சுடச்சுட

  
  krishna

  ஒருவர் ஓர் உன்னதமான காவியத்தை எழுதிக்கொண்டிருக்கும் போது இடையில் சற்றே தடுமாற்றம் அடைந்தார். அவரது தடுமாற்றத்தைப் போக்க காவிய நாயகனான கண்ணனே அவர் உருவில் வந்து அவருக்குத் தெரியாமலேயே அவரது தடுமாற்றத்தை நிவர்த்தி செய்தார். "இப்படி ஓர் அதிசயமா..?' என்று வியப்படைய வேண்டாம்... நடந்த உண்மை இது!

  பரமாத்மா கண்ணனின் ராச லீலையை அடிப்படையாகக் கொண்டு அஷ்டபதி என்னும் கீத கோவிந்த காவியத்தை ஜெயதேவர் எழுதும்போது நிகழ்ந்த சம்பவம் இது.

  கீத கோவிந்தம் (அஷ்டபதி) என்னும் காவியம் 10 ஸர்க்கங்களைக் கொண்ட 24 ஸ்லோகங்கள் ஜெயதேவரால் இயற்றப்பட்டது. ஒவ்வொரு பாடலும் எட்டு சரணங்களை உள்ளடக்கியுள்ளதால் அது அஷ்டபதி என்று பெயர் பெற்றதாக உள்ளது.

  ஜெயதேவர் கீத கோவிந்த காவியத்தின் 19 ஆவது பாடலின் ஏழாவது சரணத்தில் "ஸ்மர கரள கண்டனம் மம ஸிரஸி மண்டனம் தேஹி பத பல்லவம் உதாரம்' என்னும் வரிகளை எழுதிக் கொண்டிருந்தார். இந்த வரிகளின் பொருள்:

  "காதல் என்னும் விஷம் தலைக்கேறி விட்டது. அதனால் உன் சிவந்த மிருதுவான பாதங்களை என் தலையின் மீது வைப்பாயாக' என்று கண்ணன் ராதையிடம் கேட்பதாக அமைந்துள்ளது. இந்த வரிகளை தான் மரியாதை குறைவாக எழுதியிருப்பதாக நினைத்து எழுதிய அந்த வரிகளை அடித்துவிட்டு யோசித்து மாற்றி எழுதலாம் என்ற எண்ணத்தில் சுவடிகளை கீழே வைத்துவிட்டு அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு நீராடச் சென்றார்.

  அவர் சென்றதும் காவியத் தலைவனான கண்ணனே ஜெயதேவர் உருவில் அங்கு வந்து கீழே இருந்த சுவடிகளில் ஜெயதேவர் எழுதி அடித்து நீக்கிய அதே வரிகளை மீண்டும் எழுதிய பிறகு ஜெயதேவரின் மனைவியிடம் தான் ஆற்றங்கரைக்குச் நீராடச் செல்வதாகக் கூறி புறப்பட்டார்.

  ஜெயதேவர் ஆற்றில் குளித்து வந்து தான் வழக்கமாகச் செய்யும் பூஜைகளை முடித்து மீண்டும் பாடலை எழுத எண்ணி பார்த்தபோது, ஏற்கெனவே தான் எழுதி அடிக்கப்பட்ட வரிகள் சுவடியில் இருப்பதைக் கண்டு வியப்படைந்தார். தன் மனைவி பத்மாவதி தேவியிடம் கேட்டபொழுது அவர், ""நீங்கள்தானே சற்றுமுன்னர் எழுதி அடித்ததை மீண்டும் எழுதிய பின்னர் ஆற்றங்கரைக்குச் சென்றீர்கள்'' என்றார்.

  ஜெயதேவரின் உடல் புல்லரித்தது. "தம் உருவில் வந்தது சாட்ஷாத் கண்ணபிரானே!' என அறிந்து மனம் குளிர்ந்து போனார். தம் மனைவிக்கு கண்ணனை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி உவகையால் பூரித்தார். தொடர்ந்து அவர் எழுதிய எட்டாவது சரணத்தில், "ஐயது பத்மாவதீரமண ஜயதேவகவி பாரதீ பணிதம் இதி கீதம்' என்கிறார்.

  பரம் பொருளுடன் இணைய விரும்பி ஏங்கி நிற்கும் ஒரு மனிதனுடைய ஆத்மாவின் உள்ளக் கிடக்கையையும் படிப்படியாக முன்னேறி அதில் வெற்றி காண்பதையும் உட்கருத்தாகக் கொண்டு அமைக்கப்பட்டது இந்த கீத கோவிந்த காவியம்! மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது சிருங்கார ரஸமே பிரதானமாக உள்ளது போன்று தோன்றினாலும் இந்த காவியத்தில் மேலோங்கியிருப்பது பக்தி ரஸமே!

  இந்த காவியத்தில் கண்ணன், ராதை, ராதையின் தோழி என்று மூன்று பாத்திரங்களே படைக்கப்பட்டுள்ளன. கண்ணனை பரமாத்மாவாகவும் ராதையை ஜீவாத்மாவாகவும் தோழியை ஜீவாத்மாவிடம் பரமாத்மாவை வழிநடத்திச் செல்பவளாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளன.

  பஜனை சம்பிராதாயத்தில் அஷ்டபதி பாடல்கள் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஸ்ரீ ராதா கல்யாணம், ஸ்ரீ சீதா கல்யாணம், ஸ்ரீ ருக்மணி கல்யாணம் போன்ற உற்சவங்களில் அஷ்டபதி பாடல்களை பாடியபிறகே திருக்கல்யாண வைபவம் தொடங்கப்படும் என்பது நியதி.

  கீத கோவிந்த காவியத்தின் 19 ஆவது பாடல் சஞ்சீவி அஷ்டபதி என்று வழங்கப்படுகிறது. இப்பாடலைப் பாடி வர, நோய் விரைவில் நீங்கி குணம் பெறுவர் என்பர். 22 ஆவது அஷ்டபதி, கல்யாண அஷ்டபதி ஆகும்.

  தெய்வீகத் திருமண உற்சவங்களில் கல்யாண அஷ்டபதி பாடலை பாடிய பிறகே மாங்கல்யதாரணம் நடைபெறும். அதனால் நம் வீட்டுத் திருமணங்களிலும் "ராதா வதன விலோகன' எனத் தொடங்கும் கல்யாண அஷ்டபதி பாடலைப் பாடி இன்புறுவோம்!

  ஜி. கிருஷ்ண மூர்த்தி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai