சுடச்சுட

  
  vinayagar

  தஞ்சை நகரின் மத்தியில் கீழவாசலில் அருள்மிகு வெள்ளை பிள்ளையார் திருக்கோயில் உள்ளது. இங்கு கணபதி வெள்ளை பிள்ளையாராக கிழக்கு நோக்கி எழுந்தருளி, வருகின்ற பக்தர்களின் குறை தீர்க்கும் வள்ளலாக அருள்பாலித்து வருகிறார். வியாபாரத் தலங்கள் நிறைந்துள்ள இப்பகுதியில் வணிகர்கள் காலையில் கடை திறக்கும் முன் இந்த கணபதியை வணங்கி விட்டுத்தான் தங்கள் வியாபாரத்தைத் துவங்குகின்றனர். வினை வலிமையால் வியாதிகள் வரப்பெற்று மருத்துவம் செய்து கொள்ள மருத்துவமனை செல்லும் நோயாளிகளும் இவரை வணங்கிய பின்னரே மருத்துவம் செய்து கொள்கின்றனர்.

  சோழ வளநாட்டில் தஞ்சை நகரில் முக்கியமான விநாயகரில் இதுவும் ஒன்று. தஞ்சை பெரிய கோயில் அருகில் வடக்குத்திசையில் நகரின் முக்கியமான பகுதியில் உள்ளது.

  வல்லபையுடன் எழுந்தருளி இருப்பதால் வல்லபைவிநாயகர் ஆனார். ஆனால் பேச்சு வழக்கில் வெள்ளைப்பிள்ளையார் என்றே அழைக்கிறார்கள். திருமணத் தடை, குழந்தையின்மை, வியாபார அபிவிருத்தி என எல்லாவற்றுக்கும் இந்த விநாயகரை வழிபாடு செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும் என்பது தஞ்சை நகர மக்களின் மிக பெரிய நம்பிக்கை.

  குழந்தைகளுக்கு காய்ச்சல், பயம் போன்ற பிரச்னைகளுக்கு மத வேறுபாடு இல்லாமல் விபூதி பிரசாதம் வாங்கிச் செல்வார்கள். தங்கு தடையின்றி (விக்னம் இல்லாமல்) காரியம் நடைபெற சிதறு தேங்காய் உடைப்பது இங்கு விசேஷம். நவக்கிரகங்களில் தீய கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்களே இல்லையா என்று கேட்போருக்கு அதனால் பாதிக்கப்படாத இரண்டு மூர்த்திகள் உள்ளனர். ஒருவர் விநாயகர். மற்றவர் ஆஞ்சநேயர். இந்த இரு மூர்த்திகளை வழிபடுபவர்களை பாபகிரகங்களின் பார்வையும் தோஷமும் பெரிய அளவு கஷ்டப்படுத்துவது இல்லை என்பது அனுபவ பூர்வமான உண்மை.

  விநாயகரை வழிபடவேண்டிய நாட்கள்

  அனுதினமும் இவரை வழிபடுவதால் அற்புதங்கள் நிகழும் என்பதில் ஐயமில்லை. வெள்ளிக்கிழமை வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். பௌர்ணமியில் வழிபட்டால் பாவங்கள் போகும். சதுர்த்தியில் வழிபட்டால் சங்கடங்கள் நீங்கும். இவ்வாலயத்தில் சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

  தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ள இத்திருக்கோயில், 29.08.2014 அன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. மறுநாள் எங்கும் இல்லாத சிறப்பாக அருள்மிகு விநாயகப் பெருமானுக்கும் வல்லபை அம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

  மகான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகளால் திருப்பணி செய்யப்பட்டு 1948 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின்னர், தஞ்சை அரண்மனை தேவஸ்தான முன்னாள் மூத்த இளவரசர் ராஜாராம் ராஜா சாகேப், தவத்திரு காத்தய்யா சுவாமிகள் தலைமையில் 1982 ஆம் ஆண்டிலும், தஞ்சை அரண்மனை தேவஸ்தான மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தலைமையில் 1999}இலும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தற்போது மகான் பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் பக்தர்கள் பெருமுயற்சி எடுத்து, இத்திருக்கோயில் திருப்பணி வேலைகளை நிறைவு செய்கின்றனர். 15.09.2014 அன்று காலை 9.00 மணிக்கு மகாகும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

  தொடர்புக்கு: 04362- 223384/ 94435 86453.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai