Enable Javscript for better performance
அய்யன் அமர்ந்தது அரண்மனைக்காரத் தெருவினிலே...- Dinamani

சுடச்சுட

  
  ayyappa

  இன்று கோடானு கோடி பக்தர்கள் தரிசனம் செய்ய விழையும் ஸ்ரீ ஐயப்ப பகவான், சபரிமலையில் பிரதிஷ்டை செய்யும் முன்பு சிறிது காலம் சென்னையில் வாசம் செய்தார் என்பது ஆச்சரியமானதும் பெருமைத் தரக்கூடியதுமான தகவலாகும். ஆம்! அந்த அய்யன் அமர்ந்தது வட சென்னை, அரண்மனைக்காரத் தெருவில் உள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயிலாகும்.

  திருமால் ஆமைவடிவோடு சிவபெருமானை வழிபட்ட தலம் காஞ்சியிலுள்ள கச்சபேஸ்வரர் ஆலயம் (கச்சபம் என்றால் ஆமை). இந்த கச்சபேஸ்வரரை அக்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியில் துபாஷியாகப் பணியாற்றிய தளவாய் செட்டியார் என்ற அன்பர் தினமும் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.

  ஒரு நாள் காஞ்சி சென்ற அவர் இயற்கையின் சீற்றத்தால் சென்னை திரும்பமுடியவில்லை. அவர் செய்யவேண்டிய பணிகளையும் செய்ய முடியாததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார்.

  அவரது பக்தியினை உலகுக்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டான் இறைவன். சென்னையிலேயே எழுந்தருளி தினசரி தரிசனம் செய்ய அருளினார். சென்னை திரும்பிய செட்டியார், அவரது பணிகள் சென்னையில் செய்து முடித்திருப்பதைக் கண்டாராம்.

  தன் நன்றிக்கடனாக 1725- ஆம் ஆண்டு அரண்மனைக்காரத் தெருவில், காஞ்சியில் இருப்பது போன்று சென்னையிலும் ஸ்ரீ கச்சாலீஸ்வரர் திருக்கோயிலை அமைத்தார். பின்பு ஏற்பட்ட வளர்ச்சியில் இந்த கோயில் தற்போது சென்னையில் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.

  சபரிமலையில் வனப்பகுதியில் ஏற்பட்ட பெருந்தீ விபத்தினால் ஐயப்பன் ஆலயத்திற்கு பங்கம் ஏற்பட்டு புணருத்தாரணம் செய்து புதுப்பிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கான பணிகள் 1952- ஆம் ஆண்டு நடைபெற்றது.

  அவ்வமயம் அங்கு பிரதிஷ்டை செய்யப்படவேண்டிய அய்யனின் திருமேனி (பஞ்சலோகமூர்த்தி) கரிக்கோல விஜயமாக இந்தியாவிலுள்ள பல ஆலயங்களுக்கு எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டு சென்னையில் எங்கு செல்வது என்று யோசனை செய்தபோது அரண்மனைக்காரத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கச்சாலீஸ்வரர் ஆலயத்தில் சிவாச்சாரியராக இருந்த ஜோதிட கலாரத்தினம் ஸ்ரீ சாம்பசிவ சிவாச்சாரியார் ஐயப்ப பகவானை சகல மரியாதையுடன் வரவேற்று ஆலய மண்டபத்தில் வைத்து பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார்.

  பல முக்கிய பிரமுகர்களும் இதற்கு பக்கபலமாக இருந்து உறுதுணை புரிந்தார்கள். வேத கோஷங்கள், பாராயணங்கள், நாம சங்கீர்த்தனம், சரண கோஷம் முழக்கத்துடன் மூன்று நாட்கள் ஐயப்ப பகவான் சென்னை நகர பக்தர்களின் அரவணைப்பில் இருந்து அருள் மழை பொழிந்து சென்றார்.

  இந்த தகவல் சென்னை கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்கு வெளியே உள்ள தகவல் பலகையில் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஐயப்பனின் இந்த புனிதப் பயணம் "மதராஸ் ஐயப்ப சேவா சங்கம்' என்ற ஆன்மிக அமைப்பு உருவாக வழிவகுத்தது. மேலும் இந்த சங்கத்தின் மூலம் பகவான் தங்கிச் சென்ற அதே இடத்தில் பஞ்சலோக விக்ரகம் உடனடியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

  முதன் முதலில் சென்னையில் ஸ்ரீ ஐயப்ப பகவானுக்கு தனிச் சந்நிதி அமையப்பெற்றது இவ்வாலயத்தில்தான் என்று சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் மகரதீப மகோத்சவம் விசேஷ பூஜையுடன்,  இன்னிசை நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. பல பிரபல வித்வான்கள் இந்த இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அறுபத்துமூன்றாம் ஆண்டு மகரதீப மகோத்சவம் ஜனவரி 8 இல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மகாதீபம் ஜனவரி 14 ஆம் தேதியன்று சிறப்பு ஹோமங்கள், ருத்ராபிஷேகத்துடன் காலை 5 மணியிலிருந்து தொடங்கி நடைபெற்று, மாலை 6.30 மணிக்கு ஸ்ரீ ஐயப்ப பகவானுக்கு

  மகரதீபமும், தீபாராதனையும் நடைபெற்று வீதியுலா வாண வேடிக்கை என வெகுவிமரிசையாக இந்த உத்சவம் முடிவடையும்.

  தகவல்களுக்கு: 98400 24995/ 98400 14588/

  94443 82491.

  - எஸ். வெங்கட்ராமன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai