
பல நூற்றாண்டுகளாக சீரோடும் சிறப்போடும் வழிபாடுகளும், திருவிழாக்களும் கண்ட பல ஆலயங்கள் காலப்போக்கில் பெரிய ஆலயங்கள் தவிர்த்து, எண்ணற்ற சிறிய கோயில்கள் சிதிலமடைந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பக்தர்கள் மனமுவந்தால் எண்ணற்ற சிதிலமான ஆலயங்கள் பலவும் மீண்டும் பொலிவுறும்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பூதூர் வட்டம், மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் எல்லைக்கருகே கொழுமணிவாக்கம் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழைமையான அருள்மிகு சிவகாமவல்லி உடனாய ஸ்ரீபாலீஸ்வரர் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோயில் சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து 8 கி.மீ. தூரத்திலும், சென்னை, போரூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
தேவதச்சன் (சிற்பி) என்ற விஸ்வகர்மாவால் பூஜிக்கப்பட்ட தலம் இது. ராமர் காலத்தில் சேது சமுத்திரத்தில் இலங்கைவரை மிதக்கும் கற்களால் பாலம் அமைத்த புராண காலத்து கட்டிடக்கலை வல்லுநர்களில் போற்றத்தக்க நளன் மற்றும் நீலன் ஆகியோர் ஆராதித்தது இத்தல ஈசனையே. இப்படிப் பல சிறப்புகள் கொண்ட இச்சிவாலயம், பழுதகற்றி குடமுழுக்கு காண காத்திருக்கிறது.
கொழுமணியில் கருவறை நிறைந்த கண்மணியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் பாலீஸ்வரர்! கொழு
மணிவாக்கம் பாலீஸ்வரரை அண்டிவருவோருக்கு சொத்து சம்பந்தமான அனைத்து வில்லங்கமும் தீரும். கட்டடங்கள் கட்டி பாதியில் நின்றுள்ள நிலை, கட்டடம் கட்ட முடியாமல் தடைபட்டுள்ள நிலை என அனைத்துப் பிரச்னைகளும் விலகும்.
இவ்வாலயத்தின் தலவிருட்சம் அத்திமரம். தீர்த்தம்- சர்வமங்கள தீர்த்தமாகும். இந்தத் திருக்குளத்தில் நீராடினால் சர்வ மங்களங்களும் கிடைக்கும். திருமண தோஷங்கள், சரும நோய்கள் தீரும் என்பது ஐதீகம்!
கிழக்கு நோக்கிய வாயிலை அடுத்து பலி பீடம், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன. நந்தி மண்டபத்திலிருந்து சிறு துவாரம் வழியே இறைவன் ஸ்ரீ பாலீஸ்வரர் தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.
ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம், அந்தராளம், கருவறை என்ற அமைப்பில் ஆலயம் அமைந்துள்ளது. மூலவர் கருவறையில் லிங்கத்திருமேனியுடன் வீற்றிருக்கிறார். சிறிய நந்தி மூலவரை நோக்கி அமைந்துள்ளார். மகாமண்டபத்தில் அம்பிகை சிவகாமவல்லி தெற்கு நோக்கி தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.
மகாமண்டபத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் நால்வர் மற்றும் சேக்கிழார் பெருமான் நின்ற கோலத்திலும் காட்சியளிக்கின்றனர். மேலும் இம் மண்டபத்திலேயே வடக்கு நோக்கிய மேடையில் காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி வீற்றிருந்து அருளுகின்றனர். அருகிலேயே ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் கூட்டுகின்றார். வெளிச்சுற்றில் கன்னிமூல கணபதியும் சண்டிகேஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளன. அதோடு சூரியன், பைரவர் ஆகியோர் தனி சந்நிதி கொண்டு விளங்குகின்றனர்.
இவ்வாலயத்தின் குடமுழுக்கு நடைபெற்று 100 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டபடியால். ஆலயம் பழுதடைந்த நிலையிலும்கூட, மாதமிருமுறை பிரதோஷ வழிபாடு, விநாயக சதுர்த்தி விழா, கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, பங்குனி உத்திர விழா, மகாசிவராத்திரி விழா நான்கு கால பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. தற்போது கிராம மக்கள் ஒன்றுகூடி புணருத்தாரணம் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பூவிருந்தவல்லியிலிருந்து மாங்காடு வழியாக தாம்பரம் செல்லும் பேருந்துகளில் கொழுமணிவாக்கம் சென்றடையலாம். பிரதான சாலையிலிருந்து 1/2 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும்.
தொடர்புக்கு: 89396 14151 / 98842 90930.
- க. கிருஷ்ணகுமார்