Enable Javscript for better performance
யாதவ குலத்தை அழித்த இரும்பு உலக்கையின் வரலாறு!- Dinamani

சுடச்சுட

  
  aras

  திருத்தணிகை திருப்புகழ் "எலும்பு நாடிகளப் பொடி ரத்தமொடழுக்கு'' என்று துவங்கும் பாடலில் வரும் "உலுத்த ராவணனைச் சிரமிற்றிட வதைத்து மாபலியைச் சிறை வைத்தவன், உலக்கை ராவி நடுக்கடலில் விட்டவன் மருகோனே'' என்ற அடிகளில் யாதவ குலத்தின் அழிவையும் கண்ணபிரான் பூவுலக வாழ்வை உகுத்து வைகுந்தம் சென்றதையும் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்.

  பாரதப்போர் முடிந்து தருமர் அஸ்தினாபுரத்தின் அரசராக முடி சூட்டப்பட்டு முப்பத்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்தன. கண்ணனும் துவாரகையில் ஆட்சி செய்து வந்தார். எனினும் அவர் மனதில் நிம்மதியில்லை. காரணம் பாரதப்போர் முடிவில் காந்தாரி இட்ட சாபம்தான்.

  "கண்ணா! நீ என் குலத்தை அழித்தாய். அதேபோல் உன் யாதவ குலமும் இன்றிலிருந்து 36 ஆவது ஆண்டில் அழியும்!'' என்று காந்தாரி வயிறு எரிந்து சாபமிட்டது கண்ணனின் நினைவுக்கு வந்தது.

  கண்ணனின் யாதவ குலத்தவர்கள் இப்போது மிகவும் மாறி விட்டனர். மதுவுக்கு அடிமையாகி சதா குடித்துவிட்டுக் கலவரங்களிலும் சண்டையிலும் ஈடுபட்டு ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.

  உழைத்துப் பிழைக்காமல் திருடியே வாழ்ந்து விடலாம் என்று கள்வர்களாக மாறிவிட்டனர்!

  இந்த நிலையில் துவாரகையில் கண்ணனைக் காண விஸ்வாமித்திரர், கண்ணுவர், நாரதர் ஆகிய முனிசிரேஷ்டர்கள் வந்தார்கள். அவர்களைக் கண்டதும் குடிபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்த யாதவர்களுக்கு அவர்களைக் கேலி செய்யும் ஆசை பிறந்தது. கண்ணனின் மகனாகிய சாம்பனுக்குப் பெண்வேஷம் போட்டு, வயிற்றில் துணியைச் சுருட்டி அடைத்துக் கர்ப்பிணிபோல் மாற்றினார்கள். பின்பு அவனை அந்த ரிஷிகள் முன் நிறுத்தி, ""இந்தப் பெண்ணுக்குப் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா! சொல்லும்!'' என்று கேலியாகச் சிரித்தபடி கேட்டார்கள்.

  முனிபுங்கவர்களுக்கு இதைக்கேட்டதும் சினம் பிறந்து விட்டது. அவர்களுக்கு இந்தக் குடிகார யாதவர்களின் விஷமம் புரிந்துவிட்டது.

  "ம்..ம்... ஆணும் பிறக்காது, பெண்ணும் பிறக்காது. பெரிய இரும்பு உலக்கைத்தான் பிறக்கும். அந்த உலக்கையால் கிருஷ்ணர், பலராமரைத் தவிர ஏனைய யாதவர்கள் அனைவரும் அழிவீர்கள்!'' என்று சாபமிட்டு விட்டுப் போய்விட்டனர்.

  இந்தச் சாபத்தைக் கேட்ட யாதவர்கள் நடுங்கிவிட்டனர். அதற்கேற்றாற்போல் மறுநாள் பெண்வேஷம் தரித்த சாம்பனுக்கு ஒருபெரும் இரும்பு உலக்கை பிறந்தது! உடனே யாதவர்கள் அந்த இரும்பு உலக்கையை அரத்தினால் ராவி அறுத்துப் பொடிப்பொடியாக்கிக் கடலில் கலந்து விட்டனர். ராவி அறுத்தது போகக் கடைசியில் ஒரு சிறு துண்டு இரும்பு இருந்தது. அதைக் கடலில் வீசிவிட்டுச் சென்று விட்டனர். கடலில் கரைக்கப்பட்ட இரும்புத் துகள்கள் அலைகளால் அடிக்கப்பட்டு கரையில் ஒதுங்கிக் கோரைப் புற்களாய் வளர்ந்தன.

  வர வர யாதவர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. துவாரகையில் தெருவுக்கு இரண்டு மதுக்கடைகள் முளைத்தன. சதா குடியில் மிதந்தபடி இருந்தனர் யாதவர்கள். கிருஷ்ணன் அதைப் பொறுக்க முடியாமல் ""உங்கள் பாபங்கள் தீர அனைவரும் தீர்த்த யாத்திரை செய்துவிட்டு வாருங்கள்'' என்று உத்தரவிட்டார். இதைக் கேட்டதும் யாதவர்கள் குஷியாகி விட்டனர். கிருஷ்ணனே சொல்லிவிட்டாரே தீர்த்த யாத்திரை என்று! யாதவர்கள் அனைவரும் பிரபாசபட்டினம் என்ற இடத்தை அடைந்து கண்டபடி குடித்துவிட்டுக் கடற்கரையில் கும்மாளமிட்டனர்.

  விளையாட்டாய் ஆரம்பித்த சண்டை, வினையாய் முடிந்தது. கடற்கரையில் வளர்ந்திருந்த தடிமனான கோரைப்புற்களைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டனர்.

  அந்த கோரைப்புற்கள் உண்மையில் இரும்பு கோரைப்புற்கள்! ஆயுதம் போல் அவற்றால் அடித்துக் கொண்டு கடற்கரையில் மாண்டார்கள். கிருஷ்ணருடைய பிள்ளைகள், பேரன்கள் மற்ற யாதவர்கள் அனைவரும் ஒருவர் பாக்கியில்லாமல் மாண்டனர். காந்தாரியின் சாபம் பலித்துவிட்டது!

  முனிவர்கள் இட்ட சாபத்தின் படியும் தன்குலம் தன் கண் முன்னே அழிந்ததைத் தன் இருகண்களாலும் கண்ட கண்ணபிரான் மனம் வெதும்பினார். ஒரு நதிக்கரையில் ஒரு மரத்தினடியில் சாய்ந்து படுத்து யோகநித்திரையில் ஆழ்ந்தார்.

  இரும்பு உலக்கையில் மிகுந்த ஒரு சிறு இரும்புத் துண்டைக் கடலில் வீசினார்கள் அல்லவா? அந்த இரும்புத் துண்டை கடலில் ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை பிடித்தவர்கள் அதை அறுத்தபோது வெளிவந்த அந்த இரும்புத் துண்டை காட்டில் எறிந்தார்கள்.

  அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன் அந்த இரும்புத் துண்டை எடுத்து தன் அம்பின் முனையில் கூராக அமைத்துக் கொண்டான்.

  சற்றுத்தொலைவில் படுத்திருந்த கண்ணனின் பாதங்கள் ஒரு மானின் தலைபோல் அவனுக்குக் காட்சி அளிக்கவே தன் கூரிய அம்பை அதை நோக்கி எய்தான்.

  முன்பு துர்வாசர் சொன்னதுபோல் கண்ணனின் உள்ளங்கால் வழியாக அவர் ஆன்மா பிரிந்தது! அருகே ஓடிவந்து பார்த்த வேடன், தான் கொன்றது மான் அல்ல, கண்ணபிரானே என்று அறிந்து அழுது அரற்றினான்.

  கண்ணபிரான், "உன் மேல் தவறு ஏதுமில்லை வேடனே. என் விதி இவ்வாறு உள்ளது!'' என்று அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு இப்பூவுலகில் தன் சரீர யாத்திரையை முடித்துக்கொண்டு விண்ணும் மண்ணும் ஜெகஜோதியாக மின்ன, தேவர்கள் துதிபாட கண்ணபிரான் வைகுந்தம் போய்ச் சேர்ந்தார்!

  (முற்றும்)

  - மயிலை சிவா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai