சுடச்சுட

  
  koothapiran

  கும்பகோணம் காரைக்கால் வழித்தடத்தில் எஸ்.புதூரிலிருந்து தெற்கே 5 கி.மீ. தூரத்தில் உள்ளது கோனேரிராஜபுரம். இதற்கு திருநல்லம் என்ற தேவாரப் பெயரும் உண்டு.  பூமிதேவியால் பூஜிக்கப்பெற்ற தலம் எனத் தலபுராணம் கூறுகிறது. இத்தலப் பெருமானை நந்திகேசுவரர், சனத்குமாரர், கன்னுவர் ஆகியோர் வழிபட்டு நலம் பெற்றனர். அப்பர் பெருமான், ஞானசம்பந்தர் ஆகியோர்களால் தேவாரப் பதிகம் பெற்றது. சோழநாட்டுத் தென்கரைத் தல வரிசையில் இத்தலம் 34 ஆவது ஆகும்.

  இத்தலத்தில் சோழப்பேரரசின் மாதரசியாக விளங்கிய மாதேவடிகள் செம்பியன் மாதேவி தனது கணவர் கண்டராதித்த சோழனின் நினைவாகக் கற்றளியாக எடுப்பித்த பெருமையுடைய அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

  மூலவர் சுயம்புலிங்கமாக அருள்மிகு உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர் என்ற திருநாமங்களுடனும், அம்மன் அங்கவளநாயகி, தேக செüந்தரி என்ற திருநாமங்களுடனும் அழைக்கப்படுகிறார்கள். பூரூரவ மன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமானாக அருள்மிகு வைத்தியநாதர் சந்நிதியையும் இவ்வாலயத்தில் தரிசிக்கலாம்.

  கல்வெட்டில் இறைவன் திருநல்லம் உடையார் என்று குறிப்பிடப்படுகிறார். இத்திருத்தலத்தில் உள்ள தனி சனீஸ்வரர் சந்நிதி விசேஷமானது. இவருக்கு வெள்ளை நிற வஸ்திரம் அணிவிக்கப்படுகிறது.

  திருநள்ளாறு செல்லும் பக்தர்கள் திருநல்லம் சென்று இந்த சனீஸ்வர பகவானை வழிபட்டபின்னரே செல்லும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததாம். 

  திருமணத்தடை நீக்குவதுடன் குட்டநோய் போன்ற தோல்நோய்களுக்கு நிவாரணம் அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது. பூமிதேவியால் அருளப்பட்ட அற்புத பெருமை வாய்ந்த சிவதுஷ்டி கரஸ்தோத்திரம் இத்தலத்திற்கு உண்டு. அதைப் பாராயணம் செய்தால் கரபயம், துஷ்டி நீங்கப்பெறலாம்.

  இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாகவும், காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜனாகவும் விளங்குகிறார்.

  சோழ மன்னர் ஒருவரது கனவில் இத்தலத்து இறைவன் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் விக்கிரகம் ஒன்றை அமைக்க கட்டளையிட்டார். அதன்படி  அமைக்க கால கெடுவுடன் சிற்பி ஒருவருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

  அச்சில் வார்க்கும்போது ஏதேனும் ஒரு குறை தோன்றி குறிப்பிட்ட கால நிர்ணயத்தில் முடிக்க முடியாததால் சிற்பிக்கு சிறைச்சேதம் தண்டனையாக விதிக்கப்பட்டது. செய்வதறியாது இறைவனையே தியானித்து அமர்ந்திருந்தார் சிற்பி. அருகில் சிலை செய்வதற்காக பஞ்சலோகக் கூழ் கொதித்துக்கொண்டிருந்தது. மேலும் அவரை சோதிக்க விரும்பாத இறைவன் வயதான சிவனடியார் உருவில் தோன்றி சிற்பியிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க, மிகுந்த மன உலைச்சலில் இருந்த சிற்பி குழப்பத்தில் அருகில் உள்ள ஐம்பொன் குழம்பை காண்பிக்கின்றார்.

  திரவவடிவமாக உள்ள அந்த கொதிக்கும் உலோகக் கூழை அந்த சிவனடியார் அருந்துகிறார். மறுகணம் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அங்கு கூழையும் காணவில்லை, சிவனடியாரையும் காணவில்லை. எம்பெருமான் ஸ்ரீ நடராஜ மூர்த்தியாக கூத்தபிரானாக விக்ரக வடிவமாக காட்சியளித்தாராம். இந்த சம்பவம் நடந்தது ஒரு மார்கழி மாத திருவாதிரை திருநாளன்று எனவும் சொல்லப்படுகிறது.

  அதுதான் நாம் இப்பொழுதும் இத்தலத்தில் காணும் ஸ்ரீ நடராஜ மூர்த்தியாகும். இந்த மூர்த்தியின் தேகத்தில் மரு, முடி, மச்சம், தேமல் போன்றவைகள் காணப்படுவதும் கால்களில் ரேகை, நரம்பு இழைகள் தென்படுவதும் உலக மகா அதிசயம். அருகில் சிவகாமி அம்மையுடன் (இதுவும் சுயம்பு மூர்த்தி) கூடிய மிகப் பெரிய வடிவமான இந்நடராஜ மூர்த்தி எப்பொழுதும் மூலஸ்தானத்தில்தான்

  இருப்பார். வெளியே உலாவருவதில்லை.

  ஆடல்வல்லானின் இந்த அற்புதக் கோலத்தை இத்தலத்தில் சென்று தரிசித்து, ஆலயத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பணிகளிலும் பங்குபெற்று பலன் பெறலாம்.

  ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகளாக இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானுக்கு ஜன-5 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மகாதிருமஞ்சனமும், 6 மணிக்கு சந்தனாபிஷேகம் தீபாராதனையுடன் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகின்றது.

  கோனேரிராஜபுரம் செல்ல, கும்பகோணத்திலிருந்து எண் 22, 58 ஆகிய நகரப் பேருந்துகள் செல்கின்றன. 

  தகவல்களுக்கு :9486510515

  ஞானஸ்கந்த குருக்கள்: 9942517385.

  - எஸ். வெங்கட்ராமன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai