Enable Javscript for better performance
புனித திருமுழுக்கு யோவான் அருளப்பர்!- Dinamani

சுடச்சுட

    
    jesus

    ஒரு வால்நட்சத்திரம் இறைமகன் இயேசுவின் பிறப்பை உலகுக்கு அறிவித்தது. அதே போல இயேசுவின் வருகையைப் பற்றிக் கூறி அவரை அறிமுகப்படுத்தியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் புனித யோவான் அருளப்பர்.

    இவர் இயேசுவின் தாயான புனித மரியாளின் உறவினராகிய எலிசபெத் அம்மாளின் மகன். மிகவும் வயதான காலத்தில் இறைவனின் அருளால் எலிசபெத் குழந்தைப் பேற்றைப் பெற்றார்.

    இயேசுவின் பிறப்பு பற்றி மரியாளுக்குத் தெரிவித்த காவல் தூதர் கபிரியேல், அருளப்பரின் பிறப்பு பற்றியும் முன்னதாக அறிவித்தார். அதைக் கேட்ட மரியாள் தனது உறவினராகிய எலிசபெத்துக்கு உதவி செய்வதற்காக, அவரது வீட்டிற்குச் சென்று, சிறிது காலம் அங்கே தங்கியிருந்து அவருக்குத் தன்னால் முடிந்த பணிவிடைகளைச் செய்தார் என்று விவிலியம் கூறுகிறது.

    இப்படி இறைவனின் அபூர்வக் கொடையினால் பிறந்த இந்த அருளப்பர் என்னும் புனிதர் வளர்ந்து பெரியவனாகியபோது தனது வீட்டைத் துறந்து சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டார். விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு, மிகவும் எளிய உணவைப் பழக்கத்தை மேற்கொண்டு ஒரு துறவியாக வாழ்ந்து, நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார் என்றும் அந்தச் சமயத்தில் மக்களுக்கு இயேசுவின் வருகையைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார் என்றும் பைபிள் கூறுகிறது.

    இவர் மக்களையெல்லாம் பாவ வழிகளிலிருந்து மனம் திருத்தி நல்வழிப்படுத்தினார். மக்களுக்கு நீரினால் ஞானஸ்நானம் கொடுத்து, அவர்களை இறைவன் மீது பக்தி கொண்டவர்களாக மாற்றினார்.

    இத்தகைய செயல்களில் இவர் ஈடுபட்டு வரும்போதுதான் இயேசுவின் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பையும் இவர் செய்தார். இவர் அப்போது கூறியது : நான் உங்களுக்கெல்லாம் நீரினால் ஞானஸ்நானம் கொடுக்கின்றேன். ஆனால் எனக்குப் பிறகு ஒருவர் வருவார். அவர் என்னைவிட மிகப் பெரியவர். அரும்பெரும் செயல்களையெல்லாம் உங்களுக்காகச் செய்து காட்டுவார். அவருடைய கால் செருப்பின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதி படைத்தவன் அல்ல. அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியின் மூலம் நெருப்பினால் ஞானஸ்நானம் கொடுப்பார். அப்போது உலக மக்கள் அனைவரும் அவரைப் போற்றுவர். அவரது அரசாட்சி இந்த உலகில் எல்லாக் காலங்களிலும் நிலைபெற்று நிற்கும்.

    ஒருநாள் யோர்தான் நதிக்கரையில் இப்படி அருளப்பர் போதித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் இயேசுகிறிஸ்து அந்தப் பக்கமாக வந்தார். அருளப்பரைப் பார்த்ததும் நீரில் இறங்கி, தனக்கும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேசுகிறிஸ்து கேட்டுக் கொண்டார்.

    அப்போது இயேசுகிறிஸ்து யாரென்பதை உணர்ந்த அருளப்பர் சற்றே தடுமாறினார். இறைமகனான உமக்கு நான் ஞானஸ்நானம் கொடுப்பதா என்று இயேசுவிடம் கேட்டார். இயேசு மீண்டும் கேட்டுக் கொண்டதன்படி, அவருக்கு அருளப்பர் ஞானஸ்நானம் கொடுத்தார். அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது : இவரே என் மகன். இவரில் நான் பூரிப்படைகிறேன்...

    அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் மகிமையைப் பற்றி உணர்ந்து கொண்டனர். அனைவரும் அந்த இடத்திலிருந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர் என்பது வரலாறு.

    அருளப்பர் வாழ்ந்த காலத்தில் நாட்டின் அரசனாக இருந்தது ஏரோது என்னும் மன்னன். இந்த அரசன் பல கொடுமையான பாவங்களைச் செய்ததால் அருளப்பர் அவனைக் கண்டித்தார்.

    இதனால் கோபமுற்ற அரசன் அருளப்பரைச் சிறையில் அடைத்தான். ஆனாலும் மக்கள் எல்லோரும் அருளப்பரைப் போற்றி வணங்கி வந்ததால் அரசனுக்கு அருளப்பரின் மீது மிகுந்த மரியாதை இருந்தது.

    ஆனால் ஏரோது அரசனின் இரண்டாம் மனைவியின் சதியினால் அருளப்பரின் தலை வெட்டப்பட்டு அவர் இறைவனுக்காகத் தனது இன்னுயிரை இழக்க நேர்ந்தது.

    இப்படி இறைவனுக்காக வாழ்ந்து, இறைமகனுக்கே திருமுழுக்கு (ஞானஸ்நானம்) கொடுத்து, தனது உயிரையும் கொடுத்த அருளப்பரை, திருமுழுக்கு யோவான் என்று கிறிஸ்தவ மக்கள் போற்றிப் புகழ்கிறார்கள்.

    - ரோஹன் பின்னி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai