சுடச்சுட

  

  "இதிகாசங்கள் எத்தனை?' என்று கேட்டால், உடனே எல்லோரிடமிருந்தும் வரும் பதில்கள் இராமாயணமும் மகாபாரதமும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இதிகாசங்கள் இரண்டல்ல; மூன்று. சிவரகசியம், இராமாயணம், மகாபாரதம் ஆகிய மூன்று

  என்பதுதான் பண்டைய மரபு.

  இதை திருமுருக கிருபானந்தவாரியார் கூட பல சொற்பொழிவுகளிலும் கட்டுரைகளிலும் குறிப்பிட்டுள்ளார். கந்தபுராணத்தினுள் "சிவரகசியம்' என்ற ஒரு பகுதி உள்ளது. இதற்குச் "சிவரகசிய கண்டம்' என்று பெயர். இதிகாசங்களிலேயே மிகவும் உயர்ந்தது லட்சம் கிரந்தங்களைக் கொண்ட பரமேதிகாசம். அதுதான் சிவரகசியம்.

  ஆனால், சிவரகசியம் என்ற நூலின் தலைப்புக்கேற்ப அந்த இதிகாசம் இன்றுவரை ரகசியமாக, சமயக் காழ்ப்புணர்ச்சியாளர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டு, இராமாயணத்தையும் மகாபாரதத்தையுமே குறிப்பிடும்படியாக மக்களின் மனங்களையும் அறிவையும் மழுங்கச் செய்துவிட்டனர் பிற மதத்து - சமயத்துப் பெரி(சிறி)யோர்! அதனால் அது இன்றுவரை ரகசியமாகவே உள்ளது.

  சைவத்தின் பெருமையை உண்மைகளைக் கூறுவதற்குப் பல புராணங்களும், வேதாந்தங்களும், சித்தாந்தங்களும் உபநிடதுகளும், ஞான நூல்களும் இருந்தாலும், சிவரகசியத்தை மட்டும் இருட்டடிப்பு செய்வதற்கான காரணம் என்ன? அதில் அப்படி என்னதான் ரகசியம் உள்ளது? இதை மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று ஏன் நினைத்தனர்?

  அதற்கான விடைகள் எல்லாம் இந்நூலில் பொதிந்து கிடக்கின்றன. காரணம் சைவசமயத்தின் உயிர்நாடியாக உள்ளது இந்நூல். அதனால் அச்சமயத்தை வளரவிடக்கூடாது என்று நினைத்த பிற சமயத்தவரால் அன்றைக்கே இந்நூல் இதிகாசங்களில் சேர்க்கப்படாமல் புறந்தள்ளப்பட்டு, இதிகாசம் இரண்டே என்ற முத்திரைக் குத்தப்பட்டுவிட்டது.

  சிவரகசியத்தில் என்ன உள்ளன? சிவரகசியம் என்பது லட்சம் கிரந்தமுடைய பரமேதிகாசம் எனப் பெயர் பெறும். இதிகாசங்களுள் பரமேதிகாசம் உயர்ந்தது என்பது சொல்லாமலேயே உணரப்படும். இச் சிவரகசியம் பரம்பொருளாகிய சிவபெருமான் உமையம்மைக்கு உபதேசித்தருளிய உயர்வுடையது.

  சிவரகசியம் பன்னிரண்டு பிரிவுகளை உடையது. அவற்றுள் மூன்றாவது பிரிவைத் தமிழில் செய்யுள் வடிவில் செய்தருளியவர் திருவாரூரைச் சேர்ந்த ஒப்பிலாமணி தேசிகராவார்.

  இந்நூலுள் சிவபெருமானுடைய சிறப்புகளும், ஆன்மாக்களிடத்து(உயிர்கள்) அவர் நடத்தும் ஐந்தொழிற் சிறப்பும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்), இறைவனை மெய்யடியார்கள் வழிபட்டு வீடுபேறு அடையும் முக்தி மார்க்கங்களாகிய சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்ரிய நிலைகளும், சிவபூஜை, அடியார் சிவபக்தி, பிரதோஷகாலச் சிறப்பு, ஐந்தெழுத்து உண்மையும் மகிமையும், வில்வத்தின் பெருமை, உருத்திராக்க மகிமை(உயர்வு), இறைவனுடைய திருப்பெயர்கள், வேதாகமங்கள், காயத்ரி மந்திரத்தின் சிறப்பு, அதைக் கூறுபவர் அடையும் மேன்மை,சிவாகமங்கள் இவற்றின் உயர்வு, புஷ்பவிதி, சிவவிரதங்கள் தீர்த்தங்களின் மேன்மை முதலியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றின் வழி நின்று பேறுபெற்றோர் உயர்வும் கூறப்பட்டுள்ளன.

  சிவரகசியம் உமையம்மைக்குப் பின்னர் அவரால் முருகப்பெருமானுக்கும், அவரால் திருநந்திதேவருக்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது. நந்திதேவர், தம்மை வழிபட்ட திருமாலுக்கு உபேசித்தார், திருமால் பிரம்மதேவருக்கு உபதேசித்தார், பிரம்மதேவர் சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்க, சனகாதியர் நாரதருக்கும், நாரதர் வியாச முனிவருக்கும், வியாசர் சூதருக்கும் முறையே உபசேதம் செய்ய இப்படியாக... இச்சிவரகசியம் நிலவுகை அடைந்தது. இந்நூலுள் சிவஅபராதம், யமலோகம், யமதண்டனை ஆகியவைகளும் திருநந்தித்தேவர் முதலான சிவகணங்களின் வரலாறும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.

  எதனால் இந்த இதிகாசம் இருட்டடிப்பு செய்யப்பட்டு இன்றுவரை பலராலும் படிக்கப்படாமல் ரகசியமாகவே இருக்கிறது என்பது இப்போது தெள்ளத்தௌôவாக விளங்கியிருக்குமே...!

  -இடைமருதூர் கி.மஞ்சுளா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai