Enable Javscript for better performance
தர்மர் ஏன் சூதாடினார்?- Dinamani

சுடச்சுட

  
  story

  'மோது மறதியொரு கோடி வேற்படை' எனத் துவங்கும் திருப்புகழ்ப் பாடலில் ""சூது பொரு தரும நாடு தோற்றிரு வாறு வருஷம் வனவாச மேற்று'' என்று வரும் நான்கு அடிகளில் அருணகிரிநாதர் மகாபாரதத்தையே முடித்திருக்கிறார்!

  பாண்டவர்களிடையே "தருமர்' என்ற தன் பெயருக்கு ஏற்ப நல்லதையே நினைத்து, நல்லதையே பேசி, நல்லவற்றையே செய்து வந்த தருமர் சூதாடுதல் தீங்கு பயக்கும் என்று தெரிந்திருந்தும் சூதாடலாமா? என்ற கேள்வி நல்லோர் எவருக்கும் உதிக்கத்தான் செய்யும். ஆனால் அப்படி சூதாடிய தருமரை அந்தக் காலத்தில் வாழ்ந்திருந்த ஆன்றோர்கள் வெறுக்கவில்லையே, ஏன்? அவர் சுவர்க்கம் போனதாக அல்லவா பாரதத்தின் இறுதியில் செய்தி வருகிறது! எனில் அவர் சூதாடியது பாவமாகாதா? தருமர் ஏன் சூதாடினார் என்பதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது!

  பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தில் வாழ்ந்து வந்தபோது ஒருநாள் நாரத முனிவர் அவர்களைக் காணவந்தார். ஊர் உலகத்துக் கதையெல்லாம் பேசி முடித்து விடைபெற்றுச் செல்லும் தருணத்தில் தருமரைத் தனியே அழைத்து, ""தருமா! உன்னால் உலகில் மன்னர் குலம் பூண்டோடு மாய்ந்து ஒழியும்'' என்று கூறிவிட்டுப் போய் விடுகிறார்! நாரதர் எந்த மன்னர் குலம் அழியும் என்று கோடி கூடக் காட்டவில்லை. தருமரும் கேட்டுக் கொள்ளவில்லை. இருந்தாலும் தருமர் மனதில் பெரும் துன்பம் மூண்டு விட்டது. கனவில்கூட எவருக்கும் தீங்கு நினையாமல் தர்மநெறி தவறாமல் ஆட்சிபுரியும் தம் பொருட்டு ஒரு மன்னர் குலம் அழிவதா? இது என்ன சோதனை என்று திரும்பத் திரும்ப அதையே எண்ணி துக்க சாகரத்தில் மூழ்கியிருந்தார்.

  இதன்பிறகு இராஜசூய யாகம் நடக்கிறது. அதில் முதல் தாம்பூல மரியாதை கண்ணபிரானுக்குத்தான் என்று முடிவானபோது சேதி என்னும் தேசத்து அரனான சிசுபாலனுக்கு பெரும் கோபம் வந்து அவன் கண்ணபிரானைக் கண்டபடி தூஷணையாகப் பேசிப் போருக்கு அழைக்கிறான். பெரும் போர் நடக்கிறது. இறுதியில் கண்ணபிரான் தன் சக்ராயுதத்தை ஏவி சிசுபாலனையும் அவன் கும்பலையும் அழிக்கிறார். யாகம் முடிவுக்கு வருகிறது. எல்லோரும் தத்தம் இடத்திற்குச் செல்கிறார்கள். தருமர் வியாச பகவானை நமஸ்கரித்து ""தவசிரேஷ்டரே... என் பொருட்டு மன்னர் குலம் அழியும் என்று ஒருமுறை நாரத முனிவர் சொல்லிச் சென்றிருக்கிறார். அது இந்த சிசுபாலனின் வதத்தோடு முடிவு பெற்று விட்டதா?'' என்று கேட்டார்.

  அதற்கு வேத வியாசர், ""தருமா! நாரதர் கூறிய நிகழ்ச்சி இதுவல்ல. இனிமேல்தான் அது நிகழ வேண்டும். உன் மூலமாக ஒரு பெரும் போர் நிகழத்தான் போகிறது. அதனால் அரச வம்சமே பூண்டற்றுப் போகும். அது எப்போது என்று சொல்கிறேன் கேள். அழகான, சகல லட்சணங்களும் பொருந்திய வீர புருஷன் ஒருவன் கையில் திரிசூலத்தை ஏந்தியபடி ஒரு ரிஷபத்தின் மீது அமர்ந்து தென்திசை நோக்கிப்போவதும் வருவதுமாய் எந்த இரவில் நீ சொப்பனம் காண்கிறோயோ அன்று தொடங்கிப் பதிமூன்றாவது வருஷ முடிவில் உன் பொருட்டு மன்னர் குலம் மாண்டு ஒழியும். இந்தக் குறிப்பினால் நீ அதை உணர்வாயாக!'' என்று கூறிவிட்டுச் செல்கிறார்.

  இதற்கு சிலகாலம் கழித்து ஓர் இரவில் தருமர் திடீரென்று இந்தக் கனவைக் கண்டுவிட்டு எழுந்து உட்கார்ந்தார். உடனே தன் தம்பியர்களையும் திரௌபதியையும் அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு வியாச முனிவர் தன்னிடம் சொன்ன சொப்பனத்தைப் பற்றி விரிவாகச் சொல்லி அதன்படியே தற்போது தான் அந்த சொப்பனத்தைக் கண்டதாகவும் அதனால் அன்றுமுதல் பதிமூன்றாவது வருஷ முடிவில் அரசகுலம் தன்னால் அழியப் போவதையும் பற்றி கவலையுடன் பேசினார்.

  ""நீங்கள் நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். என்னால் அரச குலம் அழியப் போவதை என்னால் சகித்துக் கொள்ளமுடியாது. அதனால் இப்போதே நான் ஒரு விரதம் மேற்கொள்ளப் போகிறேன். அதாவது என்னை இனி யார் எவ்வளவு தூஷனையாகப் பேசினாலும் அவர்மீது கோபம் கொள்ள மாட்டேன். என் பத்தினியை எவன் சீண்டிப் பார்த்தாலும்கூட நான் அவனிடம் பகைமை பாராட்ட மாட்டேன். செய்யக் கூடாத காரியத்தை ஒருவன் என்னைச் செய் என்றாலும் அதை செய்ய மறுக்கமாட்டேன். ஏனென்றால் மறுத்தால் அதனால் பகை ஏற்பட்டுப் போர் மூளலாம் அல்லவா? அதனால் நீங்கள் யாவரும் என்னுடன் இந்த விஷயத்தில் ஒத்துழைக்க வேண்டும்!'' என்று கூற மற்றவர்களும் சம்மதிக்கிறார்கள்.

  அப்பொழுது பாண்டவர்களை எப்படியும் சூதுப் போருக்கு அழைத்து விடவேண்டும் என்று சகுனி போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி அழகான மண்டபம் ஒன்றைக் கட்டி அதைக் காண வருமாறு பாண்டவர்களை அழைத்துவர விதுரரை அனுப்பினான் துரியோதனன். துரியோதனன் அழைக்கிறான் என்றாலே அதில் ஏதோ சூழ்ச்சி இருக்கும் என்று எண்ணிய பாண்டவர்கள், இருந்தாலும் அழைத்தும் போகாவிட்டால் அதனால் ஏதேனும் தீங்கு வந்து விடுமோ என்று அஞ்சி நடப்பது நடந்தே தீரும் என்று துணிந்து தருமர் முதலானோர் செல்கிறார்கள்.

  அஸ்தினாபுரத்தில் அந்த அழகான மண்டபத்தைப் பார்வையிட்ட பாண்டவர்களின் அண்ணனான தருமரைச் சூது ஆட அழைத்தான் துரியோதனன். ஆனால் தருமரோ சூது ஆடுவது நல்லது அல்ல என்று எடுத்துரைக்கிறார். இதைச் சாக்காக வைத்து சகுனி தருமரை உலோபி, கஞ்சன் என்றெல்லாம் தூற்றுகிறான். உடனே அர்ச்சுனன் என் சகோதரரை உலோபி என்று சொன்னவன் நாக்கை அறுப்பேன் என்று சீறுகிறான். சகுனிக்கும் அர்ச்சுனனுக்கும் வாக்குவாதம் மூள்கிறது. இது எதில் போய் முடியுமோ என்று அஞ்சிய தருமன் இருவரையும் சமாதானப்படுத்துகிறான். "இப்பொழுது தாம் சூதுவிளையாட மறுத்தால் அதன் காரணமாக போர் விளைந்து மன்னர்குலம் அழிந்துவிடக் கூடாது. என் பொருட்டு எந்த யுத்தமும் ஏற்படக்கூடாது. யார் ஏதைச் சொன்னாலும் செய்து விட வேண்டும். சூது விளையாட மறுத்தால்தானே விரோதமும் போரும் வரும்? சூது விளையாடுவதால் தாம் நரகம் புக நேர்ந்தாலும் பரவாயில்லை. ஆக, எல்லோருக்கும் நல்ல பிள்ளையாகப் பேசாமல் சூது ஆடி விடுவோம்' என்று எண்ணிய தருமர் சூது ஆட உட்காருகிறார். போரைத் தவிர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தினால் தருமர் சூது விளையாடியதால் அவரைப் பாபம் சேரவில்லை. புண்ணிய பாவங்கள் செய்யும் செயல்களால் வருவதில்லை. அவரவர் மனத்தின்பால் உள்ள நினைவுகளால் வருவதாகும் என்ற கருத்தை நிரூபிக்கவே மகாபாரதத்தில் இந்த நிகழ்ச்சி வருகிறது.

  - மயிலை சிவா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai