Enable Javscript for better performance
பிணிகளைத் தீர்க்கும் ஸ்ரீ உத்திர வைத்யலிங்கேஸ்வரர்!- Dinamani

சுடச்சுட

    
    siv-par

    அருள்மிகு தையல் நாயகி உடனுறை உத்திர வைத்ய லிங்கேஸ்வரர் ஆலயம் ஒரு சிறந்த செவ்வாய் பரிகாரத்தலம் ஆகும். கிழக்கி நோக்கிய ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. உள்ளே வலது புறத்தில் விநாயகர் எழுந்தருளியிருக்க, அவருக்கு பின்புறத்தில் அமைந்துள்ள வேம்பும் பனையும் தல விருட்சங்களாக உள்ளன. நந்தியை வணங்கி சென்றால் அடுத்ததாக நாம் காண்பது இறைவனின் கருவறை! மருத்துவராக உத்திர லிங்கேஸ்வரரும் அருள்மிகு தையல்நாயகி அம்பாளும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

    இத்தலம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு இணையானது. இத்தலத்தில் உடற்பிணிகளை நீக்கும் அற்புதமான அகத்தியர் தீர்த்தம் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவனை வழிபடுவதால் சகல சௌபாக்கியங்களுடன் மழலைப்பேறும் கிட்டும் என்பது ஐதீகம்.

    ஒருமுறை அகத்தியர் சிவத்தலங்களை அமைக்க பல இடங்களுக்கு சுற்றி வந்து பார்த்தபோது, திருக்காட்டூரின் அழகினில் கவரப்பட்ட அவர், இத்தலத்தில் அமர்ந்து தவம் புரியலானார். தன் திருவிளையாடல்களால் மக்களை ஆட்கொள்ள நினைத்த சிவபெருமான், மக்களுக்கு தாங்க முடியாத பிணிகளைத் தோற்றுவித்தார். முடிவில் சகல ஜீவராசிகளையும் படைத்து காத்தருளும் இறைவனின் திருவிûளாயாடல்தான் இது என்று அறிந்து தவம் புரிந்து வந்த அகத்தியரின் உதவியை நாடினர். மக்களுக்கு உதவ எண்ணிய அகத்தியர், மகேசனை நோக்கித் தவம் செய்ய எண்ணினார். அகத்தியரின்

    தவத்தை மெச்சிய இறைவன், "நான் சுயம்புவாகத் தோன்றி இம் மக்களைத் தீராதப் பிணிகளிலிருந்து காப்பேன்'' என்று அருளினார். மேலும் சுயம்புவாகத் தோன்றும் லிங்கத் திருமேனி அருகே ஒரு திருக்குளத்தை உருவாக்கி, அந்த தீர்த்தத்திலிருந்து நீர் கொண்டு வந்து லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து அந்த நீரை இவ்வூர் மக்களுக்கு பிணி தீர்க்கும் மருந்தாகக் கொடுக்கும்படியாக கூறினார்.

    அவ்வாறே அகத்தியர் செய்து மக்களின் பிணியைத் தீர்த்தார். பெருமான் தனது திருக்கல்யாணக் கோலத்தை அகத்தியருக்கு காட்சி கொடுத்தருளிய தலம் திருக்காட்டூர் ஆகும். தமிழகத்தின் வட திசையில் இருப்பதால் உத்திர என்றும் மக்களின் பிணி போக்கியதால் வைத்திய என்றும் சுயம்பு திருமேனியாக ஒளிர்ந்ததால் லிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

    அருள்தரும் ஸ்ரீ தையல்நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ உத்திர வைத்யலிங்கேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 01.05.2015 ஆம் தேதி 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் நடைபெறுகிறது. பக்தர்கள் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு இறைவனின் அருளைப் பெறலாம்.

    திருப்போரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் மேடவாக்கம்- பொன்மார் வழியாக இக்கோயிலுக்குச் செல்லலாம்.

    தொடர்புக்கு: 90031 29766, 72006 65001.

    - ராஜூ.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai