பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்

சோழ மன்னன் ராஜேந்திரன் என்பவன் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த காலம். ஒருநாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலை பகுதியில் வேட்டைக்காகச் சென்றான் ராஜேந்திரன்.

சோழ மன்னன் ராஜேந்திரன் என்பவன் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த காலம். ஒருநாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலை பகுதியில் வேட்டைக்காகச் சென்றான் ராஜேந்திரன்.

பல இடங்களில் சுற்றியும் விலங்குகள் ஏதும் அகப்படாத நிலையில், ஓர் இடத்தில் காட்டுப் பன்றி ஒன்றின் குரல் கேட்டான். அப்போது அது தன் குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.  தொலைவில் இருந்து அம்பு எய்தான். இலக்கை சரியாக எட்டிய அம்பு பட்டு தாய்ப் பன்றி மாண்டது. பாலுண்டு கொண்டிருந்த பன்றிக் குட்டிகள் பசியால் வாடிக் கதறின. அவற்றின் நிலை அவனுக்கு  இரக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளை நினைந்து மன்னிப்புக் கோரினான். அங்கே முருகப் பெருமான் தோன்றி, பன்றிகளுக்குப் பால் அளித்து, அவற்றின் பசியைப் போக்கினார்.

பன்றிகளைப் பசியால் துடிக்க வைத்த தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், முருகப் பெருமானின் கருணையை உணர்த்தவும், அங்கே ராஜேந்திரன் முருகனுக்காக ஒரு கோயிலை எழுப்பினான்.

இந்தக் கோயில் கங்கைக்குச் சமம் என்று கருதப்படும் வராக நதியின் கரையில் காசியைப் போன்ற புனிதத்தன்மையுடன் திகழ்கிறது. வராக நதியின் இரு மருங்கிலும் ஆண், பெண் மருத மரங்கள்  சிறப்புற விளங்குகின்றன. இந்த நதியை பிரம்ம தீர்த்தம் என புராணங்கள் கூறுகின்றன.

இங்கே முருகப் பெருமான் ஆறு முகங்கள் கொண்டு ஆறுமுகனாக வள்ளி - தெய்வானையுடன் கோயில் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே லிங்க ரூபமாக ராஜேந்திர சோழீஸ்வரர்,  தர்மஸம்வர்த்தனீ என்ற அறம் வளர்த்த நாயகி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சந்நிதிகள் தனித்தனிக் கொடி மரங்களுடன் திகழ்கின்றன. இந்தக் கோயிலில் தனித் தனி சந்நிதிகளில் சிவபெருமான்,  அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சுரதேவர், சப்த கன்னிகள், பைரவர்,  ராகு, கேது, மகாவிஷ்ணு ஆகியோர் அருள் புரிகின்றனர்.

இங்கே முருகப் பெருமானின் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கே மரணத்தை வென்றெடுத்த மிருத்யுஞ்சயரின்  சந்நிதியும் உள்ளது. எனவே, இங்கே அதிக அளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் எனப்படுவதால், இக்கோயில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்ற சிறப்பு பெயருடன் இங்கே அடையாளம் காட்டப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரிய  கோயிலாகவும் இது திகழ்கிறது. இந்தக் கோயிலில் மூலவர் சிவபெருமானாகத் திகழ்ந்தாலும், முருகன்தான் இங்கே பிரஸித்தம். எனவேதான் இதனை ராஜேந்திர சோழீஸ்வரர் என்று அழைப்பதைக்  காட்டிலும் பாலசுப்பிரமணியர் கோயில் என்றுதான் பக்தர்கள் அழைக்கின்றனர்.

பிரார்த்தனை: இங்கே தீர்த்தத்தில் நீராடி முருகனை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழா: சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசஷ்டி, திருக் கார்த்திகை, பங்குனி பிரமோற்ஸவம்.

திறக்கும் நேரம்: காலை 6-12 மணி, மாலை 4.30- 8 மணி வரை.

இருப்பிடம்: தேனி மாவட்டம் பெரியகுளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com