சுடச்சுட

  
  jesus

  ஒரு சமயம் அட்லாண்டிக் கடலில் ஒரு பயணக் கப்பல் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த ஓர் இளைஞனுக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. காய்ச்சல் அதிகமாகிக் குளிரில் மிகவும் நடுங்க ஆரம்பித்தான். கப்பலில் அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த கட்டிலில், கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தான். தாங்க முடியாத குளிராக இருந்ததால் முனகிக் கொண்டே படுத்திருந்தான். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.

  அப்போது திடீரென்று ஒரு குரல் கேட்டது போல உணர்ந்தான். கம்பளியால் மூடிப் படுத்திருந்ததால் அவனுக்கு அந்தக் குரல் என்ன சொல்கிறது என்பது விளங்காமல் இருந்தது.

  சற்றே போர்வையை விலக்கிக் காதைத் தீட்டிக்கொண்டு அந்தக் குரல் என்ன சொல்கிறது என்பதைக் கேட்க முற்பட்டான். இப்போது அவனால் அந்தக் குரல் சொன்னவற்றைக் கேட்க முடிந்தது.

  மெல்லிய, கெஞ்சும் குரலில் ஒலித்த அந்த வார்த்தைகள் : யாரோ கப்பலில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து விட்டார்கள். தயவு செய்து காப்பாற்றுங்கள்...

  இதைக் கேட்ட அந்த இளைஞன் மிகவும் வருத்தமுற்றான். நானே உடல்நிலை சரியில்லாமல் படுத்துக் கிடக்கின்றேன். என்னால் எப்படிக் கடலில் விழுந்தவனைக் காப்பாற்ற முடியும் இப்போது நான் என்ன செய்வது எழுந்து போய் யாரையாவது கூப்பிடலாம் என்றால், அதற்குக் கூட என்னிடம் தெம்பு இல்லையே நான் கையாலாகாதவனாகி விட்டேனே... என்று எண்ணி மிகவும் கவலைப்பட்டான்.

  திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தனது அறையிலிருந்த சிறிய ஜன்னலைப் பார்த்தான். மெல்ல எழுந்து, அறையில் இருந்த லாந்தர் விளக்கு ஒன்றை ஏற்றினான். பிறகு அதை எடுத்துக் கொண்டு போய் அந்த ஜன்னலருகே வைத்துவிட்டு, தனது படுக்கைக்குத் திரும்பினான். கம்பளிப் போர்வையை தலைமுதல் கால் வரை போர்த்திக்கொண்டு அப்படியே தூங்கிப் போனான்.

  மறுநாள் சற்றே உடல்நிலை தேறிய நிலையில் கப்பலின் மேல் தளத்துக்கு வந்து கடல் வெளியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

  அப்போது அங்கே ஒரு மனிதன் உரத்த குரலில் கப்பல் ஊழியர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

  நான் இருட்டில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். மெல்ல மெல்லத் தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தேன். மிகவும் இருட்டாக இருந்ததால் வழியேதும் தெரியவில்லை. அப்போது இந்தக் கப்பலின் ஒரு ஜன்னலில் இருந்து ஒரு லாந்தர் விளக்கின் வெளிச்சம் தெரிந்தது. அதனால் மீட்புப் படகில் ரோந்து வந்து கொண்டிருந்த மாலுமிக்கு, அந்த வெளிச்சத்தின் மூலமாக எனது கைகள் தென்பட அவர் என்னைக் காப்பாற்றி இந்தக் கப்பலில் ஏற்றிவிட்டார். அந்த விளக்கு வெளிச்சம் மட்டும் இல்லாமல் இருந்தால் நான் இப்போது உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்ற சொல்ல, அந்த ஊழியர் மிகவும் வியப்படைந்தார்.

  அதைவிட வியப்படைந்தது அந்த இளைஞன்தான். நடுங்கும் குளிரிலும் தான் செய்த ஒரு சிறிய செயல் ஒரு மனிதனின் உயிரையே காப்பாற்றியிருக்கின்றதே என்று எண்ணி எண்ணி வியந்து போனான்.

  நான் என்னைப் பற்றி அற்பமாக நினைத்திருந்தேன். ஆனால் கடவுள் என் மூலம் ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். எனவே இனி நான் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்டான்.

  ஆம்... பிறருக்கு உதவி செய்து வாழ்வதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைக்கும்! அடுத்தவர் வாழ்விலும் ஒளி ஏற்றி வைக்கும். இதைத்தான் இயேசு கிறிஸ்து தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார்.

  எவரும் விளக்கை ஏற்றி அதை ஒரு பாத்திரத்தால் மூடி வைப்பதில்லை. அதைக் கட்டிலின் கீழே மறைவாக வைப்பதுமில்லை. மாறாக வீட்டுக்குள்ளே வருபவர்களுக்கு ஒளி கிடைக்கும்படி அதை விளக்குத் தண்டின் மீது உயரத்தில் வைப்பார்கள். (லூக்கா 8 : 16)

  - அபி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai