ஆதிவிநாயகப் பெருமான்!

சோழ நாட்டின் அரிசிலாற்றின் கரையில் அமைந்தது மந்தார வனம்.மந்தாரவனத்தில் குடி கொண்டு
ஆதிவிநாயகப் பெருமான்!

சோழ நாட்டின் அரிசிலாற்றின் கரையில் அமைந்தது மந்தார வனம்.மந்தாரவனத்தில் குடி கொண்டு அருள்புரியும் இறைவனின் திருநாமம் மந்தாரவனேஸ்வரர். நாயகி சுவர்ணவல்லி என்பதாகும்.இறைவன் குடிகொண்டிருக்கும் இத்தலத்தின் நதி ஜீவ நதியாக விளங்குகிறது

.அவ்வப்போது சிவபெருமான் நாட்டு நலன் கண்டுணர சஞ்சரித்து வருவது வழக்கம்.சில நேரங்களில் அம்மையுடன் சேர்ந்து சென்று சஞ்சாரம் செய்வார்.ஒருநாள் சிவபெருமான் மட்டுமே புறப்பட்டார்.உமா தேவியோ நித்திய பணிகளை கவனிக்க குளிக்கச் சென்றார்.

நீராடச் செல்லும் முன் நிலையான ஒரு காவலை ஏற்படுத்தி விட்டுச் செல்ல நினைத்தார்.அதனால் தாம் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த மஞ்சளை ஒரு பிடி எடுத்து மங்கல உருவொன்றைச் செய்து வாயிற்படியில் காவலுக்கு என வைத்துவிட்டுச் சென்றார்.தான் படைத்த மகன் தனக்காகக் காவலிருக்கப் போகின்றான் என்னும் நினைவில் அவனிடம் நான் நீராடிவிட்டு வரும் வரையில் எவரையும் உள்ளே அனுப்பாதே என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் அப்போதைக்கு இருக்கும் அன்னை உமையவளை வணங்கி அவ்வாறே ஆகட்டும் என ஒப்புக்கொண்டு,வாயிற்படியில் அமர்ந்து காவல் புரியத் துவங்கினான்.

அழகான களையான முகம்,ஆஜானு பாகுவான உருவமைப்பு,எல்லாவற்றுக்கும் மேலாக மங்கலகரமான உருவோடு கூடிய ஒளி பொருந்திய தேகம்,காவல் பணியில் கருத்தோடு அமர்ந்து காவல் காத்தான் உமையின் மூத்த மகன்.உலா முடிந்து வந்த உமாபதி உள்ளே நுழைய முயன்றார்.தடுத்த சிறுவனை சற்று கோபமுடன் பார்த்தார்.உள்ளே செல்வதற்கு அனுமதி வேண்ட,தாயின் கட்டளை தலைமேற் கொண்ட மகன் சினந்து எழுந்து தடுத்தான்.சினம் தலைக்கேற தலையைக் கிள்ளி எறிந்தார் சிவன்.

வெளியே வந்த உமை இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டார்.தான் உயிரூட்டிய மங்கல நாயகனை உயிர்ப்பிக்க கேட்டார்.சினம் தணிந்த சிவன் உண்மை அறிந்து தனது கணங்களை அழைத்து வடபுறம் தலை வைத்து உறங்கும் ஜீவனின் தலையைக் கொண்டு வந்து பொருத்தும்படியாக ஆணையிட்டார்.கணங்கள் எங்கும் சுற்றியானை ஒன்று வடபுறம் தலை வைத்துப் படுத்துக் கிடந்ததைக் கண்டு அதன் தலையைக் கொண்டு வந்து பொருத்தினர்.அதற்கு உயிரூட்டினார் உலகநாதன்.அதுமுதல் யானைத் தலையும் மனித உடலுமாக இருந்த கணேசனுக்கு ஓர் ஆசை வந்தது.

தன் தாய் தந்தைக்குச் சொந்தமான சிவலோகத்தில் தனிச் சிறப்பும்,தனியிடமும் வேண்டுமெனக் கேட்டார்.தனக்கென ஒரு கூட்டம் வேண்டும்,தன்னை மங்கலச் சின்னமாக மக்கள் போற்றவேண்டும்.மங்கள நாளிலும் சதுர்த்தி தினமான தான் உயிற்பித்த நாளிலும் தன்னை அண்டி வந்தவர்களுக்கு பலன் அனைத்தும் கிடைக்க அருள்வழங்க அனுமதி வேண்டும்.

மேலும் தான் உருவான இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று கேட்டார்.

சிவன் தன் கணங்களுக்கெல்லாம் அவரைத் தலைவனாக்கி கணங்களின் பதியாகிய கணபதி எனப் பெயர் வழங்கினார்.தன்னால் மீண்டும் உயிரூட்டப் பட்டதால் ஈசன் பட்டத்தையும் சேர்த்து கண+ஈசன் = கணேசன் எனவும் விளங்கச் செய்தார்.

உயிர்களுக்குத் தோன்றும் அனைத்துத் தடைகளையும் விக்னங்களையும் நீக்கும் வல்லமை தந்தார்.அதனோடு தனது சிவாலயங்களில் தனது வலப்புறத்தில் தனிச் சந்நிதியில் எழுந்தருளச் செய்ததுடன் பூஜைகள் துவக்கும் முன்பாக விநாயகருக்கு பூஜை செய்துவிட்டுத்தான் துவங்க வேண்டும் அருளினார்.

இறுதியாக விநாயகர் கேட்டபடியே திலதர்ப்பணபுரி என்ற பாடல் பெற்ற தலத்தில் திருக்கோயிலின் முன்புறத்தில் மனித முகத்தோடு கூடிய ஆதி விநாயகராகக் காட்சி தந்து மக்களுக்கு அருளவும் ஆசி வழங்கினார்.

அங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்

துங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி

பங்கயப் பழனவேலித் திலதையாம் பதியின் மேவும்

புங்கவன் ஆதிநாதன் புதுமலர்த் தாள்கள் போற்றி

எனத் தலபுராணத்தில் கூறியபடி,தும்பிக்கை இல்லாமல்,மனித முகத்துடன்,வலக்கால் தொங்கவிட்டு,இடக்கால் மடித்து,இடக் காலை இடக் கையின் மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக விளங்க அதிசயமான அழகான விநாயகரை தரிசனம் செய்யலாம்.

ஆதிநாதன் என அழைக்கப்படும் ஆதி விநாயகரை செவ்வாய்க் கிழமைகள்,சங்கடஹர சதுர்த்தி,மற்றும் விநாயகர் சதுர்த்தியன்று வழிபடுவதன்மூலம் தடைப்பட்ட காரியங்கள் தடை நீங்கி நடக்கும்.மேலும் எண்ணிய காரியங்கள் எண்ணியபடி முடியும்.

திலதர்ப்பனபுரி தற்போது செதலப்பதி என வழங்கப்படுகிறது.மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்னும் ஊரில் இருந்து 3 கி.மீ.தொலைவில் செதலப்பதி அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளி அருளாசி வழங்குகிறார் ஆதி விநாயகர்.

விநாயகர் சதுர்த்தி நன்னாளில் முழுமுதற் கடவுளாம் விநாயகப்பெருமானைத் தொழுது நலம்யாவும் பெறுவோம்.

தகவல்களுக்கு:04366239700,9442390299.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com