Enable Javscript for better performance
இறைவன் நடனமாடிய மழபாடி- Dinamani

சுடச்சுட

  

  சோழவளநாட்டில் காவிரியின் வடகரையில் விளங்கும் பாடல்பெற்ற தலங்களில் 54 ஆவது தலம் திருமழபாடி. அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது. மார்க்கண்டேய முனிவரின் பொருட்டு இறைவன் மழுப்படை ஏந்தி நடனமாடிக் காட்சி தந்தமையால் இத்தலம் "மழுவாடி' என்று பெயர் பெற்றது.

  இதுவே பிற்காலத்தில் மழபாடி என்று வழங்கலாயிற்று என்பது தலபுராணச் செய்தியாகும். தேவாரத்தில் மழபாடி என்றே குறிக்கப்படுகிறது.

  மேலும் இப்பகுதியில் ஆண்டுவந்த மழவராயர் என்னும் பிரிவினர்களின் சேனைகள் தங்கிய இடமாதலால் மழவர்பாடி என்றாகி பின்பு மழபாடி ஆயிற்று என்ற வரலாற்றுச் செய்தியும் உண்டு.

  இத்தலம் புருஷாமிருகம் மகரிஷியால் பூஜிக்கப் பெற்றதும் திருமால், இந்திரன் ஆகியோரால் வழிபடப் பெற்ற பெருமையும் உடையதாகும். சந்திரனுக்குள்ள கய நோயை போக்கியதால் இறைவன் வைத்தியநாதர் எனப் பெறுகிறார்.

  புருஷாமிருக முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பெற்ற சிவலிங்கத்தைப் பிரம்மன் பெயர்த்தெடுக்க முயன்றபோது வச்சிரத்தம்பமாக இறைவன் விளங்கிய காரணத்தால் "வச்சிரதம்பேசுவரர்' எனவும் அழைக்கப்படுகின்றார். இத்தல அம்பிகைக்கு சுந்தரராம்பிகை, அழகம்மை, பாலாம்பிகை என்ற திருநாமங்கள் உண்டு. இத்தல தீர்த்தம் இலக்குமியின் பெயரால் "இலக்குமி தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. சோமாஸ்கந்த வடிவம் ஒரே கற்சிலையில் அமையப் பெற்றுள்ள அற்புதமான தலம்.சிலாதமுனிவரின் புதல்வராய்த் தோன்றியவர் திருநந்தி தேவராவார். நந்தீஸ்வரருக்கும் சுயசாம்பிகைக்கும் திருமணம் நடந்த இத்தலத்தில் அதனைக் குறிக்கும் விதத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நந்திதேவர் விழா பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது.

  அன்றைய நாளில் திருவையாற்று இறைவன் ஐயாரப்பர் இங்கு எழுந்தருளுவதும் திருவையாற்றில் நடைபெறும் சப்த ஸ்தான விழாவிற்கு இங்கிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்லுவதும் மரபாக இருந்து வருகின்றது. இந்த திருமண வைபவத்தை நேரில் காணும் கல்யாணமாகாத வரன்களுக்கு உடனடியாக திருமண பிராப்தி வாய்க்கும் என்பதும் அக்காரணத்தில்தான் இப்பகுதியில் "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்' என்ற சொல் வழக்கும் நிலவி வருகிறது என்பதும் சிறப்புத் தகவலாகும்.

  இத்தலம் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் பதிகம் பெற்றது.ஒரு சமயம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாலம் பொழில் என்னும் தலத்தில் தங்கியிருந்த காலத்தில் இறைவன் அவர் கனவில் தோன்றி ""மழபாடிக்கு வர மறந்தனையோ?'' என்று கூறி நினைப்பிக்க துயில் எழுந்த சுந்தரர் காவிரியைக் கடந்து திருமழபாடி வந்து இறைவனை வணங்கி,

  "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

  மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை யணிந்தவனே

  மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

  அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே'

  என்ற அற்புத திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். ஐயடிகள் காடவர்கோன் பாடலும் அருட்பா பாடலும் இத்தலத்திற்கு உண்டு.

  சோழ மன்னர்கள், விஜயநகரப் பேரரசுகள் மற்றும் மழவராய குறுநில மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட பெருமையுடையது இத்தலத்து இறைவன் ஆலயம். தற்போது பல்வேறு திருப்பணி வேலைகளை இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்புடன் அருள்மிகு வைத்தியநாதர் நற்பணி மன்றமும் கிராம மக்களும் இணைந்து உபயதாரர்கள் நன்கொடைகள் மூலம் இனிது நிறைவேற்றியுள்ளன. ஆலயம், திருக்குளம், திருத்தேர் மண்டபம் புதுப்பொலிவுடன் திகழ்கின்றது.

  ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலய இரஜதபந்தன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதிகள் மற்றும் ஸ்ரீ காசிமடம் அதிபர், திருமழபாடி ஸ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள் மடாலயத்தலைவர் ஆசிகளுடன் பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறுகின்றது. யாகசாலை பூஜைகள் இன்று (பிப்ரவரி- 6) துவங்குகின்றன. திருமழபாடி செல்ல திருவையாறு, அரியலூர் பகுதிகளிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

  தகவல்களுக்கு: 99435 30122.

  - எஸ். வெங்கட்ராமன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai