Enable Javscript for better performance
வேறுபடினும் சோறிடு- Dinamani

சுடச்சுட

  

  உலகில் செல்வரும் வறியவரும் உண்டு. செல்வரிடம் உள்ள செல்வம் செழுங்கிளை தாங்குவதற்கு மட்டுமல்ல, அல்லலுறும் அறியாதோருக்கும் வறியவருக்கும் வாரி வழங்கி ஈவதற்கே. ஈதலில் இணையற்றது பசித்தோருக்குப் புசிக்க கொடுப்பதே. உண்ட வயிறு நிரம்பி உள்ளம் உவந்து விண்டுரைக்கும் நன்றி நன்மைகளை நல்கும். வாடிய பயிரைக் கண்டு வாடுவதுபோல் பசியால் பரிதவிக்கும் ஏழைகளைப் பாசத்தோடு அழைத்து நேசத்தோடு உணவு பரிமாறி உண்ண வைப்பது மனித நேயத்தின் மகத்தான வெளிப்பாடு. இகத்தில் ஈவோருக்கு உணவு ஈந்துவப்பது பரத்தில் பரமனான அல்லாஹ்வின் பேரருளைப் பெற்று தரும்.

  ""தனக்கு பிரியமான உணவையும் தன் தேவையை தவிர்த்து பிறரைப் போசிக்க ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் அளிப்பவர் அல்லாஹ்விற்குப் பிரியமானவர்'' என்று எழில்மறை குர்ஆனின் 76 -8 ஆவது வசனம் அறிவிக்கிறது.

  ஒரு வீட்டில் அந்த வீட்டிலுள்ளவர்களுக்காக சமைக்கப்படும் உணவு திடீர் விருந்தாளிகளுக்கு அளிக்கப்படுவது ஆங்காங்கே நடைபெறும் நிகழ்ச்சி. விருந்தினர் தெரிந்தவராகவும் இருக்கலாம்; தெரியாதவராகவும் இருக்கலாம்.

  இப்ராஹீம் நபி அவர்களுக்கு விருந்தினரைக் கண்ணியப்படுத்துமாறு புண்ணிய குர்ஆனின் 51- 24 ஆவது வசனத்தில் அல்லாஹ் கட்டளையிட்டான். இவ்வசனத்தின்படி இப்ராஹீம் நபி விருந்தினருக்கு விருந்தை அவர்களே பரிமாறினார்கள்.

  இப்ராஹீம் நபி வருவிருந்து எதிர்பார்த்து காத்திருந்து விருந்தினர் வந்த பின்னரே அவருடன் அமர்ந்து உணவு உண்பார். ஒருநாள் விருந்தினர் வீட்டிற்கே வராததால் விருந்தினரைத் தேடி நெடுந்தொலைவு நடந்து சென்றார். ஒரு கிழவரைச் சந்தித்து அவருடன் விருந்துண்ண அழைத்து வந்தார். வந்தவர் ஓரிறை கொள்கையை ஏற்காதவர் என்பது அறிந்ததும் அவருக்கு விருந்து அளிக்காமல் விரட்டி விட்டார். வந்த விருந்தாளி ஏமாற்றத்துடன் திரும்பினார்.

  இப்ராஹீம் நபிக்கு அல்லாஹ்வின் அசரீரி வந்தது. ""எழுபது ஆண்டுகளாக என்னை ஏற்காது நிராகரித்த போதிலும் அவருக்கு ஆகாரம் அளித்து அருள் புரிந்தேன். ஆனால் இன்று ஒரு வேளை உணவை எதிர்பார்த்து உங்களிடம் வந்தவரை உணவளிக்காது விரட்டி விட்டீர்களே''

  இந்த அசரீரியை கேட்டதும் அதிர்ந்த இப்ராஹீம் நபி முதிர்ந்த வயதிலும் விரட்டிய விருந்தாளியைத் தேடி விரைந்து ஓடினார். அம்முதியவரைக் கண்டுபிடித்து காரணத்தை விண்டுரைத்து விரட்டியதற்கு மன்னிப்பு கேட்டு மீண்டும் அழைத்து வந்தார். அவருடன் அமர்ந்து உணவு உண்டார். பசியாளியின் கொள்கை மாறுபடினும் வேறுபடினும் சோறு போட்டு பசி போக்க மறுக்க கூடாது.

  ஒருநாள் யாக்கூப் நபி ஓர் ஆட்டை அறுத்து சமைத்து அவரின் மக்களுடன் அமர்ந்து உணவு உண்டார். அவர்களின் வீட்டு வாயிலில் ஒட்டிய வயிறுடன் வந்து நின்றவர் ஐயமிட்டுண்ணுமாறு இரந்தார். அவரின் குரலைக் கேளாத யாக்கூப் நபி அவர்களின் அன்பு மகன் யூசுப் உண்பதிலே முழு கவனத்தையும் செலுத்தினார். இரந்தவர் இரைந்தும் கேட்டார்; விரைந்து ஈயுமாறு விழைந்தும் கேட்டார்; குழைந்தும் கேட்டார். இரைஞ்சலைச் செவியுறாத யாக்கூப் நபி அமர்ந்திருந்த அருமை மகன்களையும் வந்தவருக்கு உணவு கொடுத்து உதவுமாறு கூறவில்லை.

  கால் கடுக்க நின்று கெஞ்சி கதறி கேட்டும் கிஞ்சிற்றும் கவனத்தைத் திருப்பாது விருப்பமான மகன் யூசுப் உண்ணுவதையே உற்று நோக்கி உவகையுற்ற யாக்கூப் நபியை ""என் குடல் குமுறுவது போல் அல்லாஹ் உங்களையும் குமுற வைப்பான்'' என்று சபித்துசென்றார் யாசகர். அப்பொழுதுதான் கோபத்தின் சாபத்தைக் கேட்ட யாக்கூப் நபி அலறி துடித்து பதறி எழுந்து யாசித்தவருக்கு உணவளிக்காமல் இருந்த மக்களை கண்டித்தார். உங்கள் உத்தரவின்றி நாங்கள் எப்படி உணவு அளிக்க முடியும் என்று மற்ற மகன்கள் தந்தையை குற்றம் சாட்டினர். இந்தச்சாபத்தின் விளைவாய் யாக்கூப் நபி அவரின் பிரிய மகன் யூசுவைப் பிரிந்து பல ஆண்டுகள் வருந்தினார்.

  நபிகளின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள், உலகம் உள்ளளவும் உலகில் வாழ்வோர் உணர்ந்து திருந்தி தெளிவு பெற்று ஒளிவு மறைவின்றி இறைவனின் கட்டளையை திட்டமிட்டு செயல்படுத்தி செம்மையாய் வாழ்வதற்கே.

  ""அல்லாஹ் உங்களுக்கு ஆதாரமாக அளித்துள்ள உங்கள் முதல்களை (நல்வழியில் செலவு செய்யும் ஆற்றலற்ற) வீண் செலவு செய்யும் வீணர்களுக்குக் கொடுக்காதீர்கள். ஆனால் அவர்களுக்கு அவற்றிலிருந்து உணவளியுங்கள்'' என்ற குர்ஆனின் 4-5 ஆவது வசனம் தகுதியற்றோருக்கு பிற பொருளை மறுப்பினும் அவரின் பசிபோக்க தயங்க கூடாது என்று கூறுகிறது.

  ஏழைகளுக்கு உணவளிக்க வசதியற்றோர் வசதியுடையோரை வறியோருக்கு உணவளிக்க தூண்டுமாறு தூயமறை குர்ஆனின் 69-34, 89-18, 107-3 ஆவது வசனங்கள் கட்டளையிடுகின்றன. தன்னலமின்றி பொது பணியில் தன்னை ஈடுபடுத்தி தனக்கென எதுவும் தேடாது, பிறரிடமும் எதுவும் கேட்காதிருப்போரைத் தேடி சென்று உணவளித்து அவர்களின் தேவையை நிறைவேற்றுமாறு இறைமறை குர்ஆனின் 2-273 ஆவது வசனம் கூறுகிறது. ""உறவிலுள்ள அனாதைகளுக்கும் வறிய ஏழைகளுக்கும் உணவளிப்பது அகபா என்னும் பெரிய நன்மையை நல்கும்'' என்று நவில்கிறது நற்குர்ஆனின் 90 -12 முதல் 16 ஆவது வரையுள்ள வசனங்கள்.

  ""இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானது. நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானது'' என்று பூமான் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை ஜாபார் (ரலி) அறிவிப்பது முஸ்லிம், திர்மிதீ நூற்களில் காணப்படுகிறது.

  அபூ மஸ்வூத் (ரலி) அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை விருந்திற்கழைத்து ஐவருக்கு உணவு தயாரித்தார். ஐவராக வந்த வள்ளல் நபி (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார் ஒருவர். அபூ மஸ்வூத் (ரலி) அவர்களின் அனுமதி பெற்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறுவராக விருந்துண்டனர். அறிவிப்பவர் - அபூமஸ்வூத் (ரலி). நூல் -புகாரி, முஸ்லிம் ,திர்மிதீ.

  உண்ண உணவின்றி உழலும் ஏழைகள் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்கள் எண்ணத்தில் மாறுபட்டு கொள்கையில் வேறுபடினும் வேற்றுமை பாராது சோறிட வேண்டும். அன்னதானம் அளித்து புண்ணியம் தேடி, மனித நேயம் பேணி புனிதராய் வாழ்வோம். பூமான் நபி (ஸல்) அவர்கள் போதித்த நீதி இதுவே.

  - மு. அ. அபுல் அமீன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai