Enable Javscript for better performance
ஸலவாத்தின் நன்மைகள் - Dinamani

சுடச்சுட

  
  Islamic

  நாற்பது வயதில் நபித்துவம் (இறை தூதை) பெற்று இருபத்து மூன்று ஆண்டுகளில் இகத்தின் பெரும் பகுதியில் இஸ்லாத்தைப் பரப்பிய ஆன்மிகத் தலைவராக மட்டுமின்றி ஆட்சியும் புரிந்த மாட்சியுடைய மாநபி முஹம்மது (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் மூன்றாவது மாதமான ரபியுல் அவ்வல் பிறை 12 இல் பிறந்தார்கள். பிரிய நபி (ஸல்) அவர்கள் பிறந்த நாளே மீலாது நபியாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மீலாது நபி 04.01. 2015 இல் கொண்டாடப்பட்டது.

  நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில் அவர்களை மதித்து அவர்களுக்கு மரியாதை செய்து அவர்களின் வழியில் வாழ்ந்திட அல்லாஹ் அருமறை குர்ஆன் 49 -1 முதல் 5 ஆவது வசனங்கள் வரை வலியுறுத்துகிறான். அவர்களின் மறைவிற்குப்பின் அவர்கள் காட்டிய வழியில் வாழும் நாம் அவர்களுக்கு மரியாதை செய்யும் முறையில் அவர்களின் மீது ஸலவாத்து உரைக்க வேண்டும். ஸலவாத்து என்பது சாந்த நபியைப் போற்றி புகழும் பாயிரங்களைப் பாராயணம் செய்து ஓதுவதும் பாடமில்லாதவர்கள் பார்த்து ஓதுவதும் ஆகும்.

  ""நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்து சொல்கிறார்கள். விசுவாசிகளே நீங்களும் நபிகள் மீது ஸலவாத்து சொல்லி ஸலாம் கூறி கொண்டிருங்கள்'' என்று திருக்குர்ஆனின் 33 -56 ஆவது வசனம் கூறுகிறது.

  அல்லாஹ்வால் படைக்கப்பட்ட பாருலகில் அவனால் படைக்கப்பட்டவைகள் அனைத்தும் அல்லாஹ்வைத் துதிக்க. அல்லாஹ்வும் அவனின் மலக்குகளும் (வானவர்கள்) மாநபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துரைப்பதைச் சாற்றும் போற்றற்குரிய குர்ஆனின் பொற்புடைய வசனத்தின் அற்புதத்தை அறிந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து உரைக்க வேண்டும்.

  இறை வேட்டலின் துவக்கமும் முடிவும் ஸலவாத்தாக இருக்க வேண்டும். ஏந்தல் நபி (ஸல்) அவர்களை எழிலாய் ஒருமுறை வாழ்த்தினால் வல்லோன் அல்லாஹ் ஒன்றுக்குப் பத்தாக நமக்கு நல்லருள் புரிகிறான். மாநபி (ஸல்) அவர்களை மனதார புகழ்பவர்கள் மறுமையில் இறுதி நபியோடு இருப்பதை உறுதி செய்கிறார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) மற்றும் அனஸ் (ரலி) நாளும் நந்நபி மீது நற்ஸலவாத்து உரைத்து நாளை மறுமையில் நற்பலனைப் பெறுவோம்.

  பெருமானார் நபி (ஸல்) அவர்களின் பெயரை மொழிபவரும் மொழிய கேட்பவரும் உயரிய ஸலவாத்தை உடனே உரைக்க வேண்டும்; உரக்கவும் உரைக்கலாம்; மெல்லவும் சொல்லலாம். இட, கால சூழலைப் பொறுத்து எப்படி சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லலாம். இமாம் தஹாலி (ரஹ்) அவர்களின் இக்கருத்து பஹ்ருல் உலூம் என்ற நூலில் குறிப்பிடப்படுகிறது. ""நபிகள் மீது நற்ஸலவாத்து அபிமானத்துடன் சொல்வது நெருப்பை அணைக்கும் நீரைப் போல நம் பாவத்தைப் போக்கும்'' என்று அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

  திரு நபிகளாரின் திரு பெயர்களான முஹம்மது, அஹ்மது, ஹாமீது மஹ்மூது ஆகிய பெயர்களுக்கு முறையே புகழுக்குரியவர், புகழ்மிக்கவர், புகழ்பவர், புகழப்படுபவர் என்று பொருள்.

  உளத்தூய்மை, உடல் தூய்மை, உடை தூய்மை, உறைவிட தூய்மை எப்பொழுதும் பேணப்படுவதுபோல் ஸலவாத்து சொல்லும் பொழுதும் ஒல்லும் வகையானே ஓவாது பேணப்பட வேண்டும். எனினும் மனப்படாம் உடையோர் பயணத்திலும் நோயாளிகள் படுக்கையிலும் ஓதுவதற்குத் தடையில்லை.

  ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் (ரலி), அன்னை ஆயிஷா (ரலி), இமாம் ஷாபிஈ (ரஹ்) இமாம் ஸýயூத்தி (ரஹ்) ஹழ்ரத் செய்யது அஹ்மது தஹ்லான் (ரஹ்) அபூஸயீதுல் குத்ரீ (ரஹ்) இப்னு ஹஜர் (ரஹ்) ஹஸன் பஸரீ (ரஹ்) செய்யிது அஹ்மது கபீர் ரிபாயி முதலிய நபி தோழர்கள், நபி வழி நடந்து நற்போதனை புரிந்த நல்லறிஞர்கள் ஸலவாத்தின் மகிமையை அகிலம் அறிய எடுத்துரைத்தவற்றிலிருந்து தொகுத்த ஸலவாத்துரைப்பதின் நன்மைகளில் சில.

  பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அதனால் குற்றங்கள் அழிக்கப்படுகின்றன. இம்மை மறுமை இரண்டிலும் நன்மை நம்மை வந்தடையும். ஆபத்திலிருந்து பாதுகாப்பு பெறலாம். தர்மம் செய்ய பொருளற்றோர் ஸலவாத்து ஓதுவதால் தர்மம் செய்த பலனைப் பெறலாம். பொருளற்றோர் பொருள் வளமும் பெறுவர். ஓதுவோரின் தேவைகள் நிறைவேறுகின்றன; வறுமை அகல்கிறது; ஓதுவோரோடு அவர்களின் மக்களும் வாரிசுகளும் பயன் பெறுவர். பகையை போக்கி உறவை உறுதிபடுத்துகிறது.

  நற்பேற்றை நல்கும் ஸலவாத்தை நாளும் ஓதி பொற்புடைய பூமான் நபி (ஸல்) அவர்களின் அற்புத ஆசியைப் பெற்று அகிலம் ஆளும் அல்லாஹ்வின் அருளையும் பெறுவோம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai