Enable Javscript for better performance
பிள்ளைவரம் தரும் அமிர்தலிங்கேஸ்வரர்!- Dinamani

சுடச்சுட

  
  pillai

  அழகாபுரியில் வசித்த வைசிரா என்பவரது மகன் குபேரன்! புஷ்பக விமானத்தில் ஏறி பல தலங்களுக்கும் சென்று சிவனை பூசித்து வணங்கி வருவது அவனது வழக்கம். ஒரு நாள் புஷ்பக விமானத்தில் செல்லும்போது கீழே இரு நதிகளுக்கு இடையே ஒரு வனம் செழித்து வளர்ந்திருப்பதைக் கண்டு நிதானித்தான். அச்சமயம், வானில் ஒரு குரல்! "இவ்வனத்தில் இலந்தை மரத்தடியில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபட்டால் பல மடங்கு பலன் கிடைக்கும்' என ஒலித்தது. உடன் கீழிறங்கி அங்கு இலந்தை மரத்தினடியில் சுயம்பு லிங்கமாய் எழுந்தருளியிருந்த இறைவனை மனதார வணங்கினான்.

  சிவனும் சிந்தை மகிழ்ந்து "நீ கேட்கும் வரம் தரத் தயாராக இருக்கிறேன். என்ன வரம் வேண்டும் கேள்!'' என்றார். ""இத்தலம் என் ஊர் மற்றும் என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்'' எனக் கேட்டான்.

  பக்தனின் வேண்டுகோளின்படி அதுமுதல் இத்தலம் அழகாபுரியாகவும் இறைவன் அழகேசன் எனவும் அழைக்கப்பட்டார்.

  பாற்கடல் கடையப்பட்டு விஷம் வெளிப்பட்டது. உலகைக் காக்க அதனை சிவன் உண்டார். அன்னை இறைவனுக்குள் முழுவதும் இறங்கி விடாமல் கழுத்தினைப் பிடித்தார். விஷம் கண்டத்தில் தங்கியதால் திருநீலகண்டரானார். அதை அடுத்து கடைந்து கொண்டிருக்கும் போதே அமுதம் வெளிப்பட்டது.

  அமுதத்தில் தேவர்களுக்கு வழங்கியது போக மிஞ்சியதை ஒரு குடத்திலிட்டு கருடன் வசம் கொடுத்தனுப்பினார் திருமால்! உலகுக்கு நன்மை செய்யும் தவ சிரேஷ்டர்களுக்கும் முனிவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது அவரது நோக்கம்.

  அமுத கலசத்தோடு புறப்பட்ட கருடன் அழகாபுரி என பெயர் சூட்டப்பட்ட இடத்தை அடைந்தார். அங்கு அழகேசனை வணங்கி நின்றார். ஈசனோ வந்த நோக்கமறிந்து அமுத கலசப் பானையை பராசர முனிவரிடம் கொடுக்கச் சொன்னார். அவரும் அதனைப் பெற்று பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார்.

  தேவ அசுர யுத்தம் முடிந்த பிறகு லவணாசுரன் என அழைக்கப்பட்ட அசுரனின் நான்கு புதல்வர்களும் அமுத கலசத்தைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். இறுதியாக இத்தலத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள தகவலை அறிந்து கொண்டு இங்கு வந்து ஊர் முழுவதையும் சல்லடை போட்டு சலித்து எங்கும் கிடைக்காமல் இறுதியில் பராசர முனிவர் மறைத்து வைத்து இருக்கும் தகவலை

  அறிந்து அவரை நெருங்கினார்கள். அவர் ஈசனிடம் நல்லுபாயம் அளிக்க வேண்டினார். அவரும் இத்தலத்தில் நின்று அருளும் அன்னை வேத நாயகியை பூஜிக்கச் சொன்னார். பராசர முனிவரும் வேதநாயகி அம்பாளை மனமுறுக வேண்டினார். அன்னையின் பல சக்திகளில் நான்கு சக்திகள் மட்டும் கிளம்பிச் சென்று நான்கு அசுரர்களை அழித்து ஒழித்து நிர்மூலமாக்கின. பின்னர் அந்த சக்திகள் நான்கும் இவ்வூரின் திக்குக்கொன்றாக நின்று காவல் தொழில் செய்யத் துவங்கின.

  அசுரவதம் முடிந்து அமுதகலசத்தை எடுத்து பார்த்த போது ஓர் அதிசயம் நிகழ்ந்து இருந்தது. இறையருளால் அமுதம் முழுவதும் இறுகி கல் போல் லிங்க வடிவில் மாறி இருந்தது. அதனை பராசர முனிவர் அவர் மனைவியிடம் தர, அவர் அதனைத் தொட்டு தூக்கி வணங்கி மீண்டும் அவரிடமே சேர்ப்பித்தாள். சிறிது நாளில் முனிவராக இலந்தை வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு குழந்தை பாக்கியம் உண்டானது.

  மகிழ்வடைந்த பராசர முனிவர் லிங்கமாய் மாறிய அந்த அமுதத்தை வழிபாடு செய்ய அமுத கலசம் மறைத்து வைத்திருந்த இடத்தின் ஆழத்தில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். ஏற்கெனவே ஓடிக் கொண்டிருந்த காவிரி, பவானி ஆகிய நதிகளுடன் அத்தீர்த்தம், அந்தர்வாஹினியாய் பூமியில் கண்ணுக்குப் புலப்படாதவாறு ஒன்றிணைந்து திரிவேணி சங்கமமாக உருவானது. திரிவேணி சங்கமம் முதன் முதலில் உருவான நாள் ஓர் அட்சய திருதியை நந்நாள் ஆகும். அது முதல் கூடலில் இருந்த வேதநாயகி அம்பாள் உடனுறை சங்கமேஸ்வரருடன், சௌந்தர்யநாயகி தாயார் சமேத ஆதிகேசவப்பெருமாள் இங்கு எழுந்தருளி அருள் வழங்கலானார்.

  மேலும் சண்முக சுப்ரமணியர், யோக நரசிம்மர், நவநீத கிருஷ்ணன், வேணுகோபாலசுவாமி ஆகிய சந்நிதிகளுடன் தென்மேற்கு மூலையில் வேதங்கள் நான்கும் சேர்ந்து உருவான இலந்தை மரம் தல விருட்சமாகவும் ஆதி மூலஸ்தானமாகவும் அமைந்து அருளுகின்ற தலம் பவானி எனப்படும் கூடுதுறை ஆகும்

  "தட்சண பிரயாகை' எனப்படும் திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம், கொங்கேழ் சிவாலயங்களில் ஒன்றாகும். பெரிய புராணம், கொங்கு மண்டல சதகம், பவானி கூடற் புராணம், வேத நாயகி பிள்ளைத் தமிழ் போன்ற நூல்கள் இத்தலத்தின் சிறப்பினை சிறப்பித்துக் கூறுகின்றன.

  சங்கமேஸ்வரரின் ஆலோசனைப்படி பராசர முனிவரால் மறைத்து வைக்கப்பட்டு இறுகிய அமுதம், லிங்க வடிவில் இன்றும் பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் தனி சந்நிதியில் வைத்து வழிபடப்படுகிறது.

  பவானி ஆற்றில் படித்துறையில் குளித்து முழுகி படியேறியவுடன் முதலில் அமைந்துள்ளது அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதி! மகப்பேறு நெடுநாட்களாக இல்லாதவர்கள் தம்பதியர் இருவரும் குளித்து முழுகி ஈர உடையுடன் அமிர்தலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு வந்து அங்கு இருக்கும் தீபத்தினைத் தொட்டு வணங்கி ஆவுடையாரின் மீது வைக்கப்பட்டுள்ள பாணத்தைக் கையில் ஏந்திக் கொண்டு ஆவுடையாரை ஒருமுறை சுற்றி வந்து மீண்டும் வைத்து வணங்க வேண்டும். பின்னர் உள்ளே சென்று வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர், சௌந்தர்யநாயகி தாயார் உடனுறை ஆதிகேசவப் பெருமாளை வணங்கி

  பிரார்த்தனை முடித்து குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். இத்திருக்கோயிலைப் பொருத்தவரை தினமும் நடைபெறும் பிரார்த்தனை இதுவேயாகும். இது போன்ற பல பிரார்த்தனைகள் பராசரர் காலம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.

  ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறை திருதியை நாளில் துவங்கிய செயல் அனைத்தும் நன்கு செழித்து நல்ல விலைவை ஏற்படுத்தும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

  அதே போல் காவிரி பவானி ஆகிய நதிகளுடன் பராசரரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் முதன்முதலில் கலந்து திரிவேணி சங்கமமாக உருவானது அட்சய திருதியை ஆகும். பராசரர் அமிர்தலிங்கத்தை தொட்டு அவர் மனைவியிடம் கொடுத்த நாளும் அட்சய திருதியையே!

  21.04.2015 அன்று அட்சய திருதியை நந்நாள்!

  தினமும் 6 கால பூஜை, மாதப்பிறப்பு, அமாவாசை, பிரதோஷம், கிரகப் பெயர்ச்சிகள், சித்திரையில் பிரம்மோற்வம் மற்றும் அனைத்து சைவ, வைஷ்ணவ விழாக்கள் நடைபெறுகின்றன. பல சிறப்புகள் உடைய திருத்தலமிது என்பதால், திருஞான சம்பந்தர் தனது பாடலில் "இத்தலத்தின் பெயரைக் கேட்டாலே தீவினைகள் தீய்ந்து நல்வினைகள் வளரும்' என்று கூறுகிறார்.

  பவானி, ஈரோடு ரயில் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

  தொடர்புக்கு: 04256230190/ 94434 82078.

  - இரா. இரகுநாதன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai