Enable Javscript for better performance
சித்திரை நிலவே வருக!- Dinamani

சுடச்சுட

  
  KAMATCHI-A-tile

  வருடத்தில் வரும் எல்லா பெளர்ணமி தினங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு. இந்த எல்லா பெளர்ணமிகளிலும் சிறப்பாகக் கூறப்படுவது சித்திரையில் வரும் சித்ரா பெளர்ணமியே. சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பெளர்ணமி கூடிய அந்த தினத்தில் சந்திரனிலிருந்து அதிக அளவில் அமுதக் கிரணங்கள் பெருகுகின்றன. அந்த ஒளி நம் மேனியில் பட்டால் உஷ்ணம் தணியும்; ஆயுள் அதிகரிக்கும். தேஜஸ் கூடும்; தோல் நோய்கள் வராது; அதற்காகவே அந்நாளில் நிலாச் சாப்பாடு, நிலாவில் விளையாட்டு என்றெல்லாம் ஏற்படுத்தியிருந்தனர்.

  அம்பிகை வழிபாட்டுக்கு பெüர்ணமி தினம் சிறப்பானதாகும். அன்று அம்பிகையை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பெüர்ணமி அன்று விரதம் இருந்து வழிபட்டால் சகல செüபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. பெüர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்க வேண்டிய நாள் சித்ரா பெüர்ணமி தான்.

  சித்திரை மாத பெüர்ணமி அன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சாற்றி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவித்து, அம்பிகையின் பாடல்களைப் பாடி, தோத்திரங்களைச் சொல்லி, மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் படைத்து, தூப, தீபம் ஆராதனைகள் செய்து, நமஸ்கரித்து, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பவர்கள் இரவு பெüர்ணமி நிலவைப் பார்த்து வழிபட்ட பின்தான் உணவு அருந்துவர். இவ்விரதம் நமக்கு எப்பொழுதும் உணவையும், உறைவிடத்தையும் செல்வத்தையும் வழங்கும்.

  பெளர்ணமி பூஜையை பொதுவாக அனைவரும் செய்யலாம். திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணம் ஆக வேண்டியவர்கள் திருமணப்பேறு பெறவும் குழந்தை பேறு பெறவும் இவ்விரதத்ததைக் கடைபிடித்து அம்பிகையின் அருள் பெறுவர்.

  அன்று மகாமேரு, ஸ்ரீ சக்ரம் உள்ள எல்லா திருக்கோயில்களிலும் நவாவர்ண பூஜை விமரிசையாக நடைபெறும். அம்பிகைக்குப் பால் குடங்கள் எடுத்து அபிஷேகம் செய்வர்.

  சித்ரா பெளர்ணமியன்று ஈசனுக்கு வெண் சோற்றில் நெய் கலந்து படைத்தால் நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருகும். இன்று கடலில் நீராடுவதால் கர்ம வினைகள் நீங்கும் என்பது சித்தர்களின் திண்ணமான வாக்கு.

  சித்ரா பெளர்ணமி நாளில்தான் சொக்கநாதர்- மீனாட்சி திருக்கல்யாணம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும். சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் செய்யும் வைபவம் நடைபெறுகிறது. குற்றாலத்திலுள்ள செண்பகாதேவிக்கு சித்ரா பெளர்ணமி அன்று சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும். அப்போது சந்தன வாசனையோடு கூடிய மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

  திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற, சித்தர்கள் பலர் வசிப்பதாகக் கூறப்படும் கஞ்சன் மலையில் சித்திரைப் பெüர்ணமியன்று அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும். இந்த மலையில் வசிக்கும் சித்தர்கள் மலைக்கோயில் அருகிலுள்ள நீரூற்றிலும், மலைமேலுள்ள சித்தேஸ்வரர் கோயிலுக்கு அருகிலுள்ள தீர்த்தங்களிலும் நீராடி, வான்வழியாக கஞ்ச மலையை நட்சத்திரங்கள் போன்று வலம்வருவதாக கூறப்படுகிறது. இரவு பதினொரு மணியிலிருந்து விடியற்காலை நான்கு மணி வரை மெதுவாக நகர்ந்துகொண்டே வந்து பின்னர் மறைந்து விடுகிறது இந்த நட்சத்திர ஒளி.

  சித்திரகுப்தன், சித்திரை மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்றுதான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பாளை மணந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று சித்ரகுப்தனுக்கு பூஜை செய்துவது சிறப்பு.

  காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தன் கோயிலில் காலையில் மகா அபிஷேகமும், மாலையில் திருமணமும் நடைபெறுகிறது. அன்று இந்திரன் காஞ்சிபுரம் வந்து சித்ரகுப்தனை பூஜிப்பதாக ஐதீகம். சித்ரகுப்தனை தரிசித்தால் கேது உபாதையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

  அம்பிகையின் ஆலயங்களில் குளிர்ச்சி செய்வதன் மூலம் அம்பிகையின் சீற்றத்தால் தோன்றும் சின்னம்மை போன்றவை ஏற்படாது என்பது ஐதீகம். அதனால் அம்பிகை ஆலயங்களில் குளிர்ச்சி பெரு விழாவாக கொண்டாடப்படுகின்றது.

  சித்ரா பெளர்ணமியன்று திருவண்ணாமலையை நாம் மட்டுமல்ல, தேவர்களும் சித்தர்களும் ஞானிகளும் சூட்சுமமாக வலம் வருகிறார்கள் என்பது ஐதீகம். ராஜபாளையம்-அயன்கொல்லங் கொண்டான் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தில் சித்ரா பெüர்ணமியை ஒட்டி நடக்கும் சக்தி பூஜையில் அலகு பூஜை செய்வர். காஞ்சி வரதராஜபெருமாளை பிரம்மதேவன் பூஜிப்பார். பிரம்மன் வரதராஜருக்கு நிவேதிக்கும் பிரசாதம் கமகமவென மணம் வீசுமாம். உண்ட திருப்தியை வரதனின் வதனத்தில் காணலாம் என்கிறார்கள் பட்டர்கள்.

  தேனி மாவட்டத்தை அடுத்து, தமிழக-கேரள எல்லையில், ஐயாயிரம் அடி உயரமான மலைமீது உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பெüர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அக்கோயில் அன்று ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும்.

  உளுந்தூர்பேட்டைக்கு அருகே கூவாகத்தில் அரவான் கள பலி உற்சவம் திருநங்கைகளால் சித்ரா பெüர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திருநங்கைகள், இந்நாளில் கூவாகத்தில் ஒன்று திரளுவர்.

  காஞ்சிபுரத்திற்கு அருகில் ஐயங்கார் குளம் எனும் திருத்தலத்தில் உள்ள சஞ்சீவிராயர் சுவாமி கோயிலையொட்டி நடவாவிக் கிணறு ஒன்று உள்ளது.

  இந்தக் கிணற்றுக்குள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபம் உள்ளது. இந்தப் பெரிய கிணற்றில் சித்ரா பெளர்ணமி அன்று ஒருநாள் மட்டும் உள்ளிருக்கும் நீரை முழுவதுமாக வெளியேற்றி 16 கால் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாளை எழுந்தருளப் பண்ணுவார்கள்.

  மறுநாள் மாலையில் ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரையும் அந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்வர். இரண்டு நாட்கள் மட்டும் பூமிக்கு அடியில் கிணற்றுக்குள் சுவாமிகளைத் தரிசிக்கலாம். அதன்பின் கிணற்றில் நீர் ஊற்றுப் பெருக்கெடுத்து மண்டபத்தையும் கிணற்றையும் நிரப்பிவிடும்.

  இந்த அபூர்வ காட்சியைத் சுற்றுவட்டாரத்து மக்கள் வந்து தரிசித்து பெருமாளின் திருவருளைப் பெறுகின்றனர்.

  பழங்காலத்தில், சித்ரா பெüர்ணமியன்று ஆற்றங்கரையில் உறல் தோண்டி, அதற்கு திருவுறல் என்று பெயர் சூட்டி, அங்கே இறைவனை வலம் வரச் செய்தார்கள். சித்ரா பெளர்ணமியன்று ஆற்றங்கரைகளுக்கு குடும்பத்தோடு செல்லும் மக்கள், அங்கு உணவு உண்டு மகிழ்வது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

  - என். பாலசுப்ரமணியன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai