முகப்பு வார இதழ்கள் வெள்ளிமணி
விரும்பியதை அருளும் உவரி சுயம்புலிங்க சுவாமி!
By dn | Published On : 10th April 2015 02:46 PM | Last Updated : 10th April 2015 02:46 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டம், உவரி என்னுமிடத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில்!
இக்கோயில் உருவானதற்கு வாய்மொழியாக ஒரு கதை சொல்லப்படுகிறது. பால்காரர் ஒருவர் அருகேயுள்ள கூட்டப்பனை என்ற இடத்திலிருந்து இப்பகுதிக்கு தினமும் பால் விற்று வருவாராம். தினமும் அவர் உவரி வழியாகத் தான் செல்வாராம்.
ஒருமுறை இவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது, தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வந்ததும் கால் இடறி விழுந்து விடுவாராம். இதற்கு என்ன காரணம் என்று அவருக்கு விளங்கவில்லை. சற்று யோசித்தபின்னர், அங்குள்ள கடம்ப மரத்து வேர் தடுக்குவதால்தான் கால் இடறுகிறது என்பதை உணர்ந்திருக்கிறார்.
அதனால் அம்மரத்தின் வேரை வெட்டி அகற்ற எண்ணிய அவர், அந்த வேரை வெட்டத் துவங்கியபோது திடீரென்று ஒரு இடத்தில் ரத்தம் பீறிட்டதாம். அதேசமயம், இறைவனும் அசரீராக வந்து, அந்த இடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் கூறினாராம்.
இறைவனுடைய ஆணையை ஏற்று அங்கு முதலில் பனை ஓலையில் கோயில் கட்டினார்களாம். நாளடைவில் அந்த கோயில் பெரிய அளவில் உருப்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலின் கருவறையில் சுயம்புலிங்கசுவாமியாக அருள்பாலிக்கின்றார் இறைவன்! கோயிலின் வெளிப்புறமாக வலது பக்கத்தில் கன்னிவிநாயகருக்கான தனிக் கோயில் அமைந்துள்ளது. கோயிலின் இடப்புறம் பிரம்மசக்தி அம்மன் சந்நிதி உள்ளது. இச்சந்நிதியில் முன்னடி சாமியும் அதற்கடுத்தபடியாக பேச்சியம்மனும் தனி சந்நிதி கொண்டு விளங்குகின்றனர். இச்சந்நிதியிலேயே மாடசாமி, இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களும் அமைந்து அருள்கின்றனர்.
சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக முடிகாணிக்கை செய்யுமிடம் மிகவும் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் அருகில் கிணறும் உள்ளது. இதைப்பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. கடல் பக்கத்தில் உள்ள கிணற்றில் நீர் உப்பாக இல்லாமல் குடிக்க ஏற்றதாக உள்ளது. இதுதான் இறைவனின் அருள்! இங்கு குழந்தைகளுக்கு காது குத்துதலும் சிறப்பாக நடைபெறுகிறது.
இக்கோயிலில் வேண்டுதல் செய்பவர்கள் கடலில் சிறிது தூரம் சென்று கடல் மண்ணை அள்ளிக் கொண்டுவந்து கரையில் குவிக்கின்றார்கள். இதனால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை! வருடா வருடம் இவ்வாறு மண் கொண்டு வருவது பெருகிக் கொண்டே போகிறது. அதோடு பொங்கல் வழிபாடும் இங்கு நடைபெறுகிறது. பல குடும்பங்களுக்கு இந்த சுயம்புலிங்கசுவாமி குல தெய்வமாக இருப்பதால், வண்டி கட்டிக்கொண்டு குடும்பம் குடும்பமாகச் செல்வோர் பலர்! முன்பு காடு போல காணப்பட்ட இவ்விடம் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இப்போது, கார், ஜீப் என அவரவர் வசதிப்படி எளிதாக வந்து தரிசனம் செய்கின்றனர்.
வைகாசி மாதம் விசாகத்தில் இக்கோயில் களை கட்டிவிடும். தமிழகம் முழுவதிலிருந்தும் அதிகமான எண்ணிக்கையில் அனைத்து இனத்தவரும் இக்கோயிலுக்கு வருகின்றனர். தை மாதத்தில் பூசம், அமாவாசை ஆகிய நாட்களிலும், பங்குனி உத்திரம், ஆடி அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- ஜ.பாக்கியவதி.