Enable Javscript for better performance
இயேசுகிறிஸ்துவின் அருட்பணியாளர்கள்- Dinamani

சுடச்சுட

    
    jesus

    இயேசு தூய ஆவியினால் நிலைப்படுத்தப்பட்டவர். தந்தையினால் உலகுக்கு அனுப்பப்பட்டார். அதேபோல தமது சீடர்களையும் உலகெங்கும் சென்று நற்செய்தியைப் போதிக்க அனுப்பி வைத்தார் இயேசு கிறிஸ்து.

    அவரின் நேரடி சீடர்களின் மூலம் தொடங்கிய இந்தப் பணி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களை நாம் அருட்பணியாளர்கள் என்று அழைக்கின்றோம். ஒரு அருட்பணியாளர் இறைவனின் அன்பார்ந்த ஊழியர் என்று சொல்லப்படுகிறார். இது அருட்பணியாளருக்கும் இறைவனுக்குமிடையே உள்ள ஆழ்ந்த உறவைப் பிரதிபலிக்கின்றது.

    ஒரு அருட்பணியாளர் வெறுமனே ஒரு வேலையாள் அல்ல. இறைவனைத் தனது உள்ளத்தில் தாங்கி, அவரது அன்பை சிறப்பான வகையிலே அனுபவித்து, அதைப் பிறருக்கும் முழுமனதுடன், அர்ப்பணிப்பு உணர்வுடன் தருவதில்தான் அருட்பணியாளரின் பணி முழுமை பெறும். ஆகவே அருட்பணியாளர்களுக்கு இறையனுபவம் மிகவும் அவசியம்.

    திருவிவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இறைவனின் நிலைத்த அன்பையும் நீடித்த பொறுமையையும் அனுபவித்தவர்கள் மட்டுமே இஸ்ரயேல் மக்களை ஒரு இனமாகக் கூட்டிச் சேர்த்து, அவர்களை வழிநடத்த முடிந்தது. ஆபிரகாம் கடவுளின் உடன்படிக்கையை ஏற்றவராக வாக்கு மாறாத கடவுளின் அருளை முழுவதுமாக அனுபவித்ததற்குக் காரணம் அவரது அசைக்க முடியாத இறை நம்பிக்கையே.

    எகிப்திய அரசனின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் சென்ற மோயீசன் இறைவனின் சொற்படி நடந்து தனது பாதையைச் செம்மைப்படுத்திக் கொண்டார்.

    ஆக, பழைய ஏற்பாட்டு இறைவாக்கினர் அனைவருமே இறைவனை மன்னிக்கும் கடவுளாக, நம்பிக்கையூட்டும் கடவுளாக, புதுவாழ்வளிக்கும் கடவுளாக அனுபவித்தனர்.

    இத்தகைய இறையனுபவத்துக்கு உயரிய, உன்னத எடுத்துக்காட்டு இறைமகன் இயேசு கிறிஸ்து. இறைவனை அப்பா என்று உரிமையோடு அழைத்து, நம்மையும் இறையன்பின் ஆழத்தை அனுபவிக்க அழைப்பு விடுத்துக்கொண்டே இருக்கிறார். இறைவனாம் தந்தையுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம்தான் இறையாட்சிப் பணிக்கு ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அவருக்குக் கொடுத்தது எனலாம். இயேசுகிறிஸ்துவின் வாழ்வும், பணியும், படிப்பினையும், அருஞ்செயல்களும் அவரது அப்பா அனுபவத்திலிருந்து பிறப்பெடுத்து, வாழ்வில் படிப்பினைகளாக வளர்ந்து உருப்பெற்றன.

    ஆகவேதான், இயேசுகிறிஸ்து, மக்களோடு இருந்து அவரது நற்செய்தியைப் பரப்புவதற்கும், பணிசெய்வதற்கும் சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.

    இயேசுவோடு தங்கி, அவரது வார்த்தையைக் கேட்டு, அவரோடு தங்கள் வாழ்வைப் பகிர்ந்துகொண்ட சீடர்கள் ஊர் ஊராகச் சென்று நற்செய்தியை அறிவித்தனர். அந்த நற்செய்தி, இயேசுவின் நற்செய்தி.

    அவரை அருகிலிருந்து பார்த்து நெருக்கமாக இருந்து அறிந்துகொண்ட அனுபவத்திலிருந்து பிறந்த நற்செய்தி.

    இதனடிப்படையில்தான் ஒவ்வொரு அருட்பணியாளரின் செயல்பாடும் இருக்க வேண்டும். அவரின் இறையனுபவம், கிறிஸ்து அனுபவமாக மாற வேண்டும்.

    ஏனெனில் இயேசுகிறிஸ்துவின் வழியாகவே நம்பிக்கையாளர்களாகிய நாம் இறைவனின் அன்பையும் இரக்கத்தையும் முழுமையாக அனுபவிக்கிறோம். இந்த அனுபவத்தில் தூய ஆவியின் ஆற்றல் வல்லமையோடு செயல்படுகிறது.

    இறைவனின் அன்பார்ந்த ஊழியர்களான அருட்பணியாளர்கள் வெறும் சமூக நலம் பேணும் தொண்டர்களாகவும் மனிதாபிமான செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களாக மட்டும் இருந்துவிடுவதில்லை.

    அவர்களது வாழ்வையும் புனிதமானதாக மாற்றிக்கொள்கிறார்கள். கிறிஸ்துவின் முப்பெரும் பணிகளான இறைவாக்குப் பணி, புனிதப்படுத்தும் பணி, மேய்ப்புப் பணி ஆகியவற்றை கிறிஸ்துவின் மனநிலையோடு, தங்களின் வாழ்வுச் சூழ்நிலைக்கேற்ப நிறைவேற்றுவதன் மூலம் அருட்பணியாளர்கள் புனித வாழ்வில் வளர்கின்றனர்.

    இறைவாக்குப் பணியாளர் என்ற முறையில் இறை வார்த்தையில் வளர்ந்து, பிறரையும் ஆன்மிக வாழ்வில் வளர உதவுவது அருட்பணியாளரின் முதல் கடமை. அவர்கள் இறைவனின் அன்பார்ந்த ஊழியர்கள் என்ற அடிப்படையில் எந்நேரத்திலும் மக்களுக்காகப் பணி செய்யத் தயாராக இருக்க வேண்டும். இயேசுவைப் போல தாழ்ச்சியுள்ளவர்களாகவும் வாழவேண்டும், வாழ்கிறார்கள்.

    - ரோஹன் பின்னி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai