பலன்தரும் பரிகாரத் தலம்

பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார்.
பலன்தரும் பரிகாரத் தலம்

கல்யாண வரம் கிடைக்கும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்!

பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார். அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும் வைத்துக் காப்பாற்றி, அடுத்த பிரஜோற்பத்தியின்போது அளித்தாராம். அத்தகைய பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது திருச்சேறை.
 ஒரு முறை கங்கை, காவிரி மற்றுமுள்ள ஆற்று நங்கையர் விந்திய மலையின் ஓர் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கந்தர்வன் ஒருவன் அவ்வழியாகப் போனான். நிமிட நேரம் அங்கே நின்ற அவன், அவர்களை வணங்கிச் சென்றான். அப்போது நதி நங்கையர் அனைவரும் கந்தர்வனிடம், அவன் யாரை வணங்கினான் என்று கேட்டனர். அதற்கு கங்கை மற்றும் காவிரியைக் கண்ணால் பார்த்துவிட்டு அவன் சென்றுவிட்டான். இப்போது, கங்கையும் காவிரியும் யார் புனிதமானவர் என்று போட்டியிட்டனர். இந்த விவகாரம் பிரம்மாவிடம் சென்றது. அவர், ""நான் நித்திய பூஜைக்கு ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தைத் தொட்டு வரும் கங்கை நீரையே பயன்படுத்துகிறேன். எனவே, கங்கையே புனிதமானவள், உயர்ந்தவள்'' என்றார். இதனால், காவிரிக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. தனக்கும் அதே கவுரவம் வேண்டும் என்று எண்ணினாள் காவிரி. பெருமாளின் பாதம் தொட்டு வருவதால்தானே கங்கைக்குப் புண்ணியம். அதுபோல் தான் பெற விரும்பினாள் காவிரி. பெருமாளை நோக்கித் தவம் புரிய எண்ணினாள்.
 இந்த மனக்கவலையுடன் பெருமாளிடம் வந்தாள் காவிரி அன்னை. திருச்சேறைத் தலத்தில், சார புஷ்கரிணியில் ஓர் அரச மரத்தடியில் தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய ஸ்ரீமந் நாராயணர், ஒரு குழந்தையின் வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார். ஆனால், காவிரியோ தனக்கு இதைக் காட்டிலும் பெருமை வேண்டும் என்றாள். எனவே காவிரியின் வேண்டுகோளை ஏற்று சங்கு சக்ரதாரியாக, கருட வாகனத்தில் ஏறி, தேவியர் ஐவருடன் காட்சி தந்தார் பெருமாள். மேலும், காவிரியிடம் வேண்டும் வரம் கேட்டுப் பெறக் கூறினார். ஐந்து லட்சுமியருடன் அழகு தரிசனம் பெற்ற காவிரித் தாயோ, தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கே தரிசனம் தர வேண்டும். மேலும், கங்கையிலும் புனிதமான மேன்மையை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டினாள். ஆயிரம் வருட தவத்துக்குப் பிறகு, விந்திய மலைக்குத் தெற்கே கங்கைக்கு சமமான அந்தஸ்து காவிரிக்கும் கிடைத்தது. மேலும், காவிரி அன்னைக்குக் காட்சி தந்த பெருமாள் திருச்சேறையில் அவ்வண்ணமே எழுந்தருளினார். கருவறையில் சாரநாதப் பெருமாளுக்கு இடப்புறத்தில் காவிரித்தாய் அமர்ந்து கொண்டார்.
 ஸ்ரீமந் நாராயணன் கோவில் கொண்ட புகழ்பெற்ற வைணவத் திருப்பதிகள் 108ல் இந்தத் தலமும் ஒன்று. சார என்ற சொல்லுக்கு, ஆன்மா, சாரம் என்று பொருள். பெருமாளுக்கு பக்தர்கள் தங்கள் ஆன்மாவை அர்ப்பணிப்பதால் பெருமாளுக்கு ஆன்மாக்களின் நாதனாக, சாரநாதனாகப் பெயர் ஏற்பட்டது. இதுவும் சார úக்ஷத்ரம் என்று பெயர் பெற்றது. சாரநாதன் என்ற திருப்பெயருடன் திகழும் பெருமாள், சாரநாயகி என்ற திருப் பெயருடன் திகழும் தாயார், சார விமானம் என்ற பெயருடன் விமானம், சார புஷ்கரிணி என்ற பெயருடன் தீர்த்தம்.. எல்லாம் சாரம்தான். முற்காலத்தில் இந்தத் தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. அதுமட்டுமா... இங்குள்ள சிவபெருமானையும் சார பரமேஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்கள் அழைக்கின்றனர். இவரது கோயிலை உடையார் கோவில் என்கின்றனர். அம்பாளின் திருநாமம் ஞானவல்லி என்பது.
 சாரநாதப் பெருமாள் ஆலயத்தின் சிறப்பம்சம், இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி என லட்சுமியின் அம்சமாய் ஐந்து தேவியருடன் அருள் வழங்குகிறார் என்பது.
 கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் சாரநாதப் பெருமாள். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். சுமார் 90 அடி உயரத்தில் திகழ்கிறது. கோயிலுக்கு எதிரே உள்ள சாரபுஷ்கரிணி மேற்குக் கரையில், அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீனிவாசப் பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வான், அனுமத் சமேத ஸ்ரீராமர், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மிணி, நரசிம்மர், பாலசாரநாதர் என சந்நிதிகள் உள்ளன.கருவறையில் காவிரி மட்டுமல்லாது, மார்க்கண்டே மகரிஷியும் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர் இந்தத் தலத்தில் முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.
 இந்தப் பெருமாள் வரலாற்று காலத்திலும் முக்கியத்துவம் பெற்றவர். நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், வைணவத் தலங்கள் பலவற்றையும் புனரமைத்து வழிபட்டு வந்தனர். மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற்று வந்தது. மன்னரின் ஆணைப்படி மன்னார்குடி கோயில் திருப்பணிக்காக இந்த ஊரின் வழியே கற்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன. ஆனால், மன்னனின் அமைச்சருக்கு இந்தப் பெருமாளின் மீது அளவற்ற பக்தி. சாரநாதப் பெருமாளின் திருப்பணிக்கு தேவைப்படும் என்று வண்டிக்கு ஒரு கல் வீதம் அமைச்சர் நரசபூபாலன் இங்கே இறக்கிவைத்தான். ஆனால் இந்தச் செய்தி மன்னனின் காதுகளை எட்டியது. அவனுக்குக் கோபம் தலைக்கேற, இங்கே வந்தான். இதனால் மிகவும் பயந்து போன அமைச்சரோ, சாரநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டார். மன்னன் வந்த அதே நேரம் சாரநாதப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சி தந்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த மன்னன், இந்தக் கோவிலுக்கும் திருப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றினான் என்பர். இந்தப் பெருமாளை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். ""தண்சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்புதானே'' என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
 திருவிழா: இந்தத் தலத்தில் சிறப்புத் திருவிழா தைப்பூச விழாதான். இது, பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்த் திருவிழா. இங்கே காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்தது, ஓர் தை மாத, பூச நட்சத்திரத்தில்தானாம். இது, வியாழன் சஞ்சரித்த காலம் என்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாத பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இங்குள்ள சார புஷ்கரணியில் நீராடினால், மகாமாகத்தில் நீராடியதற்கு ஒப்பாகும் என்பர். எனவே, இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
 திருமணத் தலம்: இங்கே பெருமாள் கல்யாண வரம் தரும் பெருமாளாக, ஐந்து லட்சுமியருடன் திகழ்கிறார். எனவே, புதன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கல்யாண உற்ஸவம் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர், தம்பதியாக கோயிலுக்கு வந்து, பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாத்துகின்றனர்.
 பாபம் போக்கும் பெருமாள்: இங்கே பெருமாள் பாபத்தைப் போக்கி, புண்ணியத்தைக் கூட்டுகிறார். காவிரித் தாய்க்கு புண்ணிய மகிமையை அளித்தவர் என்பதால், இங்கே பெருமாளை வழிபட்டாலே, காவிரியில் நூறு முறை முங்கி எழுந்த புண்ணியம் கைகூடுகிறது. கும்பகோணம் அருகே உள்ளது திருச்சேறை.
 சந்நிதி திறக்கும் நேரம்:காலை 6-11 மாலை 5-8 வரை.
 தொடர்புக்கு: 0435-2468001

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com