Enable Javscript for better performance
\\\"மென்னடை அன்னம் பரந்து விளையாடும்\\\'\\\' ஸ்ரீவில்லிபுத்தூர்!- Dinamani

சுடச்சுட

  

  "மென்னடை அன்னம் பரந்து விளையாடும்'' ஸ்ரீவில்லிபுத்தூர்!

  By வ. ஜெயபாண்டி  |   Published on : 02nd January 2015 02:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  villiputhur

  "மின்னிய நுண்ணடையார்

  விரிகுழல் மேல் நுழைந்த வண்டு

  இன்னிசைக்கும் வில்லிப்புத்தூர் இனிதமர்ந்தாய்

  உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றார்களோ!

  இவனைப் பெற்ற வயிறுடையாள்,

  எனும் வார்த்தை எய்துவித்த இருடி கேசா...'

   - என்று பெரியாழ்வாரின் திருமொழியில் கூறப்பட்ட பெருமைக்குரியது ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்குள்ள அருள்மிகு வடபத்ரசயனர் திருக்கோயில் பாரம்பரியம் மிக்க பழம் பெருமையுடையதாகும். தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக இத்திருக்கோயிலின் பிரதான ராஜகோபுரம் விளங்குகிறது. தமிழர்களின் கலை, பண்பாட்டு, ஆன்மிக அடையாளம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயம்!

  சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் மூலவரைத்தான் பெரியாழ்வாரும், அவரது திருக்குமாரத்தி ஆண்டாளும் தினமும் பாடி மகிழ்ந்து பரவசம் எய்தனர். அந்தப் பரவசத்தாலே தமிழின் செழுமையும், இனிமையும் நமக்கு இலக்கியங்களாகக் கிடைத்துள்ளன. ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில், இந்த ஊரை,  "மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிப்புத்தூர்' என பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

  அருள்மிகு வடபத்ரசயனர் திருக்கோயில் பிரதான கோபுரம் முற்றிலும் சுதையாலானது. 11 நிலைகளுடன் சுமார் 196 அடிகள் உயரமுடையது. மாடக்கோயில் அமைப்புள்ள சந்நிதியில் மூலவர் வடபத்ரசயனர் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மீது தமது திருவடிகளை வைத்து சயனத் திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் பெரியாழ்வார், சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோருக்குத் தனிச்சந்நிதிகள் உள்ளன. மூலவரான சுவாமியின் விமானம் விமலாக்ருதி வகையைச் சேர்ந்தது. கோயிலில் உள்ள பகல் பத்து மண்டபமான கோபால விலாசம் மரச்சிற்பங்களால் ஆனது. இதில் ராமாயணம், தசாவதாரம் உள்ளிட்டவற்றை விளக்கும் மரச்சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் கருடாழ்வார் சந்நிதியும் தனியாக உள்ளது.

  இத்திருத்தலத்தின் முக்கிய விழா புரட்டாசி மாதம் பிரமோற்சவம் ஆகும்.

  ஆண்டாள் திருக்கோயில்: அருள்மிகு வடபத்ரசயனர் திருக்கோயிலின் வலது புறத்தில் ஆண்டாள் அவதரித்த இடமான பூங்காவனம் உள்ளது. இதில் உள்ள பூக்களைத்தான் பெரியாழ்வார் தினமும் பறித்து வடபத்ரசயனருக்குப் படைத்துள்ளார். ஆண்டாள் பிறந்த இடமாக கருதப்படும் கல்துளசி மாடம் புராண கால பழமை மிக்கது. ஆண்டாள் மாதந்தோறும் பூரம் நட்சத்திரத்தன்று இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பார்.

  ஆண்டாள் கோயிலின் மூலஸ்தானத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் இத்தலத்தில் ரெங்க மன்னாராக, ராஜகோபாலராக சேவை சாதிக்கிறார். இங்குள்ள மாதவிப் பந்தல் கலைநயமிக்கதாகும். ஆண்டாள் சந்நிதியின் மேலே உள்ள விமானம் கமலாக்ருதி வகையாகும். ஆண்டாள் சந்நிதியில் கண்ணாடி கிணறு  ஒன்றும் உள்ளது. ஆண்டாள் இறைவனுக்குச் சாற்றவேண்டிய மாலையை தான் அணிந்து அதை கிணற்று நீரில் அழகு பார்த்து மகிழ்ந்துள்ளார். (முகம் பார்க்கும் கண்ணாடி  அப்போது,  புழக்கத்தில் இல்லை)அக்கிணறு தற்போது பாதுகாக்கப்பட்டு கண்ணாடிப் பேழையால் மூடப்பட்டுள்ளது.

  இத்திருக்கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் சித்திரை, வைகாசி வசந்த உற்சவம், ஆனி மாதம் பெரியாழ்வார் திரு ஆனி ஸ்வாதி மகோத்சவம், திரு ஆடிப்பூர உற்சவம் பிரசித்தி பெற்றது.      ஆவணி மாதம் பெரிய பெருமாளுக்கு பவித்ர உற்சவமும், புரட்டாசியில் வடபத்ரசயனருக்கு பிரமோற்சவமும் நடைபெறும். கார்த்திகையில் தீப உற்சவம், மார்கழி முதல் நாள் முதல் மாதம் முடியும் வரை திருப்பள்ளி எழுச்சி வெகுசிறப்பாக நடைபெறும். இம்மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உற்சவம் நடைபெறும். பகல் பத்து ஆரம்ப நாளில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னாருடன் சந்நிதி தெருவில் உள்ள பெரியாழ்வார் திருமாளிகைக்கு எழுந்தருளி, பச்சை பரத்தல் (காய்கறிகளை பரப்பி வைத்தல்) கண்டருள்கிறார். இதில் ராப்பத்து முதல் நாளில் வைகுண்ட ஏகாதசி நடைபெறும். அன்று பரமபத வாசல் திறக்கப்படும்.

  மாசி மகத்தில் தெப்போற்சவமும் பங்குனி மாதம் ஆண்டாளுக்கு திருக்கல்யாண பிரமோற்சவமும் நடைபெறும். உற்சவத்தில் ஒன்பதாம் நாள் மாலை ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான மக்கள் கூடி தரிசனம் செய்வர். 

  வராகச் சேக்ஷத்திரமான இத்தலம், 108 பாண்டிய நாட்டுத் திருப்பதிகளில் முக்கியமானதாகும். ஆண்டாளுக்குச் சூட்டிய திருமாலையை தினமும் அருள்மிகு வடபத்ரசயனருக்கு  சூட்டுகிறார்கள். மற்ற தலங்களில் ஆண்டாள் பூதேவி அம்சமாகவே பாவிக்கப்படுகிறார். ஆனால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் மட்டும் பெருமாள் ராஜகோபாலனாகவும் (கண்ணனாக) ஆண்டாள் ருக்மணியாகவும் பாவிக்கப்படுகிறார். இதனால் ஆண்டாள் மகாலட்சுமியின் அம்சமாக விளங்குகிறார்.

  இத்தலத்தில் திருமணமாகாதவர்கள் தாயாரைச் சேவித்துச் சென்றால் திருமணம் கைகூடும். அதோடு திருமண விஷயங்களை இத்திருத்தலத்தில் வைத்து பேசுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இங்கு அளிக்கப்படும் அமிர்த கலசத்தைப் பெறுவோர் குழந்தைப் பாக்கியம் பெறுவர் என்பது நம்பிக்கை!

  தொடர்புக்கு: 04563 260254.

  - வ. ஜெயபாண்டி.

  படங்கள்: ப. குமார பாண்டியன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai