
எனது தொண்டனுக்கு நடக்கும் திருமணம் சிறப்பாகக் கருதப்பட்டு பேசப்பட வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய திருகல்யாண உற்சவத்தை தவிர்த்திருப்பான் போலும் அந்த இறைவன்! ஆம் தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு திருத்தலத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போதோ அல்லது வேறு எந்த விழாவிலோ இத்தல இறைவனுக்கும், இறைவிக்கும் பிற தலங்களில் நடப்பது போல் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவதில்லை என்பதும், மாறாக பங்குனியில் நடைபெறும் நந்திதேவர் திருக்கல்யாணமே பெரிதுபடுத்திக் கொண்டாடப்படுகிறது என்பதும் ஆச்சரியப்படத்தக்க ஒரு தகவலாகும். அந்தச் சிறப்பினை புராண வரலாறு மூலம் தெரிந்து கொள்வோம்.
"சிலாத' முனிவர் என்ற ஒரு முனிவர் இருந்தார். சிவனடியார் ஒருவருக்கு அன்னம் இடுகையில் அதில் கல் ஒன்று இருந்ததால் சிவ அபசாரத்திற்கு ஆளான அவர், அது நிவர்த்திவேண்டி பெரிதாக வளர்ந்த அந்த கல்லை சிறு துகள்களாக்கி உண்டதால் சிலாத முனிவர் என்று அழைக்கப்பட்டார். சிலா என்றால் கல் என்று பொருள். அவருக்கு மக்கட்பேறு வாய்க்கவில்லை. ஆதலால் திருவையாற்றுக்கு வந்து ஐயாறப்பனை மனமாரத் தொழுது வேண்டி கடும் தவம் புரிந்தார். இறைவன் திருவாய் மலர்ந்தருளியபடி சிலாத முனிவர் புத்திர காமேட்டி யாகம் செய்து, அந்த யாக பூமியை உழும்பொழுது ஒரு பெட்டகம் தோன்றியது. அதில் நான்கு தோள்களும், மூன்று கால்களும், பிறையும் கொண்ட அதிசய குழந்தை தென்பட, பின்பு அசரீரியாக சொல்லியபடி பெட்டியை மூடித் திறக்க, அதில் பழைய உருவம் மறைந்து அழகிய ஆண் குழந்தையை கண்டெடுத்தார். பெற்றோர்கள் அக்குழந்தைக்கு "செப்பேசன்' என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார்கள். ஆனால் செப்பேசனுக்கு ஆயுள் 16 வயதுதான் என்பது விதி.
செப்பேசர் தனது 14 வயதுக்குள் சகல கலை, வேதாகமங்கள், புராண சாத்திரங்களில் வல்லவர் ஆனார். தன்னுடைய ஆயுள் எல்லை அறிந்து அதன் காரணமாக பெற்றோரின் மன வருத்தத்தையும் கண்ட செப்பேசர், ஐயாறப்பன் ஆலயத்தை அடைந்து இறைவனை மனதார வழிபட்டு அயனரி தீர்த்தம் என்று சொல்லப்படும் சூரிய புஷ்கரணியில் காலின் மீது கால் ஊன்றி கடும் தவம் செய்தார். அவருடைய அருமை திருமேனியை நீரில் வாழும் பாம்பு, மீன் முதலியவைகள் அரித்துத் தின்றன. பல நாட்கள் ஆகியும் அவர் நீரில் இருந்து வெளி வராததால் பெற்றோரும், உற்றாரும் கண் கலங்கினர்.
செப்பேசரின் உறுதியான வைராக்கியத்தையும், அவரது தவத்திற்கும், அன்பிற்கும் மெச்சி இறைவன் காட்சிக் கொடுத்து அருளினார். செப்பேசரர் விரும்பியபடி, நாம் உய்வதற்காக நிலைத்த பதினாறு பெயர்களை அருளினார். மேலும், செப்பேசரது ஏற்புடம்பை கண்டு அவ்வுடம்பை நலமுறச் செய்தல் வேண்டும் என திருவுள்ளம் கொண்டு, கங்கை நீர், கமலத்தோன் (பிரமன்) கமண்டலநீர், உமையம்மை கொங்கை நீர் (பால்), கொண்டல் (மேக) நீர், குணநந்தி வாய் நுரை நீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்வித்தார். செப்பேசுவரது உடல் ஆதவனது ஒளிக்கு நிகராக புடம் போட்ட தங்கம் போல் மின்னியது. இறைவனே செய்த இந்த அபிஷேகம் சைவ மரபில் ஆசார்ய அபிஷேகம் என்று சிலாகித்து அழைக்கப்படுகின்றது. சேக்கிழார் பெருமானும் இந்நிகழ்வை,
நங்கள் நாதனாம் நந்தி தவஞ் செய்து பொங்கு நீடருள் எய்திய பொற்பதிகங்கை வேணி மலரக் கனல்மலர் செங்கையாளர் ஐயாறும் திகழ்வது என்று தனது திருமுறைப் பதிகங்களில் அருளிச் செய்துள்ளார். இத்துடன் மட்டுமில்லாமல் சிவபெருமான் செப்பேசருக்கு கயிலையில் சிவகணங்களுக்கு எல்லாம் தலைமை பதவியையும், முதற்றிருவாயிலில் இருந்து (மெய்காப்பாளர்) காக்கும் உரிமையும், சைவ சாரியருள் முதற்குருவாகுந்தன்மையும் அளித்தார். மேலும் தமது மான், மழுவு, செங்கோல் போன்றவையை அளித்து "நந்தி' என்ற தனது திருநாமத்தைக் கொண்டே "நந்திகேஸ்வரர்' எனும் தீட்சா நாமம் அளித்து சாரூப முத்தியையும் அளித்தார்.
சிவபெருமானின் திருவுருவத்தை பெற்றிருப்பது சாரூபம் என அழைக்கப்படும். சிலாத முனிவர் வசிஷ்ட முனிவரின் பெüத்திரியும், வியாக்ரபாத முனிவருடைய புத்திரியும் ஆன சுயம்பிரகாசையம்மையாரை தமது புதல்வனுக்கு திருமணம் செய்வித்தார் என்றும் அதுவும் ஐயாற்றுப்பெருமான் முன்னிலையில் நடத்தினார் என்றும் புராண வரலாறு தெரிவிக்கிறது. மேலும் ஐயாறப்பர் புதுமணத் தம்பதிகளை தானே ஊர்வலமாக சப்தஸ்தான தலங்களுக்கும் அழைத்துச் சென்று அந்தந்தத்தல இறைவன், இறைவி ஆசிகளை பெறுமாறு செய்தாராம்.
சிவபெருமானிடமே உபதேசம் பெற்ற பெருமைக்குரியர் நந்திதேவர் ஆவார். இவரின் உபதேச மரபு நிலவுலகில் சைவ ஆதீனங்கள் பலவற்றை தோற்றுவித்தது. இம்மரபில் வரும் ஆதீனங்களை திருக்கயிலாய பரம்பரை நந்தி மரபு எனும் அடைமொழிகளோடு இணைத்து வழங்கக் காணலாம். அம்
மரபில் சுமார் 18 ஆதீனங்கள் உள்ளன. திருக்கோயில்களில் கோபுர வாயில் மாடத்தில் நந்திதேவர் நின்ற கோலத்தில் மனித முகத்தோடு விளங்குவார். அதிகார நந்தி என அழைக்கப்படும் இவரை வணங்கி அனுமதிப் பெற்ற பின்னரே ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்பது நியதி. காசியில் முக்தி மண்டபம் நாகையில் காரோண மண்டபம் போல் திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நந்திகேசுவரர் ஜபம் செய்த செப்பேச மண்டபம் அமைந்துள்ளது. அங்கு நாம் ஜபம் செய்தால் ஒரு கோடியுருவாக பயனளிக்கும் என்று புராணம் இயம்புகிறது.
நந்திதேவர் அவதாரம் நிகழந்தது ஒரு பங்குனி திருவாதிரை தினத்தன்று திருவையாற்றில் உள்ள அந்தணக்குறிச்சி என்ற இடத்திலாகும். அவரது திருமணம் நடந்தேறியது பங்குனியில் ஒரு புனர்பூசம் நட்சத்திரம் கூடிய நன்னாளாகும். இவ்விரு வைபவங்களும் ஆண்டுதோறும் முறையே திருவையாற்றிலும் திருமழபாடியிலும் சிறப்பாக நினைவூட்டி கொண்டாடப்படுகின்றது.
திருமழபாடியில் நடைபெறும் நந்திகேசுவரர் திருமணத்தைக் காண வரும் மணமாகாத ஆண், பெண்களுக்கு அடுத்தவருட உற்சவத்திற்குள் திருமணப் பிராப்தி கிடைக்கப்பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இக்காரணம் தொட்டே, "நந்தி கல்யாணம், முந்தி கல்யாணம்' என்ற சொல் வழக்கு இப்பகுதியில் கூறப்படுவதுண்டு. லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடும் விழா இது.
தருமையாதீனம் ஸ்ரீலஸ்ரீகுருமகாசந்நிதானம் அவர்களின் அருளாசியுடன், இவ்வாண்டு, மார்ச்- 17 (வியாழன்) திருவையாற்றில் காலை அந்தணர்க்குறிச்சியில் செப்பேசுவர் அவதாரம். மாலை ஐயாறப்பர் ஆலத்தில் பட்டாபிஷேகம் செய்து தீட்சையளித்தல். மார்ச்- 18 (வெள்ளி) காலை ஐயாறப்பர் தர்மசம்வர்த்தனி சகிதமாக நந்திகேசுவரருடன் பல்வேறு தலங்கள் வழியாக திருமழபாடி சென்றடைதல். இரவு திருவையாறு, திருமழபாடி இறைவன், இறைவிகள் முன்பு வைதீகமான முறையில் நந்திகேஸ்வரர் திருமண உற்சவம் நடைபெறும்.
தொடர்புக்கு: முனைவர் குமாரசுவாமி தம்பிரான்- 94431 50332.
- எஸ். வெங்கட்ராமன்