விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் பல்லிபாக்கம் என்ற கிராமம் உள்ளது. இவ்வூருக்குத் தென் கிழக்கில் பெருமுக்கல் என்ற புராணத்தலம் உண்டு. இது வால்மீகி மகரிஷியின் ஆஸ்ரமம் ஆகும். கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
இங்கு வாழ்ந்த ரிஷிகளில் ஒருவருக்கு குருவின் சாபமேற்பட்டு கௌளீ ரூபத்தை (பல்லி ரூபம்) அடைந்தார். இந்த ரிஷி தன் சாப விமோசனத்திற்காக குருவினிடம் வேண்டியபோது குருவானவர் இவ்வூருக்கு (அதாவது, பெருமுக்கல்லுக்கு) வடமேற்கு திசையில் அமைந்துள்ள பல்லிபாக்கம் சென்று அங்குள்ள ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் தவம் புரிந்து ஆராதனை செய்து வந்தால் சாபவிமோசனம் ஏற்படும் என்று கூரினார். குருவின் ஆசியுடன் உடனடியாக அந்த ரிஷி பல்லிபாக்கம் வந்து தவம் புரிந்தபடி ஈஸ்வரûனாயும் ஆராதித்து வந்தார். அதன் பலனாக் கௌளீ ரூபம் நீங்கி மீண்டும் தன் சுய ரூபத்தை அடைந்து வெகுகாலம் இங்கு வாழ்ந்து முக்தி அடைந்தார் என்பது வரலாறு. இந்த கௌளீஸ்வரபுரமே காலப்போக்கில் தமிழில் பல்லிபாக்கம் என மருவி அழைக்கப்படுகின்றது.
இவ்வாலயம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கோயிலின் மகாமண்டபம், சிதம்பரம் நடராஜர் கோயிலின் விமான அமைப்பைப் போன்றிருப்பது சிறப்பம்சமாகும். இங்கு மூலவராக குடி கொண்டிருக்கும் சிவலிங்கத் திருமேனியை நவத்வார சாளரத்தின் வழியே நந்திதேவர் தரிசிக்கும் அமைப்பில் உள்ளது. இவ்வாறு அமைப்பில் உள்ள ஆலயங்கள், சக்தியும், சாந்நித்தியமும் கொண்டவை. இங்கே பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால், எல்லா நலன்களும் அமையப் பெறலாம் என்பது நம்பிக்கை. வேறு எந்தக் கோயிலிலும் காண இயலாத வகையில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்பாளை கோபுர வாசலில் நுழைந்ததும் தரிசித்து விட்டுத்தான் மற்ற எல்லா மூர்த்தங்களையும் தரிசிப்பது கூடுதல் சிறப்பு அம்சம்.
பங்குனி மாதத்தில் லிங்கத் திருமேனியின் மீது சூரியனின் ஒளிக்கீற்றுகள் விழுவது சிறப்பு! இவ்வாலயத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக கருட சயனமும், 60 ஆண்டுகளுக்கு முன்பு ஈசான பலி, சர்ப்ப பலி முதலான யாகங்கள் நடந்துள்ளன.
கேட்ட வரங்களை அளிக்கும் வரசித்தி விநாயகர் சந்நிதியும், ஸ்ரீவள்ளி தேவயானை சமேத சுப்ரமணிய சுவாமி சந்நிதியும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒரு விசேஷம் என்னவென்றால் சுப்ரமணியசுவாமிக்கு அபிஷேகம் ஆனவுடன் துணியால் துடைத்த பின்னும் சுவாமி திருமேனிமீது வியர்த்திருப்பதுபோல் நீர்த்திவலைகள் இருப்பதைக் காணலாம். கருவறை திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா,துர்க்கை என அமைந்து அருளாசி வழங்குகின்றனர். மேலும், சூரியன், கால பைரவர், ஸ்ரீ நடராஜர் ஆகிய தெய்வங்களின் தரிசனத்தையும் பெறலாம். ஆலயத்தில் தனி சந்நிதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார்.
ஆடிப்பூரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், அனுமன் ஜெயந்தி, தனுர்மாத பூஜை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்றவை மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ காஞ்சி மகா சுவாமிகள் இப்பகுதிக்கு விஜயம் செய்தபோது இக்கிராமத்திற்கு வந்திருந்து அருளாசி வழங்கியுள்ளார்கள். ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று 20 ஆண்டுகள் ஆகிவிட்ட படியால், மூன்று நிலை ராஜகோபுரம் தற்போது விஸ்தரிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. மகா கும்பாபிஷேகம் ஜூலை 2 ஆம் தேதி நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 97898 42260