சுடச்சுட

  
  ponni

  திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள, சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஆரோவில் அருகே இராயப்புதுப்பாக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. புதுச்சேரியிலிருந்தும் இவ்வூருக்கு வரலாம். இவ்வூரின் தென்மேற்கில் அமைந்துள்ள ஏரியின் கரை அருகில் கிழக்கு நோக்கி பொன்னி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள அழகம்மை சமேத அரசனேசுவரர் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

  தெய்வீக சக்திவாய்ந்த பொன்னி அம்மன் திருக்கோயில் ஊர்மக்களால் சிறப்பாகப் போற்றி வழிபாடுகள் செய்யப்படுகின்றன. "பிடாரி' என அழைக்கப்படும் அம்மன் அமர்ந்த கோலத்தில் தீச்சுவாலை அலங்காரத்துடன் எட்டுக் கரங்களுடன் காட்சி தருகிறாள். எட்டு கரங்களில் சூலம், பாசம், கத்தி, கேடயம், வில், மணி, குறுவாள், கபாலம் ஆகியவற்றைத் தாங்கி, தனது காலால் மிதித்துக்கொண்டிருக்கும் அசுரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி தருகிறாள். ஆனால் கண்களில் கனிவும் கருணை பொழியும் முகமும் இதழ்களில் புன்னகையும் தவழ அருள்புரிகிறாள் அன்னை. ஆலய வாயிலில் மூத்த தேவியான ஜேஷ்டா தேவி வீற்றிருக்க, கோயிலின் முன்பாக சிம்ம வாகனமும் பலிபீடமும் சூலமும் காட்சி தருகின்றன. கோயிலின் பின்புறம் பெரிய புற்று ஒன்று உள்ளது.

  இப்பகுதி மக்களுக்கு குல தெய்வமாக விளங்கும் பொன்னி அம்மனை வழிபட்ட பின்னரே தங்கள் வீட்டில் சுப காரியத்தை தொடங்குகின்றனர் இப்பகுதி மக்கள்!

  இவ்வாலயத்தில், சித்திரை பௌர்ணமியில் பால்குட விழா, ஆடிமாதத்தில் கூழ்வார்த்தல் போன்றவை நடைபெறுகின்றன. மேலும் இங்கு கரகம் எடுத்து வழிபாடு செய்த பின்னரே ஊரில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு மற்றும் திருவிழா தொடங்குகிறது. செவ்வாய் கிழமைகளில் ராகுகால வழிபாடும் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழிபாடு சிறப்புமிக்க இராயப்புதுப்பாக்கம் பொன்னி அம்மனை வழிபட்டு வாழ்வில் நலம் பல பெறலாம்.

  தொடர்புக்கு: 99442 42187.

  - இராயப்புதுப்பாக்கம் நடராஜன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai