Enable Javscript for better performance
வெள்ளி - நல்ல வெள்ளி- Dinamani

சுடச்சுட

  

  வெள்ளிக்கிழமை உலகில் உள்ள எல்லோருக்கும் நல்ல நாள். இஸ்லாமியர்களும் வெள்ளிக்கிழமையை வார விடுமுறை நாளாக்கி மசூதிகளில் கூடி பகல் தொழுகையை வார சிறப்பு தொழுகை - (ஜுமுஆ) தொழுவார்கள். ஜுமுஆ தொழுகை அவசியம் தொழ வேண்டும் என்பதை எழில் மறை குர்ஆனின் 62-9வது வசனம், "நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமை அன்று ஜுமுஆ தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு அல்லாஹ்வை நினைவு கூற நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையோருக்கு இதுவே சான்று'' என்று கூறுகிறது.

  "சூரியன் உதயமாகும் நாட்களில் சிறப்பிற்குரியது ஜுமுஆ நாள். அந்நாளில்தான் ஆதம் நபி படைக்கப்பட்டு சொர்க்கத்தில் தங்கினார்கள். அதே நாளில்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். உலக இறுதியும் ஜுமுஆ நாளிலேயே நிகழும்'' என்ற வெள்ளியில் நடந்த நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய நபிகளின் நன்மொழியை அபூஹீரைரா (ரலி) நவில்வதை முஸ்லிமில் காணலாம்.

  ஜுமுஆ நாளாம் வெள்ளியில் மரணித்தவருக்கு மண்ணறை (புதைகுழி)யில் அவரின் உலக வாழ்வில் செய்த செயல்களைப் பற்றிய விசாரணையில் வேதனை இருக்காது என்ற நபிமொழி திர்மிதீ நூலில் குறிப்பிடப்படுகிறது. ஜுமுஆ நாளில் அல்லாஹ் ஒரு இலட்சம் பாவிகளை நரகத்திலிருந்து விடுதலை அளிக்கிறான் என்று இஹ்யாவு உலூமித்தின் நூல் உரைக்கிறது.

  "ஜுமுஆ நாளில் ஒரு நேரம் உள்ளது. அந்த நேரத்தில் அடியான் கேட்கும் வேண்டுதலை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்'' என்ற அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அமுத வாக்கை அறிவிப்பவர் அபூஹீரைரா(ரலி) நூல் - புகாரி.

  இத்தகு சிறப்புடைய ஜுமுஆ தொழுகையைக் கூடி தொழுவது கடமை. அத் தொழுகைக்குச் செல்லுமுன் குளித்து நல்லாடை அணிந்து நறுமணம் பூசி செல்வது நபி வழி. இவ்வாறு தொழ வருபவர்களை வானவர்கள் பள்ளிவாசலில் நின்று வரிசைப்படி பதிவு செய்வதைப் பகர்கிறார்கள். அபூஹீரைரா(ரலி) நூல் -புகாரி.

  ஜுமுஆ தொழுகைக்கு முன் உரை நிகழ்த்துவது நீதர் நபி வழி. அண்ணல் நபி(ஸல்) அவர்களின் குத்பா (ஜுமுஆ உரை) நடுத்தரமாக இருந்ததாக நவின்றவர் ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல் - முஸ்லிம், அபூதாவூத் - திர்மிதீ, நஸஈ

  குத்பா உரையைக் கேட்கும் பொழுது வட்டம் போட்டு அமரக் கூடாது; முழங்காலைக் கட்டிக் கொண்டும் உட்கார கூடாது. இக்கட்டளைகள் அபூதாவூத், திர்மிதீ, ரஜுன் ஆகிய நூற்களில் உள்ளன.

  குத்பா உரை கேட்க விரைந்து செல்ல வேண்டும். உரையாற்றும் இமாமுக்கு அருகில் நெருங்கி உட்கார வேண்டும். தூரமாக அமர்பவர் சொர்க்கத்தில் புகுந்தாலும் தூரமாகவே இருப்பார் என்று இயம்புகிறது. அபூதாவூத் கிரந்தம்.

  ஒருவர் பிறருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் விதித்ததைத் தொழுது இமாமின் உரையை மௌனமாக கேட்டால் ஒரு ஜுமுஆவிற்கும் மற்றொரு ஜுமுஆவிற்கும் இடையே உள்ள காலத்தில் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை எடுத்துரைக்

  கிறது புகாரி.

  இமாம் குத்பா உரையாற்றும்பொழுது பேசிக் கொண்டிருப்பவரைப் பார்த்து பேசாதே என்று எச்சரிப்பவரும் பேசிய குற்றத்திற்குரியவரே. எனவே பேசாது குத்பா உரையை மௌனமாக மனமொன்றி கேட்க வேண்டும் என்ற நபி மொழியை நவின்றவர் அபூஹீரைரா(ரலி) நூல் - புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸஈ.

  குத்பா உரை கேட்கும் பொழுது எவருக்கேனும் உறக்கம் வந்தால் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுந்து வேறொரு இடத்தில் அமர வேண்டும் என்ற இப்னு உமர்(ரலி) அவர்களின் அறிவிப்பு திர்மிதீயில் உள்ளது.

  உரை முடிந்து கதிரவன் உச்சி சாய்ந்தபின் உத்தம நபி(ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுததைத் தொடுத்து சொல்பவர் அனஸ்(ரலி) நூல் - புகாரி, அபூதாவூத், திர்மிதீ.

  வெள்ளியில் செம்மல் நபி(ஸல்) அவர்கள் செய்தவாறு நாமும் குளித்து தூய்மையுடன் தூய உடை உடுத்தி நேயமுடன் நேரத்தோடு பள்ளிக்குச் சென்று பாங்காய் குத்பா உரை கேட்டு முறையோடு தொழுது இறைவனிடம் இறைஞ்சி நிறைந்த பயன் பெற்று நீடு வாழ்வோம். வெள்ளி எல்லாம் நமக்கு நல்ல வெள்ளியாகட்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai