Enable Javscript for better performance
சித்திகளை அருளும் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர்!- Dinamani

சுடச்சுட

  
  akora-combine

  காசிக்குச் சமமானதாகக் கருதப்படும் ஆறு தலங்களுள் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காடும் ஒன்றாகும். சமயக்குரவர்கள் நால்வராலும் பாடப்பெற்ற சிறப்புமிக்க திருத்தலமாகும். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் ஒன்றாகிய ஸ்ரீ அகோர மூர்த்தியை கண்டு தரிசிக்கலாம். தில்லையில் ஆடுவதற்கு முன் ஆடல்வல்லான் திருவெண்காட்டில் ஆடியதால் இதனை, "ஆதிசிதம்பரம்' என்றழைப்பர். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். அதுமட்டுமின்றி நவக்கிரக தலங்களில் புதன் தலமாகவும் விளங்குகிறது.

  இத்திருத்தலத்தில் இந்திரன், ஐராவதம், சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளனர். பதினோராம் திருமுறை பாடிய திருவெண்காடு பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலம் இதுவாகும். பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட "சிவஞான போதம்' என்னும் சைவ சித்தாந்த முழுமுதல் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் அவதரித்த தலமும் இதுவே. இத்தலத்தில் செய்யும் ஒரு தர்மம், கோடிக்கு இணையாவதால் "தருமகோடி' என்றும் சித்திகளை அருளுவதால் "சித்திநகர்' என்றும் போற்றப்படுகிறது.

  சுவேதாரண்யேஸ்வரர்: திருவெண்காடர், திருவெண்காடு தேவர், திருவெண்காடுடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான் என்றழைக்கப்படும் இவரே இத்தலத்தின் நாயகன். லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார்.

  பிரம்மவித்தியாம்பிகை: திருவெண்காடரின் சக்தியாகப் பிரம்மவித்தியாம்பாள் என்னும் பெரியநாயகி எழுந்தருளியுள்ளார். மாதங்கி, திருவெண்காடு தேவர் நம்பிராட்டி, வேயன தோளிநாச்சியார் என்கிற பெயர்கள் இத்தல அம்பிக்கைக்கு உண்டு.

  திருநாங்கூரில் மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் திருவெண்காடரை நோக்கித் தவமிருந்து அவரைத் தன் கணவராகப் பெற்றாள் என்று பத்மபுராணம் கூறும். பிரம்மனுக்கு வித்தையை கற்பித்ததால் பிரம்மவித்தியாம்பிகையானாள். நான்கு கரங்களுடைய நாயகி இவர். இடது மேற்கரத்தில் தாமரைப்பூவும் வலது மேற்கரத்தில் அக்கமாலையும் வலது கீழ்கரம் அபயக்கரமாகவும் திருவடிகளைக் காட்டும் இடது கீழ்க்கரம், தம் திருவடிகளைத் தொழுது தெய்வவடிவு பெறுமாறு அருளுகிறது.

  நடராஜர்: இத்தலம், ஆதிசிதம்பரம் ஆதலால் இங்கும் சிதம்பரம் போன்றே நடராஜர் சபை அமைந்துள்ளது. ஸ்படிக லிங்கமும் ரகசியமும் இங்கும் உள்ளன. தினந்தோறும் ஸ்படிகலிங்கத்திற்கு நான்கு அபிஷேகங்களும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிஷேகங்களும் பஞ்சகிருத்திய பூஜைகளும் நடைபெறுகின்றன.

  அகோரமூர்த்தி: இத்தலத்தின் தனிச்சிறப்புக்குரியவர் அகோர சிவன். இவர் மருத்துவாசுரனை அடக்குவதற்கு சிவபெருமானின் அகோரமுகத்தினின்று தோன்றியவர். சிவனின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோரமூர்த்தி 43 ஆவது மூர்த்தியாவார்.

  அகோரமூர்த்தி கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டைவிரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டு கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளார். சிவந்த நிற ஆடைகளை அணிந்துள்ளார். இவர் தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் வெற்றிக்கண் நெருப்பினைக் கக்க, கோரைப்பற்களுடன் 14 பாம்புகளை திருமேனியில் அணிந்து, மணிமாலை அணி செய்ய கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.

  மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு தோன்றினார். ஆண்டுதோறும் இதே காலத்தில் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் திருவிழா நடைபெறுகின்றது.

  ஒவ்வொரு ஞாயிறு இரவிலும் அகோரபூஜை நடைபெறுகின்றது.

  புதன்: புதபகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, சோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றைத் தரவல்லவர். இவருக்குத் திருவெண்காடு தலத்தில் தனிக்கோயில் உள்ளது.

  வித்தையை தரும் இவரது சந்நிதி பிரம்மவித்தியாம்பிகை சந்நிதியின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. மேலும் வித்தைக்கு அதிபதியான பிரம்ம சமாதியும் புதன் சந்நிதிக்கு தென்பால் அமைந்துள்ளது. புதனின் தந்தையான சந்திரனின் கோயிலும் சந்திர தீர்த்தமும் புதன் சந்நிதிக்கு எதிரே அமைந்துள்ளது. புதனை வழிபடுவதால் கல்வி முதலான பேறுகளைப் பெறலாம். இவரை வழிபடுவதால் குழந்தைப்பேறும் கிட்டும்.

  முக்குள நயினார்கள் என்னும் சைவ மரபினர் தலையில் விளக்கைச் சுமந்துகொண்டு முக்குளம் மூழ்கி எழுந்தபின்னும் அவ்விளக்குகள் அணையாது இருந்தனவாம். ஆதலால் இம்மரபினர் பல்லாண்டு காலமாக ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து வழிவழியாக வழிபாடு செய்து வருகின்றனர்.

  இத்திருக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்விக்கப்பெற்று, இம்மாதத்தில் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. திருவெண்காடு செல்ல, சீர்காழி மற்றும் மயிலாடுதுறை வழியாகச் சென்று வரலாம்.

  - மன்னை என். இராஜப்பா

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai