Enable Javscript for better performance
பஞ்சபாண்டவர் வழிபட்ட பஞ்சலிங்க ஆலயம்!- Dinamani

சுடச்சுட

  
  panchalingam

  நமது பாரத பண்பாட்டில்  "பஞ்ச' என்று சொல்லப்படும் ஐந்துக்கு தனி மகத்துவம் உண்டு. நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவானதே இந்த உலகம்! பஞ்ச பூதங்களுக்குரிய விசேஷமானத் தலங்களில் ஒன்று இலுப்பைப்பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயம். காவிரிக்கு வடகரையில் உள்ள சோழ நாட்டு சிவஸ்தலங்களில் 30 ஆவது ஸ்தலமாக விளங்குகிறது இந்த ஆலயம்.

  இவ்வாலயத்தில் பஞ்சபாண்டவர்கள் தனித்தனியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஐந்து லிங்கங்கள் அமைந்துள்ளன. பஞ்ச பாண்டவர்களில் தருமன் அறபண்புக்கும், பீமன் பலத்திற்கும், அர்ச்சுனன் வீரத்திற்கும், நகுலன் புத்திக்கும், சகாதேவன் பக்திக்கும் பெயர் பெற்றவர்கள். இந்த ஐந்து குணாதிசயங்களுக்கு ஏற்றாற்போல் ஐந்து சிவலிங்க ஆலயங்கள் இந்த இலுப்பைப்பட்டு பழமண்ணிப் படிக்கரையில் ஒருசேர அமைந்துள்ளன.

  தருமன் வணங்கிய நீலகண்டேஸ்வரரின் பெயரினாலேயே இந்த ஆலயம் நீலகண்டேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. உலக உயிர்களைக் காப்பதற்காக நஞ்சை அருந்தி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்க அருள்பாலித்தார் நீலகண்டர். தரும சிந்தனை பெறவும் குறிக்கோள்கள் நிறைவேறவும் நீலகண்டரை வழிபட்டு பலன் பெறலாம். பாற்கடலை கடைந்த போது மட்டுமல்ல, பஞ்ச பாண்டவர்களுக்காகவும், இங்கே நஞ்சைப் போக்கி அமுதம் வழங்கியிருக்கிறார் இறைவன்.

  பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு நடத்துவதை அறிந்த துரியோதனன், சகுனியின் ஆலோசனையின்படி இங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நஞ்சைக் கலந்து விடுகிறான். அந்த நச்சுக் குளத்தில் பஞ்ச பாண்டவர்கள் நீராட வரும்போது, அதுகுறித்து அம்பாள் ஈசனிடம் முறையிடுகிறாள். அம்பிகையின் பார்வை பட்டால் அந்த நச்சுக்குளம் அமிர்த குளமாக மாறிவிடும் என்று ஈசன் கூற, அப்படியே அம்பிகை செய்கிறாள். அதனால் இங்குள்ள அம்மனுக்கு அமிர்தகரவள்ளி என்று திருப்பெயர்.

  நீலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு அருகே, அர்ச்சுனன் வழிபட்ட படிக்கரை நாதர் ஆலயம் உள்ளது. படிக்கரை நாதருக்கு அருகே மங்களாம்பிகை அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. வம்பு வழக்குகள் நீங்கவும், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும் இந்த படிக்கரைநாதரை வணங்கி வேண்டிக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!

  பீமன் வழிபட்ட மகதீஸ்வரர், (மகத் என்றால் பெரிய என்று பொருள்) ஷோடஷ லிங்கமாகக் காட்சி தருகிறார். அதாவது இந்த லிங்கத் திருமேனியில் பதினாறு பட்டைகள் இருக்கும். திதி கொடுக்க இயலாதவர்கள்,பிதுர்கடன் உள்ளவர்கள் மகதீஸ்வரரை வழிபடுவதன் மூலம் அந்தக் கடமையை நிறைவேற்றலாம் என்பது ஐதீகம்.

  அடுத்ததாக, நகுலன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம், பரமேசர்! இவரை வணங்குவதன் மூலம் வீடு, வாகன வசதி, நிலபுலன்கள் கிடைக்கும். இதேபோன்று சகாதேவன் வழிபட்ட சிவலிங்கம், முக்தீஸ்வரர்! பக்தி இருந்தால் முக்தி நிச்சயம் என்பதை இத்திருநாமம் எடுத்துரைக்கிறது. இவரை வணங்குவதன் மூலம் ஜாதக தோஷங்கள், கால தோஷங்கள் என அனைத்தும் நீங்கிவிடும்.

  பஞ்ச பாண்டவர்கள் வணங்கிய பஞ்ச லிங்கங்களை நாமும் வணங்கினால், பஞ்சமகா பாவங்களும் நீங்கி புண்ணியம் எய்தலாம் என்பர். மேலும் இங்கு கோவில் கொண்டிருக்கும் அமிர்தகரவள்ளி மற்றும் மங்கலாம்பிகையை தரிசிப்பதன் மூலம் நச்சு போன்ற தோஷங்கள் நீங்கி மகாசக்தியும், மங்களமும் நிலைக்கும்.

  இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை ஆலயத்தில் நீலகண்டேஸ்வரர் அருகே இரண்டு சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. இரண்டு இடங்களிலும் வள்ளி தெய்வானை சமேதராக முருகப் பெருமான் தெய்வீகத் திருக்காட்சி அருள்கிறார். அதோடு, மகதீஸ்வரர் சந்நிதிக்கு அருகே இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கே வலம்புரி மற்றும் இடம்புரி என இரண்டு விதங்களிலும் ஆனைமுகத்தான் நமக்கு அருள்புரிகிறார். இந்த இரட்டை விநாயகரை பஞ்ச பாண்டவர் பத்தினியான திரெளபதி வழிபட்டிருக்கிறார்.

  இவ்வாலயத்தின் ஸ்தல விருட்சம் இலுப்பை மரம்! ஆண்டுதோறும் சித்திரா பெüர்ணமி தினத்தன்று சிறப்பாக உத்சவம் கொண்டாடப்படுகிறது. அப்போது பஞ்ச மூர்த்திகளும் வீதிஉலா வருவார்கள்.

  மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோவில், கும்பகோணம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் செல்கின்றன. மணல்மேடு என்ற இடத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இலுப்பைப் பட்டு ஆலயத்தை சென்றடையலாம்.

  இழந்த செல்வம், புகழ் ஆகியவற்றை அடையவும் வாழ்வில் ஏற்றம் பெறவும் இலுப்பைப் பட்டு பழமண்ணிப் படிக்கரை பஞ்சலிங்க ஆலய இறைவனை தரிசிப்போம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai