Enable Javscript for better performance
குருபலம் அருளும் திருலோக்கி!- Dinamani

சுடச்சுட

  
  guru

  'ஏமம்' என்ற சொல்லுக்கு "பொன்' என்றொரு பொருள் உண்டு. நவகிரகங்களில் "குரு பகவான்' என்றழைக்கப்படும் "பிரஹஸ்பதி'க்கு பொன்னவன் என்ற பெயரும் உண்டு. அப்படி குரு வழிபட்டு அருள் பெற்றதால் அவ்வூருக்கு "ஏமநல்லூர்' என்ற பெயர் உண்டாயிற்று.

  காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஏமநல்லூரில் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருத்தலத்தில் அரசாட்சிபுரியும் சுந்தரேசப் பெருமானை, குரு பகவான் நெய்விளக்கேற்றி, கொன்றைமாலை அணிவித்து, முல்லைப் பூவால் அர்ச்சித்து, தயிர் அன்னம் நிவேதனம் செய்து வழிபட்டார் என்பது ஐதீகம்!

  அவரது அன்பான பூஜையில் மகிழ்ந்த இறைவன், ""பிரகஸ்பதியே! பூலோகத்தில் வாழ்பவர்கள் திருமணம் செய்து கொண்டு இனிய இல்லறம் நடத்த நீ முக்கிய காரணமாக இருப்பாய்; உமது பார்வை மூலம் எல்லாவிதமான தோஷங்களும் விலகி, குருபலம் பெருகும்'' என அருள்புரிந்தார்.

  குரு பகவான் இறைவனிடம் அனுகிரஹம் பெற்ற இனிய நாள் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரம் (குருவின் பிறந்த நட்சத்திரம்) ஆகும். குரு பகவான் சிவனருளால் "குருபலம்' பெற்ற அற்புதத் திருத்தலம் ஏமநல்லூர். இன்று இத்தலத்தின் பெயர் திருலோக்கி!

  ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றில் இத்தலத்தை, "இராஜேந்திர சிம்ம வளநாட்டு

  மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கி மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்று குறிப்பிடுகிறது. ராஜராஜ சோழனது பட்டத்து அரசிகளில் ஒருவரின் பெயர், "திரைலோக்கிய மாதேவி!'

  இந்தத் திருக்கோயிலில் குரு பகவானுக்கு ரிஷப வாகனத்தில் காட்சியளித்த உமாமகேஷ்வர வடிவம், தமிழகத்தில் வேறு எங்கும் காண இயலாத அற்புத வடிவமாகும். குரு பகவான், இந்த அற்புதக் காட்சியை தரிசித்தபடி கிழக்கு நோக்கிய நிலையில் இருகரங்களை கூப்பியவண்ணம் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. குரு பகவான் அருள்காட்சி கண்டு இன்புற்ற உமாமகேஷ்வரருக்கு எதிரில் எழிலுடன் அமைந்திருக்கும் அழகு தம்பதிகளாய் ரதி- மன்மதன் எழுந்தருளியுள்ளனர். நேர்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ள

  இவர்களது சிலை உருவம் அற்புதமானது. ஹொய்சாலா காலத்து கலைக் கருவூலம் பேலூர், ஹளபேடு கோயில்களை நினைவு படுத்துகிறது.

  அதோடு இந்த தெய்வீக வடிவைக் கண்டு இன்புற்ற கருவூர்த் தேவர், சுந்தரன், சுந்தரியுடன் விளங்கும் திரைலோக்கிய சுந்தரனை காந்தாரப் பண்ணில் திருவிசைப்பாவில் பாடி மகிழ்கிறார். இவரது திருவுருவம் இக்கோயிலின் வெளிமண்டபத்தூணில் அமைந்துள்ளது.

  சிவத் தலங்களிலும் அமைந்துள்ளபடி ஆகமவிதிமுறைப்படி தெய்வத்திருமேனிகள் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். தலவரலாற்றின்படி பிருகு முனிவர் வழிபட்டு பேறுபெற்றதோடு தருமன் என்பவனது ஊமைத்தன்மை நீங்கப்பெற்ற பெருமையுடையது இத்தலம்.

  திருமணத்திற்காக காத்திருக்கும் இளம் பெண்கள், இளைஞர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி எண்ணியபடி மனதிற்கினிய நல்வாழ்வு பெறுகிறார்கள். தற்போது சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ராஜகோபுர திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இத்திருப்பணியில் பக்தர்கள் பங்கு பெற்று அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர பெருமானின் அருளைப் பெறலாம்.

  கும்பகோணம்- அணைக்கரை வழியில் திருப்பனந்தாளுக்கு 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இவ்வாலயம்.

  தொடர்புக்கு: 0435 2456696/ 94437 14384.

  - வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai