Enable Javscript for better performance
ஸ்ரீ ராமநவமியில் ராமாயண பாராயணம்!- Dinamani

சுடச்சுட

  
  sriramanavami- copy

  ஒருநாள், தேவரிஷி நாரதர் வால்மீகி முனிவரைச் சந்தித்தார். அப்போது அனைத்து கல்யாண குணங்களும் நிரம்பிய ஸ்ரீ ராமபிரானின் வாழ்க்கையை விரிவாக அவருக்கு கூறினார். நாரதர் விடைபெற்று சென்ற பிறகும் ஸ்ரீ ராமரின் கதையை மனதில் அசை போட்டவாறு இருந்தார். அவரது மனம் மகிழ்ச்சியால் நிரம்பி இருந்தது. அவர் சிந்தனையில் முழுவதுமாக ஸ்ரீ ராமர் நிரம்பி இருந்தார். பிரம்ம தேவரின் வாக்குப்படி, ஸ்ரீ ராமரின் சரித்திரத்தை ராமாயணமாக எழுதி முடித்தார் வால்மீகி.

  ஸ்ரீராமரின் அவதார தினமாகிய ஸ்ரீ ராமநவமி புனித நன்னாளில் ராமாயணம் நமக்கு புகட்டும் உயர்வான நல்ல நீதிகளை நினைவு படுத்துவது சிறப்பான ஒன்றாகும். ராமபிரான் வாழ்க்கைச் சரித்திரத்தைத் திரும்ப திரும்பப் படித்து பாராயணம் செய்வதால் அந்நூல் நமக்குப் புகட்டும் நன்னெறிகள் என்றென்றும் நம் நெஞ்சத்தில் நிலைத்திருந்து நம்மை வழிநடத்திச் செல்லும்.

  சமஸ்கிருத மொழியில் உள்ள வால்மீகி ராமாயணத்தைத்தான் பாராயணம் செய்ய வேண்டும் என்பதில்லை. எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் செய்யுள் அல்லது உரைநடையில் செய்யப்பட்டிருந்தாலும் படிக்கலாம். தவறில்லை; படிக்கும்போது அதாவது, பாராயணம் செய்யும்போது, ஸ்ரீ ராமரின் மீது பக்தி உணர்வு கொண்டு, கதை மற்றும் கருத்துக்களில் ஒன்றிப்போக வேண்டும் என்பது தான் முக்கியம். அப்படி படிப்பதால் ஏற்படும் பலன்கள் ஏராளம்.

  ராமபிரான் ஓர் உதாரண புருஷன். மனிதனாக பிறந்து, "ஒரு சொல், ஒரு வில், ஒரு மனைவி என்று வாழ்ந்தவர். மனிதர்களோடு மனிதனாக வாழ்ந்து அவர்கள் படும் இன்ப- துன்பங்களைத் தானும் அனுபவித்து, எதையும் தாங்கும் இதயத்தோடு, தூயநெறி நின்று வாழ்ந்து மறைந்த ஒரு மனித தெய்வமாகத் திகழ்ந்தவர். அவரது வாழ்க்கைச் சரித்திரமாகிய ராமாயணத்தைப் படிப்பது, அதிலும் அவரது ஜென்ம தினமாகிய "ஸ்ரீ ராமநவமி' நன்னாளில் படிப்பது அவன் வாழ்ந்த பொன்னுலகை நம் கண்முன் நிறுத்தும். அப்போதே முழுவளர்ச்சிப் பெற்றிருந்த சமூகத்தோடு நம்மை ஒட்டி உறவாட வைக்கும். நமது குறை நிறைகளை நமக்கு உணர்த்தி நம்மை புனித வாழ்வு வாழவைக்கும்.

  ஸ்ரீ ராமனுடைய இயல்பு கபடமற்ற தூய பக்திக்கு வயப்படுவதுதான். அவனை நாம் அடைய, நமக்கு அந்தப் பக்தி ஒன்றே போதும். ஜாதி, மதம், நிறம், ஆண்- பெண் என்ற பேதங்கள் எதுவும் தூயபக்திக்குத் தடையாக குறுக்கே வந்து நிற்பதில்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை எளியோர் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி அனைவரையும் சமநோக்கில் காணும் உயர் குணம் கொண்டவரே ஸ்ரீராமன் என்பது அவரது வாழ்க்கையை படித்தறியும்போது நமக்குப் புலனாகும்.

  சமுதாய வேறுபாடுகளைக் கடந்தவர் ராமர்! கல்லாய்க்கிடந்த அகல்யா, ராமரின் ஸ்பரிசத்தால் மீண்டும் உயிர்பெற்றாள். குகனின் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, ""இன்றுடன் நாம் ஐவரானோம்'' என்றுகூறி சகோதரனாக ஏற்றுக்கொண்டார். அவர் அன்று சமுதாய உயர்வு தாழ்வுகளைப் பற்றி கவலைப்படவில்லை. சபரி என்ற பெண், ராமருக்கு தருவதற்காக பழங்களைக் கொண்டு வந்து, அதில் புளிப்பு இல்லாத பழமாக தர வேண்டும் என்று கடித்துப்பார்த்து தந்த இலந்தை பழங்களை வாங்கித் தின்றபோது எந்த பேதங்களையும் அவர் பார்க்கவில்லை.

  ஒருசமயம், ஒழுங்கு முறையை மீறிய குற்றத்திற்காக தன் தம்பி லட்சுமணனையே ராமன் நாடு கடத்தினார்.

  ஜடாயு என்ற பறவையை பணிந்தார். சுக்ரீவக் குரங்குடன் நட்பு கொண்டார். விபீஷணன் என்ற அரக்கர் குலத்தவனை ஆதரித்து அடைக்கலம் தந்தார். இப்படி பல நிகழ்வுகளைக் கூறலாம். ராமபிரான் நம் பாரதத்தின் முதல் சீர்திருத்தவாதி என்று சொன்னால் மிகையாகாது.

  - ஜானகிமணாளன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai