Enable Javscript for better performance
அற்பமான தற்பெருமை- Dinamani

சுடச்சுட

  
  Islamic

  பீடு தரும் பெருமையும் கேடாய் முடியும் தற்பெருமை தலைக்கேறி நிலைதடுமாறி சூழலை மறந்து ஊழலுக்குதவி கீழே வீழ்ந்து எழ முடியாமல் ஏளனப்படும் பொழுதும் தோழனாய் நின்று துதிபாடியவர்களும் தூஷித்து வேஷம் கலைந்து விலகி ஓடும் பொழுதும் தன்னை வியந்து தருக்கும் தற்பெருமையை தாஹா நபி (ஸல்) அவர்கள் "தற்பெருமை என்பது ஆணவத்தோடு உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் என்று விளக்கியதை அறிவிப்பவர் - அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) நூல் -முஸ்லிம்.

  குர்ஆனின் 26-215, 5-54 ஆவது வசனங்கள் பணிவைப் போதிக்கின்றன. "பணிவின்றி ஒருவருக்கொருவர் பெருமை பேசுவது கூடாது'' என்ற கோமான் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியைப் புகல்கிறார் இயாழ்பின் ஹிம்மல் (ரலி) நூல் -முஸ்லிம்.

  ஸஃப்வானுப்னு உமய்யா (ரலி) ஒருவரிடத்தில் பெருமையாக ""நான் உமய்யத்துப்னு கலஃபின் மகனான ஸஃப்வான்'' என்று கூறினார். இதனைக் கேள்வியுற்ற உமர் பாரூக் (ரலி) அவரை அழைத்து உங்களுக்கு நற்குணம் இருந்தால் பெருந்தன்மை இருக்கும். பெருந்தன்மையிருந்தால் பெருமை பேச மாட்டீர்கள் என்று அறிவுறுத்தினார்கள். அவரும் திருந்தினார்.

  "தற்பெருமையுடையோர் கெட்டதான நரகத்தின் தலைவாசல்களில் நிரந்தரமாக ஒதுங்க நுழைவார்கள்'' என்று எச்சரிக்கிறது எழில்மறை குர்ஆனின் 40-76 ஆவது வசனம்.

  தற்பெருமையால் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொண்டவர்களின் வரலாற்றை வான்மறை குர்ஆன் கூறுகிறது. "தூயவர்கள் என்று தம்மைத்தாமே பெருமைபடுத்திக் கொள்வது முறையன்று.

  அல்லாஹ்வே அவர்களைத் தூய்மைப் படுத்தினான்'' என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 4-49 ஆவது வசனம்.

  எவர் அவர்கள் செய்த அற்ப சொற்ப செயலில் அதீத மகிழ்ச்சியுற்று அவர்கள் செய்யாத நன்மையான செயல்களையும் செய்ததாக மக்கள் புகழ்வதை விரும்புகின்றார்களோ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை இருப்பதை இயம்புகிறது. இறைமறை குர்ஆனின் 3-188 ஆவது வசனம்.

  இக் குர்ஆன் வசனப்படி ஒருவரிடம் இல்லாத சிறப்பை இருப்பதாக கூறி புகழ்வது அவனைப் பெருமை கொள்ள செய்யும். எனவே அவ்வாறு புகழ்வதைப் பூமான் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை எடுத்துரைக்கிறார் மிக்தாது (ரலி) நூல் -முஸ்லிம்.

  கல்வியைக் கற்று கற்பித்து கற்றவரும் மற்றவரும் மாண்புடன் வாழ்வதே கல்வியின் பயன். அதற்கு மாறாய் ""உலகில் புகழ் பெறும் நோக்குடன் கல்வியைக் கற்பவன் சொர்க்கம் செல்ல மாட்டான்;

  சொர்க்கத்தின் வாடையை கூட நுகர மாட்டான்'' என்ற நபி மொழியை நவில்பவர் - அபூஹீரைரா (ரலி) நூல் -அபூதாவூத், இப்னுமாஜா.

  தூதர் நபி (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள் அழகிய ஆடைகள் அணிவதும் தற்பெருமையா? என்று கேட்டனர். கேண்மை நபி (ஸல்) அவர்கள், ""அழகிய ஆடை அணிவது தற்பெருமையல்ல.

  தற்பெருமை என்பது சத்தியத்தைச் செருக்கோடு புறக்கணிப்பதும் மக்களை ஏளனமாக கருதுவதும்'' என்ற விளக்கம் அளித்தார்கள், அறிவிப்பவர் - அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) நூல் முஸ்லிம்.

  இந்நபி மொழியின் விளக்கத்தை உறுதி செய்யும் இறுதி மறை குர்ஆனின் 31- 18 ஆவது வசனம், "உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பாதே. இன்னும் பூமியில் (பெருமையுடன்) ஒய்யாரமாக நடக்காதே. நிச்சயமாக அல்லாஹ் அகப் பெருமையுடையோரை நேசிக்க மாட்டான்''

  மக்களுக்குச் சலாம் (முகமன்) சொல்லும் பொழுதும் மக்களிடம் பேசும்பொழுதும் மக்களைச் சந்திக்கும் பொழுதும் எதிரிலிருக்கும் மக்களின் முகத்தை முன்னோக்க வேண்டும். மற்றவர்களை மதியாது முகத்தைத் திருப்ப கூடாது. உலக ஆதாயத்தில் அதிக செல்வம் பெற்றவர்கள் பிறரைப் பாராது வான் நோக்கி தலையை உயர்த்தி வீண் பெருமையுடன் நடப்பதும் கூடாது. நடையும் உடையும் மக்கள் பழக்கத்தில் வழக்கத்தில் உள்ளபடி அமைய அற்பமான தற்பெருமையை தவிர்ப்போம். பொற்புடைய இறைவனின் பொன்னான அருளைப் பெற்று எந்நாளும் எல்லாரையும் மதித்து மனித நேயம் பேணி மாண்புடன் வாழ்வோம்.

  - மு.அ. அபுல் அமீன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai