Enable Javscript for better performance
உள்ளம் இனிக்கும் ஊஞ்சலூர்!- Dinamani

சுடச்சுட

    
    oonjalur

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் வழிபாடு சிறப்பு மிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்று ஊஞ்சலூர்! ஊஞ்சலூருக்கு பல சிறப்புகள் உண்டு. "இராமசந்திரகிரி' என்றும் "ஊஞ்சமரவனம்' என்றும் அழைக்கப்படுகிறது. தேவார மூவரால் போற்றப்பட்ட 700 ஆண்டுகள் பழைமையுடைய சிறப்புமிக்கத் தலமிது. "திருப்பாண்டிக் கொடுமுடி' கோயிலுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கும் தலமாக ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் விளங்குவது தனிச்சிறப்பு.

    காவிரி ஆற்றை மையமாக வைத்து மேல், கீழ் அரைய நாடு என இரு பிரிவாக பிரிக்கப்பட்டது. மேல் கரை அரைய நாட்டில் ஊஞ்சலூர் அமைந்துள்ளது. கொடுமுடி திருக்கோயிலுக்குத் தானமாக அளிக்கப்பட்ட ஊர்களில் ஊஞ்சலூரும் ஒன்றாக விளங்கியதை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த ஊஞ்சலூர் கொளத்துப்பாளையும் கிராமத்தில் அருள்மிகு அமிர்தவல்லி சமேத நாகேசுவ சுவாமி மற்றும் அருள்மிகு லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இதனால் சிவா- விஷ்ணு வழிபாட்டிற்குரிய சிறந்த தலமாகவும் திகழ்கிறது. சிவாலயத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், பைரவர், சூரியன், சந்திரன், நவக்கிரக சந்நிதிகள் அமைந்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    இத்தலத்தில் வள்ளி- தெய்வயானை சமேதராக முருகப்பெருமான் கல்யாண சுப்ரமணியராக எழுந்தருளி அருள்புரிகிறார். இவரை வழிபட, செவ்வாய் தோஷம், திருமணத்தடை நீங்கும். இத்தலத்தில் இறைவன் நாகேஸ்வர சுவாமியை ராகு- கேது வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே காலசர்ப்ப தோஷம் போக்கும் சிறப்பு மிக்க தலமாகவும் ஊஞ்சலூர் விளங்குகிறது.

    இக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் லட்சுமி நாராயணப் பெருமாள், லட்சுமிதேவியை தனது மடியில் வைத்து அருள்வழங்கும் அற்புத மூர்த்தியாக விளங்குகிறார். இங்கு கருடாழ்வார், ஆஞ்சநேயர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. மாத ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி மாதத்தில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனமும் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அதிட்டான கோயில்களும் அமைந்து ஊஞ்சலூருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. இத்தகைய வழிபாடு சிறப்பு மிக்க பழைமையான ஊஞ்சலூர் கொளத்துப்பாளையம் ஊரில் அமைந்துள்ள அமிர்தவல்லி சமேத நாகேசுவர சுவாமி மற்றும் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்களுக்குத் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு - கரூர் சாலையில் 33 கி.மீ. தொலைவிலும் கொடுமுடிக்கு அருகில் 6 கி.மீ. தொலைவிலும் ஊஞ்சலூர் அமைந்துள்ளது.

    புதிய கோயில்களைக் கட்டுவதைக் காட்டிலும் வழிபாடு சிறப்பு மிக்க பழைய திருக்கோயில்களைத் திருப்பணி செய்து வழிபடுவது மிகுந்த புண்ணியம் தரும் காரியம் என்று காஞ்சி புராணம் சிவபுண்ணியப்படலம் பாடல் ஒன்று எடுத்துரைக்கிறது. பக்தர்கள் இவ்வாலயத்தின் திருப்பணிகளில் பங்கேற்று இறையருள் பெறலாம்.

    தொடர்புக்கு: 99424 04177/ 96295 58336.

    - கி. ஸ்ரீதரன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai