Enable Javscript for better performance
நாளும் நற்செயல்கள்- Dinamani

சுடச்சுட

  
  Islamic

  தினாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியில் நற்றோழர்களுடன் அமர்ந்து நல்லுரையாடிய நபி (ஸல்) அவர்கள்,

  1. இன்று நோன்பு நோற்றவர் யார்? 2. இன்று நீங்கள் பசித்திருக்க பிறருக்கு உணவு கொடுத்தவர் யார்? 3. இன்று நோயாளியைத் தேடி சென்று விசாரித்து அவரின் நலம் நாடி இறைவனிடம் இறைஞ்சியவர் யார்? 4. இன்று இறந்தவரின் மையித்து அடக்கத்தில் கலந்து கொண்டவர் யார்? இந்நான்கு செயல்களையும் அன்று செய்த ஒரே நபிதோழர் அபூபக்கர் சித்தீக் (ரலி) பண்பு நபி (ஸல்) அவர்களின் பாராட்டைப் பெற்றார்கள். இந்நற்செயல்களுக்குரிய பரிசு சொர்க்கமே என்று சுந்தர நபி (ஸல்) அவர்கள் சோபனம் கூறினார்கள். இச்செயல்களின் விளைவுகளை விளங்கினால் விழுமிய நபி (ஸல்) அவர்களின் வாழ்த்தின் ஆழத்தை அறியலாம்.

  நோன்பு நோற்பதால் ஏற்படும் அகமிய பயன்கள் அனேகம்; புற பயன்களும் பல உள. அவற்றில் ஒன்று பிறரின் பசியறிந்து பசியின் பரிதவிப்பை உணர்ந்து பசியாளி பசி நீங்க புசிக்க கொடுக்க வேண்டும் என்ற பயிற்சியைப் பசியறியாத செல்வர்களும் பெற பெருந்துணை புரிகிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இரண்டாம் கேள்வி முதற் கேள்வியை ஒட்டியதே.

  நோன்பு நோற்றவர் பசித்திருப்பவர். நோன்பு நோற்றிருந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) இரண்டாவது கேள்விக்கும் உடன்பாட்டு பதிலைச் சொன்னார்கள். ஒரு பயணத்தில் செல்லும்பொழுது தேவைக்கதிமாக வழியுணவு வைத்திருப்பவர் வழியுணவு இல்லாதவருக்கு வழங்க வள்ளல் நபி (ஸல்) அவர்கள் பணித்ததைப் பகர்கிறார் அபூஸயீதுல் குத்ரீ (ரலி) நூல் அபூதாவூத்.

  ஒரு நண்பகலில் காலணி அணியா கால்களுடனும் மேலாடையில்லா உடலுடனும் பசித்தவர்களாக முளர்கபிலாவைச் சேர்ந்த ஒரு கூட்டம் பெருமானார் நபி (ஸல்) அவர்களின் முன் வந்து நின்றது. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களைப் பாங்கு (தொழுகை அழைப்பு) ஒலிக்க பணித்தார்கள். நண்பகல் லுஹர் தொழுகையை தொழுவித்து படிகளில் ஏறி நின்று குர்ஆன் வசனங்களை ஓதி ஸதகா (தர்மம்) செய்ய தூண்டினார்கள். ஒரு அன்சாரி தோழர் எழுந்து சென்று ஒரு பெரிய மூட்டை நிறைய சாப்பிட கொண்டு வந்து கொடுத்தார். நன்மையை துவக்கி வைத்தவருக்கு நன்மையின் பயனோடு துவக்கி வைத்த பயனும் உண்டென்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்தார்கள். மற்றவர்களும் திர்ஹம்களையும் தீனார்களையும் ஆடைகளையும் கொண்டு வந்தனர். வாடி வதங்கி வந்த முளர் கிளையினர் பசி போக புசித்து அனைத்தையும் ஆனந்தமாக அள்ளி சென்றனர். அறிவிப்பவர் -ஜரீர் (ரலி) நூல்- நஸஈ.

  கியாமத் (ஊழி) நாளில் மனிதர்கள் பசித்தவர்களாக தாகித்தவர்களாக எழுப்பப்படும் பொழுது உலகில் படித்தவர்களுக்கு வயிறு நிரம்ப உணவும் தாகித்தவர்களுக்குத் தாகம் தீர நீரும் கொடுத்தவர்களுக்குப் புசிக்க உணவும் பருக நீரும் வழங்கப்படும். அறிவிப்பவர்- உமைர் (ரலி) நூல் -இஹ்யாவுல் உலூமித்தீன்.

  பசித்தவருக்கு உணவு அளிப்பதும் நோயாளிகளை நலம் விசாரிப்பதும் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டிய நல்வழி. நோயாளிகளை நலம் விசாரிக்கவும் இறந்தவரை அடக்க செல்லவும் தோழர்களை ஏவினார்கள் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் என்றுரைப்பவர் பராஃ இப்னு ஆஸிப் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். நலம் விசாரிக்கும்பொழுது நோயாளிகளுக்கு ஆறுதல் ஏற்படுகிறது.

  நோய் தீர அல்லாஹ்வை வேண்டும்பொழுது அல்லாஹ்வின் அருளும் கிட்டுகிறது. மருத்துவ சிகிச்சையில் கிடைக்காத ஆனந்தம் சகோதரத்துவ, நட்புடைய, மனித நேய நலம் விசாரிப்பில் கிடைக்கிறது. நோயாளியின் தலைமாட்டில் அமர்ந்து நோயாளியை வலக்கையால் தடவி நோய் விசாரிக்க விளம்பினார்கள். விழுமிய நபி (ஸல்) அவர்கள் என்றறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம்.

  உங்களின் யாருக்கேனும் மரணம் நெருங்கி விட்டால் இறைவன் ஒருவன் என்ற ஏகத்துவ கலிமாவை நினைவூட்ட நீதர் நபி (ஸல்) அவர்கள் போதித்ததை முஸ்லிம் நூல்களில் காணலாம். இறந்தவருக்காக கூச்சலிட்டு ஒப்பாரி வைத்து அழுவதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தடுத்ததை உம்மு அதிய்யா (ரலி) கூறியது புகாரி முஸ்லிம் நூல்களில் பதிவாகியுள்ளது.

  இறந்தவரைக் குளிப்பாட்டி விரைந்து அடக்கிட ஆவன செய்யவேண்டும். இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வேண்டும். இறந்தவரின் மறுமை நற்பேற்றிற்கு நல்லருள் புரிய இறைவனை இறைஞ்ச வேண்டும். இறந்தவரை அடக்கம் செய்யும்வரை அருகிலிருந்து உதவுவோருக்கு உயர்ந்த நன்மை உண்டு.

  இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியபடி நாளும் நற்செயல்களை செய்து பொற்புடைய அல்லாஹ்வின் அருளைப் பெற்று இம்மை மறுமை இரண்டிலும் நல்வாழ்வு வாழ்வோம்.

  - மு.அ. அபுல் அமீன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai