Enable Javscript for better performance
உலகத்தின் பற்று!- Dinamani

சுடச்சுட

    
    jesus

    ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். வியாபார நிமித்தமாக அவர் வெளியூர் சென்று திரும்பிய போது அவருடைய அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவருடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். அத்தனை பிரம்மாண்டமான வீடு இப்போது அவர் கண் முன்னே எரிந்து கொண்டிருக்கிறது.

    தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்பதால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஊரில் உள்ள அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். செல்வந்தரோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தார். ""ஐயோ என் வீடு.. என் வீடு...!'' என்று அலறினார்.

    அப்போது அவரின் மூத்த மகன் ஓடிவந்து, "தந்தையே ஏன் அழுகிறீர்கள், இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை'' என்று கூறினான். இதை கேட்ட செல்வந்தருக்கு அதிக மகிழ்ச்சி. அவரது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது செல்வந்தரும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவராக நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

    அதே வீடு தான், அதே நெருப்பு தான். ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவரிடம் இல்லை.

    சிறிது நேரத்தில், செல்வந்தரின் இரண்டாவது மகன் ஓடி வந்து, "தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே'' என்றான்.

    இதை கேட்ட செல்வந்தர் மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் சோகத்தில் கண்ணீரோடு புலம்ப ஆரம்பித்தார். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவரை வாட்டியது.

    சற்ற நேரத்திற்குப் பின்பு செல்வந்தரின் மூன்றாவது மகன் ஓடி வந்து, ""தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதர் மிகவும் நல்லவர். இந்த வீட்டை வாங்க அவர் முடிவு செய்தபோது, வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம்'' என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினார் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.

    இதை கேட்ட செல்வந்தர் மீண்டும் மிகுந்த சந்தோஷம் அடைந்தார். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தார். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவராக நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.

    இந்த சம்பவத்தில், எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. ஆனால், இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.

    இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.

    பரிசுத்த வேதாகமத்தில் பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் என்று 2 கொரிந்தியர் 5:1-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆகவே, அழிந்து போகிற உலகப் பொருள்களுக்காக நாம் கவலைப்படாமல், இறைவனுக்கு பயந்து வாழும்போது அழிந்துபோகாத நித்திய வீட்டை பரலோகத்தில் தேவன் நமக்குத் தருவார்.

    எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவருக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும். அந்த எண்ணமே பற்றற்ற நிலை.

    - ஒய். டேவிட் ராஜா

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai