இந்தப் பெருமாளை, "புல்லின் வாய் பிளந்தாய் மறுத்து இடை போயினாய் எருது ஏழ் அடர்த்த என் கள்ள மாயவனே கருமாணிக்கச் சுடரே தெள்ளியார் திரு நான்மறைகள் வள்ளலார்மலி தன சிரீவர மங்கை உள் இருந்த எந்தாய், அருளாய் உய்யமாறு எனக்கே' என்று பாடினார்.

   இத்தலத்தில் கருடாழ்வார் எந்த நேரமும் புறப்படத் தயாராக இருக்கும் கோலத்தில் திருமாலுக்காக நிற்கிறார். ஆதிசேஷனுக்கு அடுத்து, கருடனுக்கு வரமளித்ததும் இத்தலத்தில்தான். இங்கே மணவாள மாமுனிகளால் நிறுவப்பட்ட ஸ்ரீவானமாமலை ஜீயரின் தலைமை மடம் உள்ளது.

   இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ. தொலைவு. பேருந்து வசதி அதிகம். நெல்லையிலிருந்து திருக்குறுங்குடி வழியாகச் செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம்.

   கோயில் திறக்கும் நேரம்: காலை 7-12, மாலை 5-9

   தகவலுக்கு: 04635-250119

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai