Enable Javscript for better performance
வால் நட்சத்திரமும்  மூன்று அறிஞர்களும்...- Dinamani

சுடச்சுட

    
    sera

    இயேசுகிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் விதமாக விண்ணில் ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது என்று படித்திருப்பீர்கள். வானவெளியில் வால் நட்சத்திரங்கள் தோன்றும்போதெல்லாம் உலகில் பல அபூர்வ நிகழ்ச்சிகள் நடந்தன என்பதை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். 

    அப்படித்தான் உலக மக்களுக்கு  அன்பைப் போதிக்க வந்த இயேசுகிறிஸ்து பிறந்தபோதும் அபூர்வமான இந்த நிகழ்வு நடந்தது. இயேசு கிறிஸ்து, கடவுளின் மகன் என்கிற அதிசயச் செய்தியை அறிவிப்பதற்காகவே இந்த வால் நட்சத்திரம் தோன்றியது. இயேசுவின் பிறப்பு,  வரலாற்றையே புதிதாக எழுதியது. கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு.) என்றும் கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின் (கி.பி.) என்றும், இப்போதும் வரலாறு எழுதப்படுகிறது. இத்தகைய அபூர்வ நிகழ்வுக்குக் காரணமான இயேசுகிறிஸ்து உலக மக்களுக்குப் புதிதாக ஒரு செய்தியைச் சொல்ல வந்தார். இறைவனின் அரசாட்சி என்பது அன்புள்ளம் கொண்ட மக்களைக் கொண்டதாக அமையும் என்பதுதான் அந்தச் செய்தி.

    மக்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும்போது உலகில் சமாதானம் நிரந்தரமாகக் குடியேறும் என்பதைத்தான் இறைவனின் அரசாட்சி என்று இயேசு அறிவித்தார். இந்தச் செய்தியைத்தான் அவருடைய சீடர்களான கிறிஸ்தவ மக்கள் இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    உலகில் சமாதானம் நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் நல்ல மனிதர்கள் எல்லாருடைய ஆசையாகவும் இருக்கும். எனவே மக்கள் அனைவரும் இதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தால் உலகில் சண்டை சச்சரவுகளுக்கு இடம் இல்லாமல் போய்விடும்.

    இயேசுவின் பிறப்பின்போது தோன்றிய அந்த வால்நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து மூன்று கீழ்த்திசை அறிஞர்கள் நெடுந்தூரம் பயணம் செய்து, கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேம் ஊரை அடைந்து, குழந்தை இயேசுவைத் தரிசித்துச் சென்றார்கள் என்பது பற்றியும் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

    இந்த மூன்று அறிஞர்களும் குழந்தை இயேசுவுக்குச் சில பொருட்களைக் காணிக்கையாகக் (பரிசாக) கொடுத்தார்கள். அவை  என்னவென்று தெரியுமா

    பொன், தூபம் மற்றும் வெள்ளைப் போளம் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இந்தப் பொருட்களை அந்த அறிஞர்கள் இயேசுவுக்குப் பரிசளிக்க என்ன காரணம் தெரியுமா

    பொன் அதாவது தங்கம்... விலையுயர்ந்த உலோகம். அக்காலத்தில் அரசர்களிடம் மட்டுமே தங்கம் மிகுதியாக இருக்கும். தங்க கிரீடம் மற்றும் ஏராளமான தங்க ஆபரணங்களை அரசர்கள் அணிந்திருப்பார்கள்.

    இயேசுகிறிஸ்து ஒரு சாதாரண மனிதர் அல்ல... அவர் ஓர் அரசர்... அரசர்களுக்கெல்லாம் அவர் அரசர் என்பதை உணர்த்துவதற்காகத்தான் அவருக்குத் தங்கத்தைக் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.

    அடுத்தது தூபம். தூபம் என்றால் சாம்பிராணியைக் குறிக்கும். இறைவனை ஆராதிக்கும்போதும் வணங்கும்போதும் அவருக்குத் தூபம் போடுவது எல்லா இனத்தவர்களிடமும் வழக்கமாக இருக்கின்றது. இயேசுவும் அப்படித்தான்... அவர் இறைவனின் மகன் என்றுதான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவர்கள் அனைவரும் இதை உறுதியாக நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைதான் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு ஆதாரம். இறைவன் ஒருவனுக்குத்தான் மக்கள் சாம்பிராணிப் புகை போட்டு அவரைப் போற்றிப் புகழ்ந்து மகிழ்கிறார்கள். இதைத்தான் அந்த மூன்று அறிஞர்களில் ஒருவர், தூபம் என்ற காணிக்கை மூலம் நமக்கு அறிவிக்கிறார்.

    மூன்றாவதாக வெள்ளைப் போளம். இதுவும் ஒருவகை வாசனைத்திரவியம்தான். ஆனால் இறந்தவர்களைப் புதைக்கும்போது அவர்களது உடலில் தடவப்படும் வாசனைத் திரவியம். அக்காலத்தில் பாலஸ்தீனத்திலும் அதன் சுற்றுப் புறங்களிலும் இந்த வழக்கம் இருந்தது.

    சரி, பிறந்த குழந்தைக்கு ஏன் இந்த வெள்ளைப் போளத்தை அந்த அறிஞர் பரிசாக அளித்தார்

    பின்னாளில் இயேசுகிறிஸ்து மக்களுக்காகத் தனது இன்னுயிரைக் கொடுக்கப் போகிறார் என்பதை அந்த அறிஞர் தீர்க்கதரிசனமாகத் தெரிந்து வைத்திருந்தார். அதனால்தான் குழந்தை இயேசுவுக்கு அவர் வெள்ளைப் போளத்தைப் பரிசாக அளித்தார்.

    அந்த அறிஞர்கள் இயேசுவுக்குத் தந்த மூன்று காணிக்கைகளுமே அர்த்தம் பொதிந்தவைதான் என்று நாமும் உணர்ந்து கொள்வோம்.

    - ரொசிட்டா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai