ஒரே பாசுரம் பெற்ற திவ்யதேசம்!

ஆழ்வார் பெருமக்கள் திருமால் குடிகொண்ட சில திருக்கோயில்களைத் தம் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
Published on
Updated on
2 min read

ஆழ்வார் பெருமக்கள் திருமால் குடிகொண்ட சில திருக்கோயில்களைத் தம் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர். அவற்றைத் திவ்யதேசம் என்று வழங்குவது மரபு. அவற்றில் சில திவ்யதேசங்கள் ஒரே ஒரு பாசுரம் பெற்று விளங்குகின்றன. அதுபோன்ற ஒன்றுதான் திருநீரகம் எனும் திவ்யதேசமாகும். இத்திவ்யதேசத்தைத் திருமங்கையாழ்வார் மட்டுமே மங்களாசாசனம் செய்துள்ளார்.

பிள்ளை பெருமாள் ஐயங்கார் தாம் அருளிச் செய்த நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் இத்திவ்யதேசம் பற்றி பாடியிருக்கிறார்.

நீண்ட ஆயுள் பெற்ற மார்க்கண்டேய முனிவர் என்பவர் பலகாலம் பத்திர நதிக்கரையில் தவம் செய்தார். தம்முன் காட்சியளித்த திருமாலிடம் மார்க்கண்டேயர். ""தாங்கள் பிரளய காலத்தில் ஓர் ஆலிலையில் பள்ளிகொண்டு முன்பு அழிந்த உலகங்களை எல்லாம் காட்டிய திருக்கோலத்தை அடியேனுக்குக் காட்டியருள வேண்டும்'' என்று வேண்டினார். பக்தனின் வேண்டுகோளுக்கு இணங்க, எம்பெருமான் ஆலிலைக் கோலத்தைக் காட்டினார்.

பெருமாள் பிரளய நீரில் பள்ளிகொண்ட கோலத்தைக் காட்டினார் அல்லவா? நீரையே இருப்பிடமாக அதாவது அகமாகக் கொண்டதனால் அவர் "நீரகத்தாய்' ஆனார்.

ஆனால் இத்திவ்யதேசம் எங்கு இருந்தது என்று அறியமுடியவில்லை. இன்றும் உற்சவரே மூலவரின் இடத்திலிருந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சி நகரத்தின் உள்ளே உலகளந்த பெருமாள் எழுந்தருளியிருக்கும் "திருஊரகம்' எனும் திவ்யதேசத்தின் உள்ளேயே இந்தத் "திருநீரகம்' திவ்யதேசம் இருக்கிறது. அதாவது அத்திவ்ய

தேசத்தின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் இச்சந்நிதி அமைந்துள்ளது. இங்கு மூலவர் இல்லை, உற்சவரின் திருநாமம் ஜெகதீஸ்வரப் பெருமாள் என்பதாகும். தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார். தாயாரின் திருநாமம் "நிலமங்கைவல்லி' என்பதாகும்.

திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் இத்திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அவர் திருநீர்மலையில் நீர்வண்ணரூபனாக பெருமாளைச் சேவித்தார். அதன்பின்பு இங்குதான் "நீரகத்தாய்.' என்று மங்களாசாசனம் செய்கிறார். இது திருநெடுந்தாண்டகத்தின் 8 ஆம் பாசுரம்,

நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய்! ஒண்துறைநீர் வெஃகா வுள்ளாய்!

உள்ளுவா ருள்ளத்தாய் உலக மேத்தும்

காரகத்தாய்! கார்வானத் துள்ளாய் கள்வா!

காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய்! பேராதென நெஞ்சி னுள்ளாய்!

பெருமாளுன் திருவடியே பேணி னேனே

"நீரகத்தில் எழுந்தருளி இருப்பவனே! உயர்ந்த திருமலையின் சிகரத்தில் நின்றவனே! நிலாத்திங்கள்துண்டம் எனும் திவ்யதேசத்தில் குடிகொண்டவனே! அழகு பொருந்திய காஞ்சிபுரத்தில் திருஊரகத்தில் நின்றவனே! அழகிய குளக்கரையில் திருவெஃகாவில் எழுந்தருளி இருப்பவனே! உன்னை நினைத்துத் துதிப்பவர்கள் நெஞ்சில் நிலைத்திருப்பவனே! திருக்காரகம் மற்றும் கார்வானம் எனும் திவ்யதேசங்களில் எழுந்தருளி இருப்பவனே! அடியவர்க்குன் திருமேனியைக் காட்டாமல் ஒளிந்திருக்கும் கள்வனே! காவிரியின் தென்கரையில் திருப்பேரையில் காட்சியளிப்பவனே! என் நெஞ்சில் நீங்காது காட்சியளிப்பவனே! உன் திருவடிகளையே நான் காப்பாக என்றும் நினைத்திருப்பவனே!'' என்று இப்பாசுரத்தில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார்.

காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் (திருவூரகம்) ஆலயத்தின் உள்ளேயே திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வானம் ஆகிய சந்நிதிகளும் உள்ளன. இவை வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக இருந்தனவா? அல்லது திருஊரகத்தின் உள்ளேயே இருந்தனவா? இச்சந்நிதிகள் எக்காலத்தில் இங்கு இடம் பெற்றன என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆலிலையில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமானை இத்திவ்யதேசத்தில் கண்டு வணங்கி இன்புறுவோம்.

- வளவ. துரையன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com