
தோல் நோய் தீர்க்கும் தலம் - நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அருளும் இறைவன் - நான்கு வகை பைரவர்கள் வீற்றிருக்கும் கோயில் - சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர் எனப் பலரும் திருப்பணி செய்த ஆலயம் - தொண்டை நாட்டின் வைப்புத் தலம் - திருப்புகழ் பாடல் பெற்ற தலம் எனப் பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் அமைந்துள்ள திருவெண்காட்டீ சுவரர் ஆலயம்.
மதுராந்தகம்: இப்பகுதி மந்தாரை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. அதில் அமர்ந்து இளைப்பாறிய வெண்மைக் கொக்குகளால் இந்தப் பகுதி வெண்மயமான காடாக தோற்றமளித்தது. எனவே, இப்பகுதியை வெண்காடு என்றும், இறைவனை வெண்காட்டு ஈஸ்வரர் என்றும் அழைத்தனர். இப்பகுதி சமஸ்கிருதத்தில் ஸ்வேதாரண்யம் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் இறைவன் ஸ்வேதாரண்யேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
முதலாம் ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகன் ( கி.பி.907-955) மதுரை மீது படையெடுத்து பாண்டிய மன்னனை வென்றதால், "மதுரை கொண்ட கோப்பரகேசரி' எனப் புகழப்பட்டான். மதுரையை வெற்றி கொண்டதால் மதுராந்தகன் என்றும் போற்றப்பட்டான். (மதுரை+அந்தகன் = மதுராந்தகன் ). அந்தகன் என்பதற்கு எமனைப் போன்றவன் எனப் பொருள். இதே போல இப்பகுதி, அந்தணர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டதால், இவ்வூர் மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சோழமன்னன் முதலாம் பராந்தகன், இரண்டாம் பராந்தகன், உத்தம சோழன், முதலாம் இராஜேந்திரன், வீரராஜேந்திரன் ஆகியோர் மதுராந்தகன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருந்தனர். முதலாம் பராந்தகன் (கி.பி. 914) மதுராந்தகத்தை உருவாக்கினான் என்றும், கண்டராதித்த சோழனால் ( கி.பி.964) இக்கோயில் கட்டப்பெற்றது என்றும் ஆய்வாளர் கருதுகின்றனர். பராந்தகச்சேரி, மதுராந்தகச்சேரி, கோதண்டராமச்சேரி, திரிபுவன மாதேவிச்சேரி, சிங்களாந்தச்சேரி, இருமுடிச்சோழச்சேரி, பள்ளிச்சேரி, பரகேசரிச்சேரி, சூரகுளாமணிச்சேரி, வீரசோழச்சேரி என பத்து சேரிகளின் ஒருங்கிணைப்பே மதுராந்தகம் ஊராகும்.
கல்வெட்டுகளில் இவ்வூர் ஜெயம் கொண்ட சோழ மண்டலத்து களத்தூர் கோட்டம், தனியூர், மதுராந்தகச் சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகள்: இவ்வாலயத்தில் 27 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக இவ்வாலயத்தில், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள் என பலரும் திருப்பணி செய்துள்ளனர் என அறியமுடிகிறது.
தொடக்க கால கல்வெட்டுகளில் ஸ்வேதாரண்யேஸ்வரர் என அழைக்கப்பட்ட இக்கோயிலுக்கு, இரண்டாம் பராந்தகன் (கி.பி. 969), முதலாம் ராஜராஜன்( கி.பி. 989), முதலாம் குலோத்துங்கன்( கி.பி. 1076), விக்கிரமசோழன் ( கி.பி. 1133), இரண்டாம் இராஜராஜன் ( கி.பி. 1155), மூன்றாம் குலோத்துங்கன் ( கி.பி. 1194), மூன்றாம் இராஜராஜன் (கி.பி. 1230), கோனேரின்மை கொண்டான்( கி.பி. 12 ஆம் நூற்றாண்டு), முதலாம் குலசேகரப் பாண்டியன் ( கி.பி. 1308), விஜயநகர மன்னர் தேவராயன் ( கி.பி. 1448), வேங்கடன் ( கி.பி. 1630) எனப் பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். இக்கல்வெட்டுகள் மூலம் இக்கோயிலின் முக்கியத்துவத்தையும், இதற்கு வழங்கப்பட்ட கொடைகளையும் விரிவாக அறியமுடிகிறது.
ஆலய அமைப்பு: ஐந்து நிலை இராஜ கோபுரமும், அதன் எதிரே அழகிய திருக்குளமும் எழிலாக அமைந்துள்ளன. இராஜகோபுரத்திற்குள் நுழைந்தால், கோபுர விநாயகர், பலிபீடம், கொடிமரம், நந்தி தேவர் என வழிபட்டு சென்றதும், வெளிச் சுற்றில் தென்மேற்கு மூலையில் நடன கணபதியை வலம் வந்து உள்ளே நுழைந்தால், மீனாட்சி அம்மனை தனிச் சந்நிதியில் வணங்கலாம்.மண்டபத்திற்குள்ளே கடந்ததும் துவாரபாலர்கள் நம்மை வரவேற்கின்றனர். உள்திருச்சுற்றில் நால்வர், விநாயகர், தட்சிணாமூர்த்தி, விநாயகப் பெருமான், வள்ளி தெய்வயானை சமேத விஜய ஆறுமுகன், திருமால், பிரம்மா, சண்டீசுவரர், துர்க்கை ஆகியோர் அமைந்துள்ளனர். சண்டீசர் சந்நிதியில் பல்லவர் கால சோம கணபதி, சோமாஸ்கந்தர் ஆகியோர் உள்ளனர்.
திருவெண்காட்டீசர்: பரிகார தேவதைகளை வணங்கி உள்ளே சென்றால் திருவெண்காட்டீசர் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார். ஸ்வேதாரண்யேஸ்வரர், வேதாரண்யேஸ்வரர், திருவெண்காடுடைய மகாதேவர், திருவெண்காடுடைய நாயனார் என்ற பெயர்களும் மன்னர்கள் காலத்தில் வழங்கப்பட்டன. கருவறை மண்டபத்தில் நடராஜர், சிவகாமி அம்மை காட்சி தர, பல்வேறு உற்ஸவ மூர்த்திகள் உடன் காட்சி தருகின்றனர்.
மீனாட்சி அம்மை: இறைவியின் பெயர் மீனாட்சியம்மை என்பது. அன்னை பெரிய வடிவில் சர்வ லட்சணங்களுடன் அழகே உருவாக அருள் வழங்குகின்றாள்.
விழாக்கள்: நால்வர் குரு பூஜை, சித்ரா பௌர்ணமி, ஆடிப் பூரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், ஆருத்திரா, தைப்பூசம், மாசிமகம், பிரதோஷம் என அனைத்து விழாக்களும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.
தலமரம்: வெண்கொக்கு மந்தாரை இத்தலத்து தலமரமாகும். திருக்கோயில் நேர் எதிரே அமைந்துள்ள விடஹர தீர்த்தம் தல தீர்த்தமாகும். இத்திருக்குளமே பாண்டிய மன்னனின் தோல் நோயைத் தீர்த்த குளமாகும்.
அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில், மதுராந்தகம் நகரின் அங்கமான கடப்பேரி என்ற பகுதியில் அமைந்துள்ளது. மதுராந்தகம் - சூணாம்பேடு சாலையில் கிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில், அரசு மருத்துவமனைக்கு அருகில் இத்திருக்கோயில் உள்ளது. மதுராந்தகம் இரயில் நிலையத்திற்கு வெகு அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணி வரையிலும்.இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அவசியம் தரிசித்து பலன் பெற வேண்டிய தலம், மதுராந்தகம் திருவெண்காடீசர் திருக்கோயில்.
நால்வகை பைரவர்கள்
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு இங்கு நான்குவிதமான பைரவர்கள் காட்சி தருகின்றனர். காலபைரவர், உன்மத்த பைவரர், அசிதாங்க பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என நால்வர் எழுந்தருளியுள்ளனர். பிணியில் வாடுவோரின் குறை தீர்ப்பது, தீராத சொத்து வழக்கு இவற்றிற்கு கண் கண்ட தெய்வமாக இவர்கள் விளங்குகின்றனர்.
திருப்புகழ் முருகன்: இத்தலத்து முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர், திருப்புகழ் பாடியுள்ளார் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பு. மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலம் அமர்ந்த பெருமானே என இத்தலத்து முருகனைப் பாடிப் புகழ்கின்றார். பாண்டீசுவர நாயனாரும், புவனாபதி நாச்சியாரும்: மீனாட்சியம்மன் சந்நிதிக்கு அருகே பாண்டீஸ்வரர் என்ற பெயருடன் ஒரு சிவலிங்கத் திருமேனியும், அருகே புவனாம்பாள் என்ற திருப்பெயரில் அம்மனும் அருகருகே அமைந்துள்ளனர். இவற்றைப் பாண்டிய மன்னன் ஒருவன் தன் தோல் நோய் குணமானதற்காக நன்றிக் கடனாக நிறுவினான் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. என்றாலும், முதலாம் குலசேகர பாண்டியனுக்காக கி.பி. 1308ஆம் ஆண்டு, கைக்கோல முதலி வகுப்பைச் சார்ந்த விரதமுடித்த பெருமாள் என்ற அடியார் இவற்றினை நிறுவியதாக ஆலயக் கல்வெட்டு கூறுகிறது. இருவருக்கும் பூஜைகள் நிகழ்த்திட நிலம் வாங்கி இறையிலியாக வழங்கிய செய்திகளையும் இக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.