Enable Javscript for better performance
மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை!- Dinamani

சுடச்சுட

  

  மாங்கல்ய பலம் அருளும் மங்களாம்பிகை!

  By - மனத்துக்கினியான்  |   Published on : 24th January 2013 01:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vm11

  முதலாம் குலோத்துங்க சோழனின் அமைச்சராக இருந்தார் அலைவாணர். அது பதினோராம் நூற்றாண்டு. சிவபக்தியில் திளைத்த அமைச்சர் ஒரு முறை தான் சுயம்பு லிங்கமாகக் கண்டெடுத்த பெருமானுக்காக கோயில் எழுப்ப எண்ணினார். அதற்காக வரிப்பணத்தைச் செலவு செய்தார். மன்னனிடம் கேட்டால் பிரச்னையாகலாம் என்று எண்ணி, குலோத்துங்கன் அனுமதியின்றி தாமாகவே கோயிலைக் கட்டத் தொடங்கினார். மன்னனுக்கு செய்தி தெரிந்தது. மன்னன் கோயிலைக் கட்டலாம்... அமைச்சன் ஒருவர் கோயிலை எழுப்புவதாவது...! அமைச்சனை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டான்.

  அமைச்சனுக்கு இவ்வாறு நடக்கும் என்று முன்னமேயே தெரிந்திருந்ததால், தனது உடலை தாம் கோயில் கட்டும் ஊரிலேயே தகனம் செய்யுமாறு கோரியிருந்தான். அதன்படி அவனது உடலைத் திருமங்கலக்குடிக்கு எடுத்து வந்தனர். அதே நேரம், திருமங்கலக்குடி ஈசனின் கோயிலுக்கு வந்த அமைச்சனின் மனைவி, தனது கணவன் உயிருடன் வரவேண்டும்;  தனக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று அம்பிகையிடம் பிரார்த்தனை செய்தார். "உன் பிரார்த்தனை நிறைவேறும்' என்று அம்பிகையின் அசரீரி வாக்கு கேட்டது.

  ஊர் எல்லையில் அமைச்சனின் உடல் வந்தபோது, திடீரென அமைச்சனுக்கு உயிர் வந்தது. சுமந்து வந்தவர்கள் திடுக்கிட்டனர். இது எவ்வாறு என்று அறியாமல் குழம்பித் தவித்தபோது, அமைச்சர் அலைவாணர் கோயிலுக்கு ஓடினார். அங்கே தன் மனைவியின் பிரார்த்தனை குறித்து அறிந்தார். சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த பெருமானைக் கட்டித் தழுவினார். அது முதல் பெருமான் அங்கே பிராணநாதேசுவரர் என்று அழைக்கப்பெற்றார். ஜீவநாயகனாகப் போற்றப் பெற்ற பெருமானின் அம்பிகை, அமைச்சனின் மனைவிக்கு மாங்கல்ய பலத்தை அருளியதால் மங்களாம்பிகை என்று போற்றப்பட்டார்.

  அதன்பின்னர், அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை அருள வேண்டும் என்று அமைச்சனும் அவன் மனைவியும் வேண்டிக் கொண்டபடி, இங்கே வந்து வழிபடும் பெண்களுக்கு அவ்வாறே அருள்புரிகிறார் மங்களாம்பிகை.

  புராண வரலாறு கொண்டது இந்தக் கோயில். ஒரு முறை காலவ முனிவருக்கு வரவிருந்த நோயை நவகிரகங்கள் தடுத்ததால், அந்நோய் கிரகங்களுக்குப் பீடிக்கும்படி பிரம்மா சாபம் கொடுத்தார். இதனால் வருத்தம் அடைந்த நவகிரங்கங்களும் இத்தலம் வந்து சுயம்பு லிங்க மூர்த்தியை நோக்கி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனராம். கிரகங்களின் தோஷம் போக்கியவராக, பெருமான் இங்கே அருள்பாலிக்கிறார்.

  கிரகங்கள் வழிபட்டதால், இங்கே நவகிரகத்துக்கு சந்நிதி இல்லை.

  ஆனால், சற்று தொலைவில்தான் நவகிரக நாயகன் சூரியனுக்கு உரிய தலமான சூரியனார் கோயில் அமைந்துள்ளது. எனவே பிராணநாதர் கோயிலே பிரதான கோயில் எனக் கொண்டு, கிரக தோஷமுள்ளவர்கள் முதலில் பிராணநாதரை வழிபட்டு, பிறகே சூரியனார் கோயிலில் வழிபட வேண்டும் என்று ஒரு நியமத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

  நவகிரகங்கள் தங்கள் சாபம் போக, எருக்க இலையில் தயிர் அன்னம் படைத்து நிவேதனம் செய்தனராம். அதன்படி, இங்கே ஞாயிற்றுக் கிழமைகளில் உச்சிகால பூஜையில் உப்பில்லாத தயிர் அன்னத்தை பெருமானுக்கு நிவேதனம் செய்து வழிபடுகின்றனர். பித்ரு தோஷ பரிகாரமாக பெருமானுக்கு தயிர் அன்னம் நிவேதனம் செய்யப்படுகிறது.

  இங்கே ஆவுடையாரைவிட உயர்ந்ததாக உள்ளது லிங்க மூர்த்தியின் பாணம். குறுமுனி அகத்தியர், இங்கே வந்து பெருமானின் பாணத்தின் மீது தன் கையை உயர்த்தி வைத்து மலர் தூவி பூஜை செய்ததாக தல புராணம் கூறுகிறது.

  இங்கே நடராஜர் சந்நிதியில் உள்ள மரகதலிங்கத்துக்குச் செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஊர் மங்கலக்குடி, அம்பாள் மங்களாம்பிகை, மங்கள விமானம், மங்கள தீர்த்தம், மங்கள விநாயகர் என மங்களமே உருவாக இருப்பதால் இது, பஞ்ச மங்கள úக்ஷத்திரம் எனப்படுகிறது.

  மங்களம் தரும் அம்பிகை: இந்த ஆலயத்தில் வரப்பிரசாதியாகத் திகழும் மங்களாம்பிகை தனி சந்நிதியில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்பிகையின் பெயரிலேயே இவ்வூருக்கு மங்கலக்குடி என்று பெயர். அம்பிகையின் வலது கையில் தாலிக் கொடி தொங்குகிறது. அம்பாளை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாகக் கொடுக்கின்றனர். பெண்களுக்கு நல்ல வரன் அமையவும், தீர்க்கசுமங்கலியாக வாழவும் அம்பிகையிடம் இருந்து பிரசாதமாக தாலிச் சரடு பெற்று அணிந்துகொள்கின்றனர்.

  இங்கே பிராகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்கள். பெருமானின் இரு கண்களாகத் திகழும் சூரிய, சந்திரர்களாக. பெருமானை குளிர்விக்க இவ்வாறு இருக்கின்றனர் என்பர். இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இங்கே பெருமான், காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி, பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். திருவாவடுதுறை ஆதீன மேற்பார்வையில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

  நவகிரக தோஷம் நீங்க, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம் கிடைக்க, எதிரிகள் பயம் நீங்க, திருட்டு பயத்தில் இருந்து விடுபட என பலவற்றுக்கும் இங்கே வழிபடுகிறார்கள். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களாம்பிகையை வழிபடும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம், கிரக தோஷங்கள் விலகி திருமணத் தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியம் உண்டாகும்.

  அம்மனுக்கு திருமாங்கல்யம், புடவை சாத்தி பெருமானுக்கு வஸ்திரம் படைத்து அபிஷேகம் செய்து வழிபட்டு, 5 சுமங்கலிப் பெண்களுக்கு துணிமணி, மஞ்சள் குங்குமம், பூ வெற்றிலை பாக்கு, சீப்பு, கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு, தட்சிணை வைத்துக் கொடுத்து ஆசி வாங்குவதை நேர்த்திக்கடனாகச் செய்கிறார்கள்.

  இருப்பிடம்: கும்பகோணம்-ஆடுதுறையில் இருந்து 3 கி.மீ., தொலைவு.

  சிறப்பு: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 38வது தலம்.

  திறக்கும் நேரம்: காலை 6.30-12.30,  மாலை 4-8.30 வரை.

  தை இரண்டாம் ஞாயிறு சந்தனக்காப்பு
  நவராத்திரி நேரங்களில் இங்கே கருவறையில் வீற்றிருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் எல்லாம். வஸ்திராபரணங்கள் இன்றி, சந்தனக்காப்பு மட்டும் சாத்தப்படுகிறது. அதிலேயே ஆபரண அலங்காரம் எல்லாம் செய்யப்படுகிறது. இந்தத் திருக்காட்சியைக் காணக் கண்கோடி வேண்டும். வருடந்தோறும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரத்தை அம்பிகைக்குச் செய்யலாமாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai