சுடச்சுட

  
  malai

  பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் சம்புவராயர்கள் ஆண்டனர். அவர்களின் கோட்டை இன்றில்லை. ஆனாலும் படவேடு பகுதியைச் சுற்றியுள்ள மலைகளில் அவர்கள் கட்டியுள்ள கோயில்கள், அவர்களை இன்றும் நமக்கு அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

  படவேடு ரேணுகாம்பாள் கோயில் அனைவரும் அறிந்ததே! இக்கோயில் திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட மக்கள் பலருக்கும் குலதெய்வம்! இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள்கூட, முதலில் இங்குள்ள மலைகளின் உச்சியில் கோயில்கள் இருப்பதை அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தவர்கள் அங்கே சென்று வழிபட ஆர்வமும் காட்டவில்லை. காரணம், மலைக்குச் செல்ல சரியான வழிகள் இல்லாததுதான். இந்த நிலையில், மிகச் சிலரே கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோயிலை அறிந்திருந்தனர்.

  மலைக்கிராமமான எலம்மபட்டு, செண்பகத்தோப்பு அணை ஆகியவற்றுக்கும் மேலே, மலை உச்சியில் கோயில் இருக்கிறது. உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடியினர் மட்டுமே இங்கே முக்கிய நாள்களில் வந்து வழிபாடு செய்துவந்தனர். இந்த நிலையில், அங்கே ஒரு துறவி வந்து சில நாள் தங்கினார்.

  "மனம் தளராதீர்கள். 48 பவுர்ணமிகள் தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள். இக்கோயிலுக்கு வழி பிறக்கும்' என்று அவர் சொன்னார்.

  பக்தர்கள் தொடர்ந்து வழிபாட்டை செய்து முடித்த சமயத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணுசீனிவாசன் படவேடு வந்தார். படவேடு ரேணுகாம்பாள் கோயிலுக்கு கொடை அளிக்கவும் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் வந்த அவரிடம் கிராம மக்கள் பேசியபோது, கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோயில் பற்றியும் சொன்னார்கள். கோயிலை பார்க்க விரும்பினார்.

  ஆனால் கோயிலுக்கு செல்வது சிரமம் என்று சொன்னார்கள் கிராம மக்கள். தூளி கட்டியாவது போய்விடுவோம் என்று எழுந்தார். சாய்ந்துகிடந்த கோயில் கொடிமரமும் எழுந்தது. இந்தக் கொடிமரம் ஒரே கல்தூண். அதோடு கொடிமரம் சாய்ந்து மண்ணோடு மண்ணாகக் கிடந்தது. சம்ப்ரோக்ஷணத்துக்காக இதை நிமிர்த்த பெரும்பாடு பட்டு நிமிர்த்தினார்கள். 1986 இல் இந்நிறுவனத்தின் மூலமாக வேலைகள் நடைபெற்று 1993 ஆம் ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நடந்தேறியது.

  கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் அமைந்துள்ளது கோட்டைமலை ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில். கருவறையில் குழலூதும் கண்ணனாகவும் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கிய பெருமாளாகவும் இருக்கிறார் ஸ்ரீ வேணுகோபால சுவாமி. உடனுறைபவர்களாக சத்யபாமா, ருக்மணி அமைந்துள்ளனர். ஆளுயர தெய்வ மூர்த்தங்கள் பக்தர்களை வசீகரித்து ஆட்கொள்கின்றன.

  சுந்தரவல்லித் தாயார் சந்நிதி அருகில் தனியாக உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனியாக சந்நிதி இல்லை.

  கோயிலின் புராதன தன்மை மாறாமல் செப்பனிட்டு, புதிதாக சுற்றுச்சுவர் எழுப்பியதுடன் மலையேறும் மண்பாதையை டிராக்டர் செல்லும் அளவுக்கு அகலப்படுத்தியுள்ளனர். அதோடு பாதுகாப்பான இரும்பு நடைமேடையை அமைத்துத் தந்துள்ளனர். செலவுகள் முழுவதையும் டிவிஎஸ் நிறுவனமே செய்துள்ளது.

  தற்போது ஒவ்வொரு சனிக்கிழமையும் மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாரத்திற்கொரு முறை இரண்டு குருக்கள் வந்து முறைப்படி பூசை செய்கின்றனர். புரட்டாசி மாதத்தில் வெள்ளிக்கிழமையே மலைமீதுவந்து தங்கியிருந்து பூஜை செய்கின்றனர். வழிபாடு நிறைவடைந்ததும் பக்தர்களுக்கு அங்கேயே அன்னதானம் வழங்கப்படுகிறது.

  மலைப்பாதையில் எல்லோராலும் ஏற முடியாது. ஆகவே, பூசைப் பொருள்களை ஏற்றிச்செல்லவும் குருக்கள், உபயதாரர்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்களை அழைத்துச் செல்லவும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டிராக்டரில் முன்பதிவு செய்து செல்லலாம். மலையேறி வரும் பக்தர்கள், மலை அடிவாரம் வரை ஆட்டோவில் சென்று, அங்கிருந்து மலைப்பாதையில் நடந்து, பிறகு 350 படிகள் ஏறி, கோயிலுக்குச் செல்ல வேண்டும்.

  மலைக்கோயிலுக்குச் செல்ல: வேலூர்- போளூர், திருவண்ணாமலை வழித்தடத்தில் சந்தவாசல் நிறுத்தத்தில் இறங்கி, படவேடு கோயிலுக்குச் செல்ல நகரப்பேருந்துகள் மற்றும் ஆட்டோவில் செல்லலாம்.

  கோட்டைமலை கோயிலுக்குச் செல்ல, மலைஅடிவாரம் வரை ஆட்டோவில் சென்று, அதன்பிறகு மலைப்பாதையில் நடந்தாக வேண்டும்.

  டிவிஎஸ் கோவில்கள் அறநிலைய டிராக்டரில் செல்ல விரும்புவோர் முன்பதிவு செய்ய தொலைபேசி: 9789786445

  - இரா. சோமசுந்தரம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai