Enable Javscript for better performance
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!- Dinamani

சுடச்சுட

    
    jesus

    பொதுவாகவே, மக்கள் அனைவரும் தங்களுக்குத் துன்பங்கள், பிரச்னைகள் வரும்போதுதான் இறைவனை நினைக்கின்றனர். எந்தவிதப் பிரச்னைகளும் இல்லாமல் வாழ்க்கை மகிழ்ச்சிக் கடலில் பயணித்துக் கொண்டிருக்கும்போது யாரும் இறைவனைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை. சிலர் இந்தக் கூற்றை மறுக்கக் கூடும். இருந்தாலும் பெரும்பாலான மக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.

    சரி, துன்பம் வரும்போது என்ன செய்கின்றோம் இறைவா, இந்தத் துன்பத்திலிருந்து எனக்கு விடுதலை கொடு. நான் உனக்கு என் தலைமுடியைக் காணிக்கையாக்குகிறேன்... என்று ஓர் உறுதி எடுத்துக் கொள்கிறோம். அதாவது, இறைவன் நம்மைத் துன்பத்திலிருந்து விடுவித்தால், அதற்குப் பரிகாரமாகவோ அல்லது பரிசாகவோ அவருக்கு நம்மிடம் உள்ள எதையாவது கொடுத்து அவரை மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டு இப்படிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக் கொள்கிறோம். இதற்கு நேர்ச்சை, நோன்பு, பரிகாரம் என்றெல்லாம் நாமே பெயர் சூட்டி வைத்துக் கொள்கிறோம்.

    இறைவனுக்குப் பரிசு கொடுக்க நாம் யார்? இந்த வாழ்க்கையே அவர் கொடுத்ததுதானே அப்புறம் எப்படி அவருக்கு நாம் பரிசோ, பரிகாரமோ கொடுக்க முடியும்! நாம் கொடுக்க நினைப்பதாக உத்தேசித்து வைத்திருக்கும் பொருளும் அவர் கொடுத்ததுதான். அப்புறம் எப்படி நாம் அவருக்கு அவற்றைக் காணிக்கையாக்க முடியும்

    அப்படியானால் நாம் என்ன செய்வது எப்படி இறைவனிடம் பிரார்த்திப்பது நமக்குத் துன்பங்களிலிருந்தும் பிரச்னைகளிலிருந்தும் எப்படி விடுதலை தரும்படி அவரை வேண்டுவது

    நமது தேவைகள், பிரச்னைகள் அனைத்தையும் பற்றி இறைவன் அறியாதவரா என்ன நமக்கு என்ன கொடுக்க வேண்டும், எப்படிக் கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அவருக்கு மிக நன்றாகத் தெரியும்.

    இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் இதை நன்கு விளக்கும்.

    இயேசு ஒருசமயம் பெருங்கூட்டம் சூழ நடந்துசென்று கொண்டிருந்தபோது தம்மிடமிருந்து அருள் வெளிப்பட்டதை உணர்ந்து திரும்பிப் பார்த்தபோது, ஒரு நோய்வாய்ப்பட்ட பெண், அவரது ஆடையைத் தொட்டத்தினால் தனது துன்பம் நீங்கி நல்ல சுகம் அடைந்ததை உணர்ந்து கொண்டார். இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து, மகளே, உன் விசுவாசம் (நம்பிக்கை) உன்னைக் குணமாக்கியது எழுந்து சென்று கடவுளுக்கு நன்றி செலுத்து... என்று கூறி அவளை ஆசிர்வதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

    ஆம், கடவுளால் முடியாதது எதுவுமில்லை. அவர் எல்லாம் தெரிந்தவர். மக்கள் அனைவரின் தேவைகள் அனைத்தையும் அவர் நன்கு அறிவார்.

    ஆனால், நாம் துன்ப நேரங்களில் மட்டும் அவரை நினைப்பதை விட்டுவிட்டு, எப்போதும் அவரை நினைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நமது தேவைகள் அவருக்குத் தெரியும். அவர் நிச்சயம் நமது பிரச்னையைத் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கையின் ஆணிவேர். நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு என்று நாம் எத்தனை முறை பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆகவே, நம்புங்கள், பிரார்த்தியுங்கள், தினந்தோறும் இறைவனை நினையுங்கள்.

    இந்த வாழ்வைத் தந்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். இதுநாள் வரை நம்மை எத்தனையோ துன்பங்கள், பிரச்னைகளிலிருந்து விடுதலை தந்து நம்மை வழிநடத்தி வந்ததற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். தினந்தோறும் அவரை நினையுங்கள். அதிலும் விடியற்காலையில் படுக்கையை விட்டு, எழுந்தவுடன் அவருக்கு நன்றி செலுத்துங்கள், அவரைப் புகழ்ந்து போற்றுங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர் வாரி வாரி வழங்குவார்.

    - அபி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai