Enable Javscript for better performance
பேய்க்கரும்பும் - பேரருளும்...- Dinamani

சுடச்சுட

  
  pattinathar

  திருவெண்காடர்: அக்காலத்தில் வணிகர்கள் நிறைந்த காவிரிப் பூம்பட்டினம் நகரத்தில் செல்வாக்கு நிறைந்த வணிகர் சிவநேசர் மற்றும் ஞானகலை தம்பதியர் வாழ்ந்து வந்தனர். திருவெண்காட்டு ஈசனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த அவர்கள், மகன் பிறந்தபோது அந்த ஈசனின் பெயரான சுவேதவனன் என்ற பெயரையே வைத்தார்கள். அம்மகவை திருவெண்காடர் எனவும் அழைத்தனர். நல்ல வசதியான ஆனந்தமான வாழ்க்கையை அனுபவித்த திருவெண்காடர், தனது ஐந்தாவது வயதில் தந்தையை இழந்தார். திருவெண்காடருக்கு ஒரே ஒரு சகோதரி இருந்தாள். சகோதரியும் திருமணம் செய்து தனியாக வாழ்ந்து வந்தார். தக்க வயதில் சிவகலை என்னும் பெண்ணரசி அவருக்கு மனைவியாக வாய்த்தாள். ஆனால் மகப்பேறு இல்லை. அதற்காகத் திருவிடைமருதூர் ஈசனை வணங்கி விரதம் இருந்து வந்தார்.

  மருதவாணன்: அப்போது திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த சிவசருமன், சுசீலை என்னும் அந்தணத் தம்பதியர்கள் வறுமையில் இருந்தனர். சிவசருமர் கனவில் ஈசன் தோன்றி, தாம் கோயிலின் தீர்த்தக்கரையில் ஒரு மருத மரத்தடியில் குழந்தையாக இருப்பதாகவும், அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்து திருவெண்காடரிடம் சேர்ப்பிக்குமாறும் அவர் குழந்தைக்கு ஈடாகக் கொடுக்கும் பொருளால் உன் வறுமை தீரும் எனவும் கூறினார். ஈசன் ஆணைப்படி குழந்தையைப்பெற்றுக் கொண்டு சிவசருமருக்குப் பொருள் கொடுத்து உதவினார் திருவெண்காடர். மருத மரத்தடியில் அவதரித்த குழந்தைக்கு மருதவாணன் என்று பெயரிட்டு அருமையாகச் சீரோடும், சிறப்போடும் வளர்த்தார்.

  ஞானாசிரியன்: மருதவாணராகத் தம்மிடம் வளர்வது இறைவன் என்ற உண்மை திருவெண்காடருக்குத் தெரியாது. மகனை உரிய வயதில் வணிகத்தில் ஈடுபடுத்தி, வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான். திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர்.

  ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். வணிகத்திற்குச் சென்ற கப்பலிலும் எரு மூட்டையும், தவிடும் வந்திருந்தது. கோபம் கொண்ட திருவெண்காடருக்கு வந்த ஓலையில் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என அதில் எழுதப் பட்டிருந்தது. இறை அருளால் மெல்லத் தெளிவு வந்தது. இறைவன் தன் உடனேயே இருந்து தனக்கு பாடம் புகட்டியிருப்பதை அறிந்தார். ஊசி என்பது காது உள்ளதாக இருந்தால் தான் இரு பொருட்களை இணைத்துத் தைக்க முடியும். இந்த உயிரும் உடலும் தனித் தனியாகவே உள்ளன.

  காலம் வந்து காலன் வழிச்செல்கையில் இத்தனை செல்வம் இருந்தும் என்ன பயன்! அதனால் உடலை விட்டு உயிர் பிரிந்த பின்பு இந்த செல்வம் என்பது காதற்ற ஊசியைப் போல் சேர்த்துத் தைக்கப் பயன்படாது. ஊர், உற்றார், நற்பெயர், பெண்கள், பிள்ளைகள், சீர் செல்வம் தேசத்திலே யாவரும் எதுவும் நிரந்தரம் இல்லை, எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை. "இறுதியில் செல்லும் போது எதற்கும் பயன்படாத காது இல்லாத ஒரு ஊசி கூட உடன் வருவது இல்லை' என்ற கருத்து உணர்ந்தார். துறவியானார். தன் சொத்து, மனை, மனைவி, சுற்றம் எல்லாவற்றையும் துறந்தார்.

  துறவியாக கோவணத்துடன் நடந்தார். தான் சேர்த்து வைத்து இருந்த பொருட்களை பொது மக்களுக்குத் திறந்து விடச் சொன்னார்.

  அதிசயங்கள்: துறவு வாழ்க்கை மேற்கொண்டு இறை சிந்தனையோடு வாழ்ந்து வந்த திருவெண்காடர், அவரது சகோதரி நஞ்சு கலந்த அப்பம் கொடுத்தபோது அதை முன்னமே இறையருளால் அறிந்தார்.

  தாயின் சிதைக்கு பச்சை வாழைமட்டைகளையும் வாழை இலைகளையும் கொண்டே எறியூட்டினார். வட தேசத்தில் பத்தரகிரி என்னும் மன்னனால் தவறாக குற்றம் டாட்டப்பட்டு கழுவில் ஏற்றப்பட்ட தருணத்தில் கழுமரம் தீப்பற்றி எரியச் செய்தார்.பிறகு அந்த அரசனையே தனது சீடனாக்கிக் கொண்டார். அதோடு அவனுக்கு முக்தி அளித்ததும் இவரது வாழ்க்கையில் நடந்த தெய்வீக அனுபவங்கள்!

  பிற்காலத்தில் இவரே காவிரிபூம்பட்டினத்தில் இருந்து வந்த அடியார் என்பது மருவி பட்டினத்து அடிகள், பட்டினத்தார் என அழைக்கப்படலானார். இவரது பாடல்கள் கவிதை நயமும் தத்துவச் செறிவும்

  கருத்து வளமும் கொண்டதாய் விளங்கி சாதாரண மக்களையும் கவர்ந்துள்ளன என்றால் மிகையாது. 11ம் திருமறையில் இடம் பெற்றுள்ள இவரது அருட்பாடல்கள் படிப்பவர்களுக்கு ஞானத்தை வழங்கும்.

  இனித்த கரும்பு: தன் சீடனுக்கு முக்தி கிடைத்ததை நினைத்து பட்டினத்தார் தனக்கும் முக்தி வாய்க்கவில்லையே என ஈசனை வேண்ட, ஈசன் அவரிடம் ""எந்த தலத்தில் உன் கையில் உள்ள பேய்க்கரும்பு இனிக்கிறதோ, அந்த இடத்தில் உனக்கு முக்தி சித்திக்கும் எனக் கூறினார்.

  பட்டினத்தார் மீண்டும் திருவெண்காடு சென்று அங்கிருந்து சீர்காழி, திருத்தணி, நகரி, திருப்பாதிரிப்புலியூர், திருவதிகை, திருவண்ணாமலை, காஞ்சி, திருக்காளத்தி போன்ற பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டார். அங்கெல்லாம் கரும்பு இனிக்கவில்லை. பின்னர் அவர் திருவொற்றியூர் வந்தார். அங்கே அவர் கையில் கிடைத்த பேய்க்கரும்பு இனித்தது. இங்கேயே தனக்கு முக்தி என்பதை

  உணர்ந்து கொண்டார். அது ஆதிபுரி என அழைக்கப்பட்ட திருத்தலம். ஆதிபுரி நாதரை வணங்கி திருவொற்றியூர் ஒருபா ஒருபது, முதல்வன் முறையீடு, அருட் புலம்பல் முதலிய இலக்கியங்களை அருளிச் செய்தார் பட்டினத்தார். அடிக்கடி கடற்கரை சென்று கிழக்கு நோக்கி அமர்ந்து நிஷ்டையில் இருப்பார். அவ்வப்போது அங்கு இருக்கும் சிறுவர்களோடு பொழுது போக்காய் அதி அற்புத ஆடல்கள் பல ஆடுவார் ஆடி மாதம் உத்திராட நாளில் சிறுவர்கள் சிலரோடு ஒளிந்து மறைந்து விளையாடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு மணற் திட்டின் மேல் ஏறி நின்று அங்கேயே மறைந்து மீண்டும் வேறோரு மணற் திட்டின் குழிக்குள் இருந்து எழும் வித்தையை செய்து காட்டினார். அங்கு இருந்த சிலரை அழைத்துத் தான் ஒரு மணற் திட்டில் சென்று மறையப் போவதாகவும் அங்கு தன்னை ஒரு சால் கொண்டு மூடும்படியும் கூறினார்.

  வேறிடத்தில் அவர் வெளிப்படுவார் என எண்ணி அவர்களும் அப்படியே மூடினார்கள். நெடுநேரம் ஆகியும் எங்கும் வெளிப் படாததால் பயந்த சிறுவர்கள் ஊரில் சென்று நடந்ததைக் கூறி அனைவரையும் அழைத்து வந்தனர். மூடப்பட்டிருந்த சாலைத் தூக்கிப் பார்க்க, பட்டினத்தார் இருந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று முகிழ்த்து இருந்தது கண்டனர், அனைவரும் சிவலிங்கத்துள் பட்டினத்தார் ஜீவ சமாதியாக ஐக்கியமாகி இருப்பதை உணர்ந்து அதனை வழிபாடு செய்யத் தொடங்கினர். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப்பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார்.

  திருப்பணி: கால வெள்ளத்தில் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த சுவர்கள் வீணாகி இருந்த நிலையில் தமிழக இந்துசமய அறநிலையத்துறையினால் ஆணையர் பொது நல நிதி பிற திருக்கோவில்களில் நிதி ஆகியவற்றில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு பல லட்சம் செலவில் ஜீவ சமாதி அடைந்த இடம் எந்த சேதமும் ஏற்படாமல் சுற்றிலும் கருங்கல் சுவர் வைத்து விமானத்துடன் கூடிய புதிய சந்நிதி

  அமைக்கப்பட்டு உள்ளது. அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் ஜனவரி 26, காலை 7 மணி அளவில் நடைபெறுகிறது.

  தொடர்புக்கு : 044- 2573 3703 2503 1032.

  - இரா.இரகுநாதன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai