சுடச்சுட

    
    sozhar

    கும்பகோணம் காரைக்கால் சாலையில் ஆண்டலாம்பேட்டை என்ற ஊரிலிருந்து தெற்கே 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பவுண்டரீகபுரம்! கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள இவ்வூரில் பழைமை வாய்ந்த சோமநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

    கிழக்கு நோக்கிய இத்திருக்கோயில், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடன் விளங்குகிறது.

    மகா மண்டபத்தை ஒட்டி, தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்மன் ஜடாமகுடம் தரித்து, அழகுற எழுந்தருளியுள்ளார். அம்மன் சந்நிதி கருவறை விமானத்தில் செடிகள் வளர்ந்து இடியும் நிலையில் காணப்படுகிறது.

    கோயிலின் நுழைவு வாயிலின் வலப்புறம் அதிகார நந்தியும் இடப்புறம் சிவபெருமான் அர்ச்சுனனுக்கு பாசுபதம் வழங்கும் கதையை நினைவூட்டும் வகையில் கிராதார்ஜுன வடிவையும் தேவகோட்டத்தில் காணலாம். கங்கை கொண்ட சோழபுரம் போன்று சண்டேசுவர அனுக்கிரக மூர்த்தி சிற்பமும் ஒரு தேவக்கோட்டத்தில் காணப்படுகிறது. மேலும் கோட்டத்தில் காணப்படும் சிற்பங்களில் பல உடைந்தும் காணப்படுகின்றன.

    இக்கோயில் பிற்கால சோழர் காலத்தை சேர்ந்ததாக விளங்குகிறது. முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்ததாக கொள்ளலாம். சுங்கம் தவிர்த்த சோழன், சோழன் திரிபுவனசக்ரவர்த்தி என்றெல்லாம் சிறப்புப்பெயர் பெற்றவன் குலோத்துங்கன்.

    கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். கருவறைச் சுற்றில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.

    இவ்வூர், தற்போது "பவுண்டரீகபுரம்' என்று அழைக்கப்பட்டாலும் இவ்வூருக்கு "ஏனாதி மங்கலம்' என்ற பெயரும் உண்டு. கோயிலின் மகாமண்டபம் போன்றவற்றில் மரஞ்செடி கொடிகள் வளர்ந்து, மகாமண்டபத்தூண்கள் சாய்ந்து கிடக்கின்றன.

    கலையழகு மிக்க சிற்பங்களுடன் காணப்படும் இந்த சோழர்கால கோயிலை புணரமைத்து திருப்பணி செய்யவேண்டும் என்பதே ஆன்மிக அன்பர்களின் விருப்பமாகும்.

    - கி. ஸ்ரீதரன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai