Enable Javscript for better performance
அண்மையில் அல்லாஹ்- Dinamani

சுடச்சுட

  
  Islamic

  அல்லாஹ் அவனியில் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறான்; யாவற்றையும் அறிகிறான். அனைத்தும் அவன் நாடியபடியே நடக்கின்றன. அவரவர் செயலுக்கேற்ற பலனை அவரவருக்கு அளிக்கிறான். இதனை உறுதிபடுத்துகிறது உயர் குர்ஆனின் 50 -16 ஆவது வசனம். ""நிச்சயமாக நாமே மனிதனைப் படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் உணர்வுகளையும் நாம் அறிவோம். அவன் பிடரியில் உள்ள இரத்த நரம்பினும் நாம் அவனுக்கு மிக சமீபமாக இருக்கிறோம்''.

  இஸ்லாத்தை போதித்த இனிய நபி (ஸல்) அவர்களிடம் ஏகத்துவத்தை ஏற்காது எதிர்வாதம் புரிந்தோரின் புதிரான கேள்விக்கும் புரியும் பதில்களைப் பகிர்ந்த பண்பு நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றும் அடியார்களுக்கும் அல்லாஹ்வின் அண்மையை அறிவிக்க சொன்ன அருமறை குர்ஆனின் திருவசனம் 2:186 கூறுகிறது. ""நபியே! உங்களிடம் என் அடியார்கள் என்னைப் பற்றி கேட்டால் சொல்லுங்கள். நிச்சயமாக நான் சமீபமாக இருக்கிறேன். எவர் என்னை அழைப்பினும் அழைப்பாளருக்கு விடையளிப்பேன். என்னிடமே கேட்கட்டும். என்னை நம்புவோர் நேர்வழி பெறுவர்''.

  இறைமறையின் இவ்வசனப்படி இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அண்மையை அறிவித்த நிகழ்ச்சி. கைபர் போரில் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடன் சென்ற தோழர்கள் மேட்டில் ஏறும் பொழுதும் கணவாயில் இறங்கும் பொழுதும் உரத்த குரலில்

  அல்லாஹு அக்பர் (இறைவன் மிக பெரியவன்) என்று உரக்க முழங்கினர். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ""நீங்கள் காது கேளாதவனையோ, இங்கில்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுறுபவனையும் நற்பார்வை பார்ப்பவனையுமே அழைக்கிறீர்கள். உங்களின் வாகனமான ஒட்டகத்திற்கு எவ்வளவு நெருக்கத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ, அதனினும் நெருக்கமாக உங்கள் அருகில் இருக்கும் அல்லாஹ்வையே அழைக்கிறீர்கள். மென்மையாக மேலோனை அழைத்தாலே மேன்மை தருவான் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்ததை ""தப்ஸீர் இப்னு கஸீர்'' என்னும் திருக்குர்ஆன் விரிவுரையில் " இறைவன் எங்கே இருக்கிறான்?' என்ற தலைப்பில் புகாரி நூலில் உள்ள நபி தோழர் அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்த இந்த நபி மொழியை இப்னு கஸீர் (ரஹ்) இயம்பியுள்ளார்கள்.

  ஹிகம் என்னும் உயரிய மெஞ்ஞான நூலில் ஹழ்ரத் செய்யதுனா இப்னு அதாவுல்லா இஸ்கந்தர் (ரஹ்) ""அல்லாஹ் மறைக்கப்பட்டவனல்ல. நாம் தான் அவனைப் பார்ப்பதை விட்டும் மறைக்கப்பட்டவர்கள்'' என்று எழுதினார்கள்.

  ""ஒவ்வொரு ஆன்மாவும் அதன்மீது பாதுகாக்க கூடியவர் இல்லாமல் இல்லை'' என்று இயம்புகிறது இறைமறை குர்ஆனின் 86 - 4 ஆவது வசனம். இவ்வசனப்படி இறைவன் அருகிலிருப்பதோடு ஒவ்வொரு மனிதனையும் பாதுகாத்து கொண்டிருக்கிறான். அதனால்தான் அல்லாஹ்வின் மீது உறுதியுடையவன் எந்நிலையிலும் எந்தத்தவறும் செய்ய மாட்டான் என்பதை செப்பும் செம்மையான நிகழ்ச்சியை நினைவு கூர்வோம்.

  இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் காட்டு வழியில் சென்றார். அங்கே ஆடு மேய்த்த அடிமையை சந்தித்தார். அந்த ஆட்டை விலைக்குக் கேட்டார். அந்த அடிமை அந்த ஆடு அவனுக்குச் சொந்தமில்லை என்றும் அதனால் அதனை விற்க இயலாது என்றும் விடையிறுத்தான். "ஆட்டை ஓநாய் தின்றுவிட்டதாக ஆட்டின் சொந்தக்காரனிடம் சொல்லி விடு' என்றார் இப்னு உமர் (ரலி). அந்த அடிமையோ நீக்கமற நிறைந்து நம்மை நோக்கி கொண்டிருக்கும் நம் அண்மையில் உள்ள அல்லாஹ்விற்கு என்ன பதில் கூறுவது என்று கேட்டான்.

  அந்த அடிமையின் இறையச்சத்தை வியந்து அந்த அடிமையை விலைக்கு வாங்கி விடுதலை செய்து அந்த ஆட்டையும் விலைக்கு வாங்கி அந்த அடிமையிடம் அளித்தார். இப்னு உமர் (ரலி) அதன்பின் அந்த விடுதலை பெற்றவரைச் சந்திக்கும் பொழுதெல்லாம் சலாம் (முகமன்) சொல்லி அல்லாஹ்வின் அண்மையை அன்பாய் அளவளாவி மகிழ்வர் இருவரும்.

  தாவூஸ் யமானி என்ற மேதை அழகானவர்; நகைச்சுவையாக பேசி அவரை நாடி வந்தவரின் நோக்கத்தை அறிந்து ஆவன செய்வார். பாவ வழியில் அவரை திருப்பிவிட தீர்மானித்து ஒரு பெண் அவரை அணுகினாள். அவளின் எண்ணத்தை எளிதில் புரிந்து கொண்ட அம்மேதை ஓரிடத்தைக் குறிப்பிட்டு அவளை அங்கே சந்திப்பதாக சொன்னார். அந்த இடத்தில் குறிப்பிட்டபடி அம்மேதை அப்பேதையை சந்தித்தார். நீ எண்ணியதை எண்ணியவாறு இங்கே முடித்து கொள் என்றார். மக்கள் நடமாட்டம் மிகுந்த இவ்விடத்தில் பலரும் பார்க்க எண்ணியபடி எதுவும் செய்ய முடியாது என்று ஏமாற்றத்துடன் பதிலளித்தாள் பாவை.

  மக்கள் பார்வைக்குப் பயப்படும் பெண்ணே எங்கும் நிறைந்து நமக்கு அண்மையில் உள்ள அல்லாஹ் பார்க்காதபடி எதுவும் செய்ய முடியாது என்பதை ஏன் அறியாதிருக்கிறாய்? மேதையின் கேள்வியில் பேதமை தெளிந்த பேதை மன்னிப்பு கேட்டு மனம் திருந்தி நல்லவளாய் மாறினாள்.

  இந்நிகழ்வுகளிலிருந்து நமக்கு அண்மையில் அல்லாஹ் இருப்பதையறிந்து இறையச்சத்தோடு முறையாக நிறைவாழ்வு வாழ்ந்து இறையருளை இகபரம் இரண்டிலும் பெறுவோம்.

  - மு. அ. அபுல் அமீன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai