சுடச்சுட

  
  vishnu

  மாதங்களில் சிறந்த மாதம் மார்கழி! மார்கழியை தனுர் மாதம் என்றும் சொல்வர். சூரியன் தனுர் ராசியில் பிரவேசிப்பதால் தனுர்மாதமென கூறப்படுகிறது.

  நமக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒருநாள்! இதன்படி ஒருமாதம் என்பது இரண்டு மணி நேரம். அந்த வகையில் தேவர்களின் விடியற்காலம் மார்கழி. விடியற்காலம் இறைவனை வழிபட மிகவும் சிறப்பான நேரம் என்று சாஸ்திரம் சொல்கிறது.

  பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர், ""நான் மாதங்களுள் மார்கழியாக இருக்கிறேன்'' என்று அர்ச்சுனனிடம் கூறுகிறார். பாரதயுத்தம் இம்மாதத்தில்தான் நடந்தது என்று மகாபாரதம் சொல்கிறது. பகவத் கீதை அருளப்பட்டதும் மார்கழியில்தான். பீஷ்மர், அம்பு மழையில் வீழ்ந்து, அம்புப்படுக்கையில் படுத்ததும் மார்கழியில்தான்.

  திருப்பாற்கடல் கடையப்பட்டதும் முதலில் விஷம் தோன்றியதும் அதனை சிவபெருமான் உண்டதும் மார்கழி என்று புராணங்கள் கூறுகின்றன.

  திருபாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி, மகாவிஷ்ணுவிற்கு மாலை சூடியதும் இம்மாதத்தில்தான். மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து தேவர்களுக்கு அமிர்தம் பங்கிட்டு அளிக்கும்பொழுது அசுரன் ஒருவன், தேவர்களுக்கு நடுவே அமர்ந்து அமிர்தம் பெற முயற்சிக்கையில் மகாவிஷ்ணுவான மோகினியின் சட்டுவத்தால் தலை துண்டிக்கப்பட்டு ராகு- கேது உருவானதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.

  மார்கழி மாதம் முழுக்க விடியற்காலை வேளையில் ஒருவித "ஓசோன்' பிராணவாயு இயற்கையாகவே வெளிவருகிறது. அது நம் உடல்நலத்திற்கு உகந்தது. அதனால்தான் அந்தக் காலத்தில் மார்கழி மாதத்தில் பக்திப் பாடல்கள் பாடிக்கொண்டு வீதிவலம் வந்தார்கள். அதனால் பக்தியும் அதேசமயம் பிராணவாயுவினால் நல்லபலனை அனுபவித்து தேஜஸýடன் திகழ்ந்தார்கள்.

  மார்கழி மாதம் விடியற்காலை வேளையில் எழுந்து பெண்கள், தங்கள் வீட்டின் வாசலுக்கு முன் பசுஞ்சாணத்தைக் கரைத்துத் தெளித்து, பிறகு, அந்த இடத்தைச் சுத்தம் செய்து மிகப்பெரிய கோலத்தினை இடுவார்கள். பசுஞ்சாணம் மிகச்சிறந்த கிருமிநாசினி ஆகும்.

  மார்கழி மாதம் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருஷேத்திரம் என்ற இடத்தில் போர் நடந்தபோது, பாண்டவர்களின் வீட்டையும் அவர்கள் சார்ந்த வீரர்களின் வீடுகளையும் அடையாளம் தெரிந்து கொள்வதற்காக வீட்டு வாயிலில் சாணம் இட்டு மெழுகி சுத்தம் செய்து, கோலமிட்டு, கோலத்தின் நடுவில் ஊமத்தம்பூ வைப்பதற்காக ஏற்பாடு செய்தார் வியாசர். அந்த அடையாளத்தை அறிந்து, கௌரவர்கள் பாண்டவர்களைத் தாக்குவார்கள் என்பதால் அதைத் தடுக்க தகுந்த பாதுகாப்பினை அளித்தார் பகவான் கிருஷ்ணர்.

  மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலமிட்டு பறங்கி மலர் வைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கமாகும். வீட்டில் திருமணத்திற்குத் தகுந்த பெண் இருக்கிறாள் என்பதன் அடையாளமாகவே இவ்வாறு கோலத்தின் நடுவில் மஞ்சள் நிற பறங்கிமலர் வைத்தார்கள் என்று தெரிய வருகிறது.

  மார்கழியில் வரும் மூலநட்சத்திரத்தில்தான் ஸ்ரீ ஆஞ்சநேயர் அவதரித்தார். ஸ்ரீ ஐயப்பன் அவதரித்ததும் மார்கழியில்தான்.

  குறைவற்ற மாதமான மார்கழியில் விடியற்காலையில் எழுந்து நீராடி, இறைவழிபாட்டில் ஈடுபட மனம் தூய்மை பெறும். வாழ்வும் வளம் பெறும்.

  - டி.ஆர். பரிமளரங்கன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai