Enable Javscript for better performance
பேரக் குழந்தைகளிடம் பேரன்பு!- Dinamani

சுடச்சுட

  
  Islamic

  பாட்டன், பாட்டிகள் பெற்ற குழந்தைகளினும் பேரக் குழந்தைகளிடம் பேரன்பு செலுத்துவர்; பேரக் குழந்தைகள் துருதுருவென விழித்து, குறுகுறு நடை நடந்து செய்யும் சிறுசிறு குறும்புகளைக் கண்டு களிப்படைவர்; அவர்களின் வாய்மொழிகளில் வாகாய் மிளிரும். புத்திசாலித்தனத்தை, புத்தி சாதுர்யத்தைப் புரிந்து பூரிப்பர். பெற்றோர் பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்ப்பர். கண்டிப்பால் சண்டித்தனம் ஏற்படாமல் சமயோசிதமாய் நல்ல பழக்கங்களை நயமாக கூறி நளினமாக கடைபிடிக்க எளிதான வழிகாட்டி எழிலுற வளர்ப்பதில் பெரும்பங்கு பாட்டன் பாட்டிகளுடையதே.

  கர்ப்பத்திலிருக்கையில் தந்தை அப்துல்லாவை இழந்த பேரன் முஹம்மது (ஸல்) அவர்களைப் பாட்டன் அப்துல் முத்தலிப் உவந்து வளர்த்தார். பேரன் பிறந்ததுமே கஃபாவிற்குத் தூக்கி சென்று முஹம்மது என்று பெயர் சூட்டி பேணி வளர்த்தார். பேரனின் எட்டு வயதில் பாட்டன் இறந்தார். பாட்டன் இறக்கும் வரை பேரனுக்குத் தொட்டிலிலிருந்து தொட்டு காட்டி கற்பித்து அடித்தளம் அமைத்த அரிய பண்புகள் நந்நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் பளிச்சிட்டன.

  ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேரக் குழந்தைகளோடு அளவளாவினார்கள். அப்பொழுது பேரன் ஹுசைன் (ரலி) அவர்களிடம் ""நம்மிருவரில் சிறந்தவர் யார்?'' என்று கேட்டார்கள். பேரன் சற்றும் தாமதிக்காமல் ""நான் தான் சிறந்தவன்'' என்றார்.

  நபி(ஸல்) - சிறப்பிற்குரிய தகுதி உன்னிடம் என்ன இருக்கிறது?

  பேரன் - நான் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வின் தூதராய் போதனை புரிந்து பூவுலகைத் திருத்த வந்த திருநபியின் பேரன். சொர்க்கத்திற்கு முதலில் செல்லும் பெண் என்னும் பேறு பெற்ற பாத்திமா நாயகியின் நன்மகன் அறிவின் பட்டினம் நான். அதன் தலைவாயில் அலி என்று அண்ணல் நபியால் புகழப்பட்ட அலி (ரலி) அவர்களின் மகன் நான்.

  நபி (ஸல்) - இத் தகுதிகளால் என்னைவிட நீ எப்படி சிறப்பு பெறுவாய்?

  பேரன் - உங்களுடைய பாட்டன், தந்தை, தாய்க்கு இல்லாத சிறப்பு என் பாட்டன், தாய், தந்தைக்கு இருக்கிறதே! பேரனின் புத்தி கூர்மையான பதிலைக் கேட்டு பூரித்தார்கள் பூமான் நபி (ஸல்) அவர்கள்.

  குறைஷியரின் கொடுமைகளால் ஏகத்துவ கொள்கையை எடுத்துரைக்க ஏற்பட்ட தடைகளைத் தகர்த்திட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கமா நகரை விட்டு மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த பொழுது உடன் சென்ற அனுக்கத் தோழர் அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வீட்டிலிருந்த ஏறத்தாழ ஆறாயிரம் திர்ஹங்களையும் எடுத்து சென்றார்கள். மறுநாள் ஹிஜ்ரத் புறப்பட்ட செய்தி அறிந்து இஸ்லாத்தை ஏற்காத அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் தந்தை அபூகுஹாஃபா மகனின் வீட்டிற்கு வந்து பேத்திகள் அஸ்மாவிடமும் ஆயிஷா இடமும் பேத்திகளைப் பரிதவிக்க விட்டு பணத்தை எல்லாம் எடுத்து சென்ற மகனை ஆத்திரத்துடன் ஆவேசமாகப் பேசி, பேத்திகள் மீது பேரன்பு கொண்டு பணமின்றி நீங்கள் எப்படி வாழ்வீர்கள்? என்ன செய்வீர்கள்? என்று கவலையுற்றார்.

  பாட்டன் அபூகுஹாஃபா வயது முதிர்ச்சியால் கண் பார்வை இல்லாதிருந்தார். அதைப் பயன்படுத்தி தந்தையை விட்டுக் கொடுக்காமல் பேத்தி அஸ்மா ஒரு துணியில் கூழாங்கற்களைக் கட்டிவைத்து பாட்டனார் கையைப் பிடித்து துணி மூட்டையை தொட்டுப் பார்க்க சொல்லி தந்தை அவர்களுக்குப் பணம் வைத்திருப்பதாக பாட்டனாரை நம்ப வைத்தார். பாட்டனும் பேத்திகளுக்குச் செலவிற்குரிய பணம் உள்ளது என்று நம்பி திருப்தியுடன் அவரின் வீட்டிற்குத் திரும்பினார்.

  பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கனுப்பி பேரக் குழந்தைகளைப் பராமரிப்பின்றி பரிதவிக்கவிடும் தற்காலத்தில், பொற்காலமாய் விளங்கிய முற்கால கூட்டு குடும்ப வாழ்வின் குதூகலத்தை உணர்ந்து அவரவர் குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு அடிப்படையை அமைத்து தருவது பாட்டன் பாட்டிகளே என்பதை எண்ணி பெற்றோரைப் பேணி குழந்தைகள் வீட்டு நாட்டு தலைவர்களாக உயர்ந்து பல்வேறு துறைகளில் பரிணமித்து பன்முகத் தன்மைகளோடு பளிச்சிட்டு வெளிச்சத்தில் வாழ வழிவகுக்க வேண்டும். 

  - மு.அ. அபுல் அமீன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai