Enable Javscript for better performance
இரும்பு காந்தத்தைக் கவர்ந்தது!- Dinamani

சுடச்சுட

    
    thirunavu

    தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றம் சார்பில் சென்னை, பாடி திருவல்லீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சித்திரைச் சொற்பொழிவு தொடக்க விழாவில் "பக்தி வலையில் படுவோன் காண்க' என்ற தலைப்பில் கவிஞரும் சொற்பொழிவாளருமான சொ.சொ.மீ. சுந்தரம் பேசியது:

    "கவலை இல்லாத மனிதர்கள் யாருமில்லை. கவலையை போக்கும் மருந்து கடவுள்! நாம் பாசவலைக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம். பக்தி வலை விரித்தால் இறைவன் அந்த வலையில் வந்து மாட்டிக் கொள்வார். இதனால் இறைவன், பக்தன் இருவருக்கும் இன்பம்.

    மாணிக்கவாசகர் வரலாற்றில் இரும்பு காந்தத்தை ஈர்த்தது. சிவபெருமான் என்னும் காந்தத்தை மாணிக்கவாசகர் என்னும் காந்தம் ஈர்த்தது.

    அந்த காந்தம் கயிலையில் இருந்த சிவபெருமானை திருப்பெருந்துறைக்கு அழைத்து வந்தது. தற்போதுவரை திருப்பெருந்துறையில் உள்ள கோயிலில் வழிபாடுகள் அனைத்தும் மாணிக்கவாசகருக்கே செய்யப்படுகிறது. சிவபெருமானுக்கு அங்கு வழிபாடுகள் இல்லை.

    திருவாசகம் என்பது மாணிக்கவாசகர் சிவபெருமானுக்கு விரித்த பக்தி வலை. இது காந்தி, ராஜாஜி, வினோபாபாவே ஆகியோரை ஈர்த்துள்ளது. காரைக்கால் அம்மையார், திருத்தொண்டர், 63 நாயன்மார்களுக்கும் இதுதான் நிகழ்ந்தது.

    திருவாசகத்தை முதன் முதலில் ஜி.யு. போப் 1893 முதல் 1900 ஆம் ஆண்டு வரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். சிவபெருமான் அடியார்கள் செய்த திருத்தொண்டை உலகத்துக்கு விளக்குவதற்காகச் செய்த திருவிளையாடல்கள் அனைத்தும் பக்தி வலையால் பட்டதனால் வந்தவையே ஆகும்.

    மற்றவர்களுக்கு வந்த துன்பத்தைத் தனக்கு வந்த துன்பமாக நினைத்து அவர்களுக்கு உதவ வேண்டும், பசி என்று வந்தவர்களுக்கு அன்னமிட வேண்டும், தனக்கென மட்டும் வாழாமல் பிறருக்காகவும் வாழ வேண்டும் ஆகியவை பெரியபுராணம் சமுதாயத்துக்குக் கூறிய சிறந்த கருத்துகளாகும்'' என்றார்.

    - அ. ஜெயச்சந்திரன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai