பலன்தரும் பரிகாரத் தலம்: வயிற்று வலி தீர்க்கும் நாதர்

சிவபெருமானின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர் அந்தத் தம்பதியர். ஏழையராய் இருந்தாலும் இறைபக்தியிலும்
பலன்தரும் பரிகாரத் தலம்: வயிற்று வலி தீர்க்கும் நாதர்

சிவபெருமானின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தனர் அந்தத் தம்பதியர். ஏழையராய் இருந்தாலும் இறைபக்தியிலும் பூசையிலும் ஒரு குறைவும் வைத்ததில்லை. தங்கள் குலம் தழைக்க ஒரு மகவு வேண்டித் தொழுதனர் அந்தத் தம்பதியர். ஈசனும் அவர்களுக்கு அருள் புரிந்தார். சூல் கொண்டாள் அந்தப் பெண்.

ஆனால், அவளை அருகிருந்து கவனித்துக்கொள்ள ஆள் யாருமில்லை. பேறு காலம் நெருங்கியதும் தன் அன்னையை வருமாறு அழைத்திருந்தாள். மாதம் பத்து முடியும் நேரம்... ஆனால் அவள் தாயோ வரவில்லை. எனவே அவளே தன் தாயின் இருப்பிடம் நோக்கிச் சென்றாள். சிறிது தொலைவு சென்றிருப்பாள்.. அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அருகிலோ யாரும் இல்லை. தனியாளாய்த் தவிக்கும் நிலையில், ஈசன் நினைவே முழுதும் ஓங்கியது. "ஈசனே காப்பாய்' என்று கதறினாள். அவள் குரல் பெருமானுக்கு எட்டியது. பக்தையைக் காக்க ஓடிவந்த பரமசிவன், தாமே அவள் தாயாக உருக் கொண்டார். பக்தையின் பிரசவம் சுகமாக முடிந்தது. நீர் வேட்கையால் தவித்தாள் அந்தப் பெண். அதனைக் கண்ட ஈசன், விரல் நுனியால் பூமியைக் கீற, அங்கே நீர் ஊற்றுப் பெருக்கெடுத்தது. தாகம் தீரப் பருகுமாறு கூறிய ஈசன், "இதுவே உனக்கு மருந்து' என்று அருளினார். ஊற்று நீரை உட்கொண்டு தாகம் தணிந்த அந்தப் பெண், ஏறிட்டு நிமிர்ந்து பார்த்தாள்... அங்கே யாரையும் காணவில்லை. ஆச்சரியத்தால் அகல விழித்து அங்கும் இங்கும் தேடிப் பார்த்தாள். தொலைவில் அவளின் தாய் ஓடோடி வந்து கொண்டிருந்தாள். அவளை நெருங்கியதும், பிரசவம் ஆகி குழந்தையின் அழுகுரல் கேட்டு ஆச்சரியப்பட்டாள். எப்படி இது? யார் வந்து இதைச் செய்தது என்று ஆச்சரியப்பட்டபோது, சிவபெருமான் அன்னை சிவகாமியுடன் காளை வாகனத்தில் தோன்றிக் காட்சி தந்து, "உன் பக்தியால் கட்டுண்டு யாமே பிரசவம் பார்க்க வந்தோம்' என்றார்.

பெருமானை வணங்கிய பெண்ணிடம், "உம் தவத்துக்கு மெச்சி யாம் பிரசவம் பார்த்தோம். உன் தாகம் தீர்த்த இந்த தீர்த்தம் காயம் தீர்க்கவும் பயன்பட்டது. எனவே இது காயக்குடியாறு எனப்படட்டும். இதில் மூழ்கியெழுந்து என்னை வழிபடுபவர்க்கு சுகபோக வாழ்வு நிச்சயம்' என்று அருள் புரிந்து மறைந்தார்.

அது முதல் இந்தத் தலத்தில் வைத்தியநாதப் பெருமானை வணங்கி, பயம் தொலைந்து, நோய் நீங்கி, சுகம் பல பெற்று வருகின்றனர் பக்தர்கள்.

மதுரையைச் சேர்ந்த வணிகர்கள், இந்த வழியாகத்தான் மலை தேசமான கேரள நாட்டுக்கு பயணப்பட வேண்டியிருந்தது. இங்கிருந்து முத்து, துணி மணி, ஆடை ஆபரணங்களை அங்கே விற்று, அங்கிருந்து மலை மிளகு, வாசனைப் பொருள்களை வாங்கி வந்து அவர்கள் வியாபாரம் செய்து வந்தனர். ஒரு முறை வண்டி நிறைய மிளகு மூட்டைகளைச் சுமந்து வந்தனர். மதுரைக்குள் நுழைய அதற்கான கப்பம் செலுத்தாமல், "இது உளுந்து மூட்டைதான்.. உள்ளூரில் விளைந்தது' என்று ஏமாற்றிச் சென்றனர். மதுரை சென்று பார்த்தபோது, உண்மையில் மிளகு மூட்டைகள் எல்லாம் உளுந்து மூட்டைகளாகவே மாறியிருந்தன. பதறிப் போன வணிகர்கள், மதுரையம்பதி சொக்கநாதரிடம் முறையிட்டு அழுதனர். பெருமானோ, இந்தத் தலத்தின் வைத்தியநாத சுவாமியிடத்தே முறையிடும்படி கூறினார். அதன்படி, வைத்தியநாத சுவாமியிடம் முறையிட்டு தங்கள் பாபம் போக்கிக் கொண்டனர்.

இவ்விதமாக சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்களில் 24 திருவிளையாடல்களை இந்தத் தலத்தில் வைத்தியநாத சுவாமி நிகழ்த்தியிருக்கிறார் என்பர்.

அதில் முக்கியமான ஒன்றாக ஆடல், பாடல் கலைகளில் வல்லவர்களான இருவர் பெருமானின் திருமுன் ஆடிப்பாடி இறைத் தொண்டு புரிந்தனராம். அவர்களின் திருத் தொண்டுக்கு மகிழ்ந்த இறைவன் அவர்களுக்கு பொன்னும் பொருளும் அளித்து, இருக்க வீடும் கட்டித் தரும்படி பணித்தாராம். இவ்வாறு தம்மைத் தொழுத இருவருக்கு பொருளொடு வீடும் அளிக்க பெருமான் திருவிளையாடல் நடத்தியதால் இந்தத் தலத்துக்கு மடவாள் வளாகம் என்றும் பெயர் ஏற்பட்டது. மடவார் எனில் பெண்கள். வளாகம் என்பது இடம். பெண்கள் இருப்பிடம் கொண்டதால் இப்படிப் பெயர். இன்றும் இந்தப் பெயரிட்டே அழைக்கின்றனர்.

இந்தத் தலத்தில் சுவாமியை பிரம்மன், இந்திரன், தேவர்கள், சூரியன், சந்திரன், துர்வாசர், அகத்தியர் முதலியோர் வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது. மேலும், இங்கே வந்து வழிபடுபவர்களுக்கு சிவபெருமான் வீடுபேற்றை அருள்வதால் கைலாயத்துக்குச் சமமாக இந்தத் தலம் போற்றப்படுகிறது.

ஒரு முறை திருமலை நாயக்க மன்னருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. என்னென்னவோ செய்து பார்த்தும் வலி மட்டும் போகவில்லை. திருமலை நாயக்கருக்கு இந்த வைத்தியநாதப் பெருமானின் மகிமையைச் சொன்னார்கள். உடனே மதுரையை விட்டு தந்தப் பல்லக்கில் கிளம்பிய மன்னர், இங்கே வந்து தங்கி, இந்த தீர்த்தத்தில் குளித்து முடித்து 48 நாட்கள் விரதமிருந்து பெருமானை பூசித்தாராம். அவருக்கு வயிற்று வலியும் குணமானது. மகிழ்ச்சி அடைந்த மன்னர், தம் தந்தப் பல்லக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, நடந்தே மதுரைக்குச் சென்றாராம். பின்னர் மதுரை மீனாட்சி சொக்கநாதருக்கு அமைத்த திருமண மண்டபம் போல், மடவார் வளாகம் சிவகாமி சமேத வைத்தியநாதருக்கும் நாடக சாலை எனப்படும் மணிமண்டபத்தை அமைத்தாராம்.

வைத்தியநாத சுவாமியின் பேரில் அளவு கடந்த பக்தி திருமலை நாயக்கருக்கு. அடிக்கடி வந்து பெருமானை தரிசித்துச் சென்றாலும், பெருமானுக்கு உச்சி கால பூஜை சிறப்பாக நடைபெற்ற பிறகே தாம் உணவு உண்ண உறுதி கொண்டார் மன்னர். அதனால், மடவார் வளாகம் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரையம்பதி வரை தொடர்ச்சியாக கல்மண்டபங்கள் வைத்து, அவற்றில் இருந்து வரிசையாக பூஜை முடிந்த முரசு ஒலி கேட்ட பின்னே உணவு கொள்வாராம்.

இங்கே வைத்தியநாத சுவாமி நோய் தீர்க்கும் பெருமான் என்பதால், ஆண்டுதோறும் வைக்கத்தஷ்டமி எனப்படும் மஹா அஷ்டமி அன்று பக்தர்கள், சாப்பிட்டு முடித்த இலைமீது பகவத் பிரசாதமாக எண்ணி தங்கள் உடல் படும்படி உருண்டு அங்கப் பிரதட்சினம் செய்வது சிறப்பாக நடக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய சைவத் தலமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மற்றும் பங்குனி மாதப் பிறப்பு அன்று காலை சூரியனின் கதிர்கள் மூலவர் மீது பட்டு சூரிய பூஜை சிறப்பாக நடக்கின்றது

சந்நிதி திறக்கும் நேரம்: காலை 6-12 வரை, மாலை 4-8 வரை

பிரார்த்தனை: வயிற்று வலி தீர்க்கும் வைத்தியநாதர் என்பதால் வயிறு சம்பந்தமான நோய்கள் மற்றும் கர்ப்பம் சம்பந்தமான நோய்களுக்கு இங்கே பெருமானையும் அம்பிகையையும் வேண்டிக் கொள்கிறார்கள்.

இருப்பிடம் : ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவு.

தகவலுக்கு: 04563-261262

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com