சுடச்சுட

  
  kala

  தருமபுரி அதியமான் கோட்டையில் பழைமை மிக்க ஸ்ரீ தட்சிண காசி கால பைரவர் சுவாமி திருக்கோயில் உள்ளது.

  காசிக்கு அடுத்தபடியாக காலபைரவருக்கு என்று நாட்டிலேயே தனித்திருத்தலமாக உள்ள இரண்டாவது திருத்தலம் இது!

  கி.பி. 9ஆம் நூற்றாண்டில் அதியமான் நெடுமான் அஞ்சி மன்னனால் கட்டப்பட்ட சிறந்த பரிகார ஸ்தலம் இக்கோயில். சிவபெருமானின் அவதாரமாக விளங்கக் கூடியவர் காலபைரவர். இங்குள்ள காலபைரவர் எமனும் நடுங்கும் தோற்றம் கொண்டவர். இவரை வழிபட்டால் சகல தோஷங்களும் பல்வேறு பிரச்னைகளும் மன சஞ்சலங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

  தனக்கு ஏற்பட்ட குழப்பங்களைத் தீர்ப்பதற்கான பரிகாரங்களைக் கூறுமாறு ஜோதிடர்களிடம் அதியமான் கேட்டுக்கொண்டாராம்.

  அதன்படி, காசியில் உள்ள காலபைரவர் கோயிலில் கங்கை பூஜை, பரிகார பூஜைகள் செய்து கங்கை நதிக்கரையில் இருந்து கல்லெடுத்து காலபைரவரின் கோயிலுக்குள் சிலையமைத்து பூஜைகள் செய்து அதியமான்

  கோட்டையில் கோயில் கட்ட வேண்டும். கோயிலின் மகா மண்டபத்தில் ஒன்பது நவ கோள்களின் சக்கரத்தையும் மகா மண்டப மேல் கூரையில் அமைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறினர்.

  அதன்படி இந்த கோயில் கட்டப்பட்ட பின்னரே அதியமானின் சங்கடங்கள் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின் அவர் சென்ற இடத்தில் எல்லாம் வெற்றி கண்டார்.

  அன்று முதல் காலபைரவரை அதியமான் தனது குல தெய்வமாகவே வழிபட்டார். தனது கோட்டை மற்றும் கஜானா சாவிகளை காலபைரவர் கோயிலில் பாதுகாத்து வந்தார். அவரது வீர வாளை காலையும் மாலையும் கால பைரவரின் திருப்பாதங்களில் வைத்து வணங்கி எடுத்துச் சென்றார். அந்த வாள் இப்போதும் கால பைரவரின் திருக்கரங்களில் உள்ளதாக நம்பப்படுகிறது.

  இங்குள்ள கால பைரவர் தலையில் அக்னிப் பிழம்பு தாங்கி காதுகளில் குண்டலத்துடன் கழுத்தில் கபால மாலையுடனும் பூணூல் அணிந்து அரைஞான் கயிராக பாம்பினை முடிந்தும் கால்களில் சலங்கையைக் கொண்டும் காட்சி தருகிறார்.

  வலது மேல் கரத்தில் உடுக்கை, கீழ்க் கரத்தில் திரிசூலம், இடது மேல் கரத்தில் பாசாங்குசம் கீழ்க்கரத்தில் கபாலத்துடனும் பீடத்தில் நாய் வாகனத்தில் நின்றபடி காட்சி தருகிறார்.

  இக் கோயிலில் தேய்பிறை அஷ்டமி, அமாவாசை, பெர்ணமி, ஞாயிற்றுக்கிழமை நாள்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருக்கும். தேய்பிறை அஷ்டமி தினத்தில் இரவு சத்ரு சம்ஹார பூஜை நடைபெறும். இதில் பலர் பங்கேற்கின்றனர். சனி தொடர்பான பல்வேறு பிரச்னைகளைக்குப் பரிகாரஸ்தலமாகவும் இந்த பைரவர் கோயில் விளங்குகிறது.

  இக்கோயில் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி- 1 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மேல் 9.15 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், ஜனவரி 29 ஆம் தேதி வியாழக்கிழமை மாலையில் மங்கல இசையுடன் தொடங்குகிறது. 30 ஆம் தேதி மாலை முதல் யாக சாலைப் பூஜைகள் துவங்குகின்றன. பிப்ரவரி -2 முதல் தொடர்ந்து 64 நாள்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ காலபைரவரின் அருளைப் பெறலாம்.

  - ஆர்.வேல்முருகன்.

  படங்கள்: எஸ்.ராஜூ.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai