Enable Javscript for better performance
குருவே தெய்வம்!- Dinamani

சுடச்சுட

    

    திருமாலின் அவதாரச் சிறப்பினையும் அருள்திறத்தினையும் அமுதத் தமிழில் அழகுறப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். மதுரகவியாழ்வார் எந்த திவ்யதேசப் பெருமான் மீதும் பாடல் இயற்றவில்லை. இவர் பாடிய பாசுரங்கள் அனைத்தும் இவரது குரு நம்மாழ்வார் மீது இயற்றப்பட்டவை. செவிக்கினிய செஞ்சொற்கவி பாட வல்லவர். ஆகையால் இவர் மதுரகவி எனப் பெயர் பெற்றார்.

    திருமால் பக்தியிலும் யோகப் பயிற்சியிலும் மேம்பட்ட இவ்வாழ்வார் வடநாட்டு திவ்ய தேசங்களுக்கு யாத்திரையாகச் சென்ற தருணத்தில் அயோத்தியில் வாசம் புரிந்து வந்தபோது ஓர் நாள் இரவு திருக்கோளூர் பெருமானைத் தென்திசை நோக்கி வணங்கினார். அப்போது ஒரு பேரொளியைக் கண்டு அது எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அதனைப் பின்பற்றி தென்திசை நோக்கிப் பயணமானார். முடிவில் திருக்கோளூருக்கு அருகில் உள்ள திருக்குருகூர் வந்தடைந்தார். அங்கு ஆதிநாதர் திருக்கோயில் முன்பு புளியமரப்பொந்தில் யோகத்தில் அமர்ந்த நம்மாழ்வாரைக் கண்டார். மதுரகவியார் கேட்ட வினாவுக்குச் சரியான பதிலைக் கூறிய நம்மாழ்வாரையே தனது ஆச்சாரியராகக் கொண்டார். மதுரகவிகளைத் தம் சீடராக ஏற்று நான்கு வேதங்களின் சாரமான பிரபந்தங்கள் நான்கினை அருளினார் நம்மாழ்வார். தம் ஆச்சாரியரான நம்மாழ்வாரைப் பற்றி மதுரகவி ஆழ்வார் பாடிய பத்துப் பாசுரங்கள் "கண்ணிநுண்சிறுத்தாம்பு' என்னும் சிறு பிரபந்தம் ஆகும். நம்மாழ்வார் நாராயணன் திருவடி சேர்ந்த பிறகு அவரது உருவச்சிலையை மதுரகவியாழ்வார் திருக்குருகூரில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தும், விழாக்கள் எடுத்தும் சிறப்பித்தார்.

    மதுரகவியாழ்வாரின் அவதார நன்னாள் ஏப்ரல் 21 ஆம் தேதி (சித்திரையில் சித்திரை) அவரது அவதாரத் தலமான திருக்கோளூரில் (நவதிருப்பதி) 10 நாட்களும், இதர வைணவத் தலங்களில் ஒரு நாளிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    - எம்.என். ஸ்ரீநிவாஸன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai